ஒரு காலத்தில் இந்தியா உலகின் செல்வந்த நாடுகளில் இரண்டாவது நாடக
இருந்தது, எப்படி பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனிக்கு அடிமையானது?.
உலகின் தலைசிறந்த அறிஞர்களை கொண்ட இந்திய நாட்டில் நவீன கால
வரலாற்றில் ஐரோப்பிய விஞ்ஞானிகளை போல் ஏன் மிகப்பெரிய அறிவியல் கண்டுபிடிப்புகளை
நிகழ்த்த முடியவில்லை?.
சிந்துவெளி நாகரிகத்தின் நகரமய கழிவுநீர் கட்டமைப்பே பத்தொன்பதாம்
நூற்றாண்டில் லண்டன் மாநகரின் கழிவுநீர் வெளியேற்றம் மற்றும் சுத்திகரிப்பு திட்டமிடலுக்கு
தூண்டுதளாக இருந்திருக்கும் போது இந்தியாவில் மட்டும் ஏன் சமூக வளர்ச்சி தேங்கி
போனது. என பல கேள்விகளுடன் இந்நூலை அணுகுபவர்களுக்கு இந்நூல் சிறந்த துவக்கத்தை
கொடுப்பதாக அமைந்திருக்கிறது. இந்நூலின் ஆசிரியர் தோழர்.வி.மீனாட்சி சுந்தரத்தின்
மார்க்சிய கோட்பாட்டிற்கு நேர் எதிர் பொருளாதார சிந்தனையாளரான சென்னை வளர்ச்சி
மையத்தின் இயக்குநராக பணியாற்றிய பேராசிரியர்.நீலகண்டன் அவர்களின் விமர்சனபூர்வமான
அணிந்துரை பல விவாதங்களை துவக்கி வைப்பதாக அமைந்துள்ளது. இந்தியாவின் சுயேட்சையான
மூலதன சுழற்ச்சியின் வளர்ச்சியை தடுத்தே இங்கிலாந்து காலனியாதிக்கத்தை இங்கு
நிறுவியுள்ளது. அதற்க்கு இந்தியாவின் சனாதன சாதிய ஏற்றதாழ்வுகளை உயர்திபிடிக்கும்
மனுதர்ம பிராமணியக் கோட்பாடுகள் உதவிபுரிதுள்ளது.
தமிழகத்தின் தொன்மையான இலக்கியமான திருக்குறள், அகநானூறு மற்றும்
புறநானூறுலிருந்து மேற்கோள்களை கொண்டு அக்கால தமிழகத்தின் பொருளாதார வாழ்வை
எடுத்துரைக்கிறார். ஆப்பிரிக்காவின் வடபகுதியில் வாழ்ந்தவர்கள் சுரங்கம்
தோண்டியதுபோல் இங்கு தோண்டவில்லை காரணம் இந்தியாவின் செழிப்பான பொருள் உற்பத்தி
தங்கம், வெள்ளி போன்ற உலோகங்களை கொண்டு வந்து குவித்தது. 1748 ல் பிரான்ஸ் நாட்டின் பிரபல எழுத்தாளர் மாண்டேகு “ரோம சாம்ராஜிய காலம்
முதல் இந்தியாவோடு வர்த்தகம் செய்ய வேண்டுமானால் தங்கமோ, வெள்ளியோ கொண்டு
செல்லவேண்டும். பதிலுக்கு சரக்குகளை பெறலாம். நாம் சரக்குகளை கொண்டு போனால்
விற்கமுடியாது. அவர்களுக்கு தேவை புல்லியன் (தங்கம், வெள்ளி) அங்கு போன புல்லியன்
திரும்பவே செய்யாது” என்று எரிச்சலோடு கூறியுள்ளார். காