Saturday, March 9, 2019

தமிழக அரசியல் சூழல் - 2018

விடுதலை கண்ட இந்தியாவில், சமூக நீதி தத்துவத்திற்கு அடித்தளம் அமைத்ததும் தமிழ்நாடு தான்
என்பதை வரலாறு பதிவு செய்துள்ளது. நாட்டு விடுதலைக்குப் பிறகு 20 ஆண்டு காலம் தமிழகத்தில் ஆட்சிப்
பொறுப்பிலிருந்த காங்கிரஸ் கட்சி, 1967 ஆம் ஆண்டில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் அண்ணா அவர்கள்
தலைமையில் அமைந்த கூட்டணியால் வீழ்த்தப்பட்டது. அண்ணாவின் மறைவுக்குப் பின்னர் தற்போது
வரை 50 ஆண்டுகளாக தமிழ்நாட்டை இரண்டே கட்சிகள் தான் ஆட்சி செய்து வருகின்றன. திமுகவும்,
அதிமுகவும்  மாறி, மாறி ஆட்சிப் பொறுப்பிற்கு வந்தன. இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத
அளவுக்கு இங்கு இரு துருவ அரசியலே கொடி கட்டி பறக்கிறது. தமிழக மக்களின் வாக்குகளை பெற்று
ஆட்சி செய்த இரு கட்சிகளின் தலைமையும் இந்த மண்ணுக்கும், மக்களுக்கும் ஆற்றிய பணிகள் என்ன
என்று திரும்பி நோக்கினால் வேதனை தான் மிஞ்சுகிறது. தமிழகத்தின் பொருளாதாரத்தில் முக்கிய
பங்காற்றிய வேளாண்மை தொழில் வளர்ச்சி கடந்த 50 ஆண்டுகளில் படிப்படியாக குறைந்து
பூஜ்ஜியத்திற்கும் கீழே போய்விட்டது. வேளாண் தொழிலுக்கு அடுத்த நிலையிலிருந்த நமது பாரம்பரிய
நெசவுத் தொழில் பெரும் வீழ்ச்சி அடைந்து விட்டது.
தமிழகத்தில் அள்ள அள்ளக் குறையாத இயற்கை வளங்கள் ஆட்சியாளர்களால்
சூறையாடப்பட்டன. ஆற்றுப் படுகைகளில் மணல் கொள்ளை அடிக்கப்பட்டு, மலையளவு இரு கட்சிகளும்

பணத்தைக் குவித்துக் கொண்டன. நீர் ஆதாரங்களான ஏரிகள், குளங்கள், வாய்க்கால்கள் மற்றும்
சிற்றோடைகள் புதர் மண்டி, தூர்ந்து போயின. இயற்கை கருணை காட்டும் போதெல்லாம் பெய்யும்
பெருமழை விழலுக்கு இறைத்த நீராயிற்று. குடிக்க தண்ணீர் இன்றியும், விவசாயத்திற்கு போதிய நீர்
இன்றியும், கால்நடைகளைக் கூட பராமரிக்க முடியாத அளவுக்கும் தமிழ்நாட்டு கிராமங்கள் வறட்சியின்
கோரப் பிடியில் சிக்கி சீரழிந்ததற்கு திமுக, அதிமுக ஆட்சியாளர்கள் தான் காரணம். தொலைநோக்கு
திட்டங்களும், தூய நிர்வாகமும் அறம் சார்ந்த நல்லாட்சியும் விடைபெற்று பல்லாண்டுகள் ஆகிவிட்டன.
வெற்று ஆடம்பர அரசியலும், விளம்பர மோகமும், குடும்ப ஆட்சியும், அருவருக்கத்தக்க வகையில்
கோலோச்சி வருகின்றன. தலைமைச் செயலகம் முதல் உள்ளாட்சி நிர்வாகம் வரை எங்கும், எதிலும்
லஞ்சமும், ஊழலும் வியாபித்து விட்டன. ஒட்டுமொத்த  ஆட்சி நிர்வாகத்திலும் புற்றுநோய் என ஊழல்
புரையோடிக் கிடக்கிறது.
ஏழை, எளியோருக்கு சுயமரியாதை மிக்க வாழ்வுக்கு வழிகாட்ட வேண்டிய அரசு, அவர்களை
இலவச போதைக்குள் தள்ளி வாக்கு அறுவடைக்கு பயன்படுத்தி வரும் அவலம், இந்திய நாட்டில் திமுக,
அதிமுக ஆட்சியாளர்கள் தொடங்கி வைத்த சீரழிவு கலாச்சாரம் ஆகும். இலவசமாகத் தர வேண்டிய
கல்வியும், மருத்துவமும், விற்பனை பண்டம் ஆகி விட்டன.
இலவசங்களை வாரி இறைப்பதற்கு அரசுக் கருவூலம் இடம் தராததால் மதுக்கடைகளை திறந்து
வைத்தனர். இன்று தமிழ்நாடே குடிநோய்க்கு அடிமை ஆகி கிடப்பதற்கு திமுக, அதிமுக இரண்டு கட்சிகளும்
தான் பொறுப்பு ஏற்க வேண்டும். ஆட்சிப் பீடத்திலிருப்போரின் மதுபான உற்பத்தி ஆலைகள் தான்
‘டாஸ்மாக்’ நிறுவனத்திற்கு மதுப்புட்டிகளை விற்பனை செய்கின்றன. எவர் ஆட்சிக்கு வந்தாலும் இவர்கள்
குடும்பத்தினர் அல்லது பினாமிகள் நடத்தும் மதுபான ஆலைகள், மதுபான கொள்முதலில் பல்லாயிரம்
கோடிகளை குவித்து குபேர குடும்பங்களாக திகழ்கின்றனர். ஆனால் சாதாரண, ஏழை, எளிய மக்களின்
குடும்பங்கள் அடுத்த வேளை உணவுக்கும் வழியின்றி, வருமானத்தையெல்லாம் மதுபானக் கடைகள்
பறித்துக் கொண்டதால், பட்டினி கிடக்கும் பரிதாபம் நீடிக்கிறது.
தமிழகத்தில் அரசியல் ஆதாயத்திற்காக சாதி வெறி சக்திகள் சாதிய மோதல்களை திட்டமிட்டு
நடத்தி வருகின்றன. தாழ்த்தப்பட்ட மக்கள் மீதும், வழிபாட்டுத் தலங்கள் மீதும் தாக்குதல்கள்
தொடர்கின்றன. சாதி மறுப்பு திருமணங்கள், காதல் திருமணங்கள் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு
பகிரங்கமாக அச்சுறுத்தப்படுகின்றன.
தமிழக அரசியலின் மையப்புள்ளியாக இருப்பது திராவிட அரசியல் கடந்த 50 ஆண்டு காலமாக
தமிழகத்தை திமுக வும் அதிமுக வும் மாறி மாறி ஆட்சி செய்து வந்துள்ளது. திராவிட அரசியலின் அடிப்படை
நோக்கமாக முன்வைக்கப்பட்ட திராவிட நாடு கோரிக்கை மெல்ல கரைந்து மாநில சுயாட்சி கோரிக்கையாக
மாறியது. மாநில சுயாட்சி குறித்து இன்றளவிலும் பேசப்பட்டு வந்தாலும் துவக்க கால வேகமோ,
உறுதியோ இல்லை அதுவும் தற்போது ஆட்சியில் இருக்கும் அதிமுக விற்கும் மாநில சுயாட்சிக்கும்
நேரெதிரான பொருத்தமே இருக்கும். சுயமரியாதை, பகுத்தறிவு, மூட நம்பிக்கை ஒழிப்பு, சாதியொழிப்பு
போன்ற இதர அடிப்படையான சில திராவிட கொள்கைகளை ஒருசில சீர்திருத்த இயக்கங்கள் மட்டுமே
மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்து வருகிறது. பெரியார் துவங்கிய திராவிடர் கழகம் பெரியாருக்கு பிறகு
தமிழகத்தில் ஆளும் கட்சிகளாக இருந்த திமுக, அதிமுக வைவிட சொல்லிக்கொள்ளும் வகையில் ஒன்றும்
செய்துவிடவில்லை. ஒருசில கூட்டங்கள் இயக்கங்கள், விருது நிகழ்ச்சிகள் என பழைமையான மன்னர்
கால அரசியலை விட்டு நகரவில்லை. மற்ற திராவிட கட்சிகள் ஏதேனும் ஒரு குறிப்பிட்ட போராட்டம்,
இயக்கம் போன்ற நிகழ்வுக்கு மட்டுமே பங்கேற்பதாக இருந்து விடுகிறது.
பழமையான திராவிட அரசியல் எனும் சீர்திருத்தவாத சமூகவாத  கட்சிகளின் அரசியல் போதாமை
மிகப்பெரிய தேக்கத்தில் இருக்கிறது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணமும், கலைஞரின்
மரணமும் தமிழக அரசியலில் பல வித்தியாசமான மாற்றங்கள் நிகழ்ந்து வருவதாக ஊடகங்கள்
விவாதித்து வருகிறது. ரஜினி,கமல் அரசியல் பிரவாகம் முதல் மத்திய அரசின் நேரடி கட்டுப்பாட்டில் தமிழக
அரசியல் சுருங்கிப்போயுள்ளது வரை இந்த மாற்றத்தை நாம் பார்க்க முடியும். ஆனால் இதுவொன்றும்
நம்மை போன்ற முற்போக்கு அமைப்புகளுக்கு ஆச்சரியமான மாற்றம் ஒன்றுமில்லை மாநிலத்தின் வர்க்க
நலன் சார்ந்து பிரதேச முதலாளிகள் தங்களுக்கான அரசியல்வாதிகளை இப்படி பலவகையில் மக்கள்
மத்தியில் திணிப்பது வரலாற்றில் நடந்துவரும் நிகழ்வுதான். வடக்கு வாழ்கிறது, தெற்கு தேய்கிறது என
தமிழக முதலாளிகளுக்கு சாமரம் வீசிய திராவிட கட்சிகள் ஊழலும், சொத்துக் குவிப்பும், பழையவசனம்

தலைகீழாக மாறி போனதாகவே உள்ளது. இந்திய பெருமுதலாளிகளின் லாபவெறி போட்டியில் தன்னை
நிலைநிறுத்திக்கொள்ள தமிழக முதலாளிகளுக்கு ஒரு குரங்குபொம்மை தேவைப்படுகிறது. அது ரஜினியோ,
கமலோ, செயல்தலைவர் ஸ்டாலினோ, அன்புமணியோ, சீமானோ யாராக வேண்டுமானாலும் இருக்கலாம்.
ஆனால் இனி எடப்பாடி, ஓபிஎஸ் அரசியல் மரக்கப்பல் தமிழகத்தில் மூழ்கிப்போன துருப்பிடித்த
தேவையற்ற பொருளே.
நாம் இதுபோன்ற பெருமுதலாளிகளின் பகடைக்காய் உருட்டலுக்கு மசிந்துகொடுக்கும் அரசியலை
 ஓங்கி மிதித்து விட்டு அனைவருக்குமான சோஷலிச அரசியலை இந்திய, தமிழக மாணவர்களின்
உள்ளக்குமுறலில் இருந்து முன்னெடுப்பதே சரியாக இருக்கும். அரசியலின் விரிவான வரலாறு, அறிவியல்,
சமூக விஞஞானம், பகுத்தறிவு, கலை, பண்பாடுகளை மாணவர்கள் மத்தியில் இன்னும் ஆழமாக நாம்
கொண்டுசெல்வதே இதை சாத்தியமாக்கும்.
இன்றைக்கும் தமிழக  மக்கள் தங்கள் உரிமைகளுக்காக போராடும் உண்மையான இயக்கங்கள்
பின்பு திரள்வதும் நடந்துதான் வருகிறது. ஜல்லிக்கட்டு போராட்டம் முதல் நீட் எதிர்ப்பு, ஹைட்ரோ
கார்பன், ஸ்டெர்லைட், எட்டுவழி சாலை எதிர்ப்பு என பல இயக்கங்களில் தன்னிச்சையாகவும்,
அமைப்பாகவும் திரண்டதை நாம் கண்கூடாக பார்க்க முடிந்தது. ஆனால் இந்த போராட்ட அரசியலை
முன்னெடுக்கவிடாமல் அரசும் அதன் கருவிகளும் தடுத்துக்கொண்டுதான் இருக்கும் ஆனாலும்
இதைக்கடந்து முன்னேறுவதே நமது கடமையாக உள்ளது.

க.நிருபன் (ஆகஸ்ட் 2018)

No comments:

Post a Comment

உலகை அதிரவைத்த மக்கள் சீனத்தின்செயற்கை நுண்ணறிவு டீப் சீக் (Deep seek)

உலகை அதிரவைத்த மக்கள் சீனத்தின்  செயற்கை நுண்ணறிவு டீப் சீக் (Deep seek) செயற்கை நுண்ணறிவு (artificial intelligence) துறையில் பேராதிக்கம் செ...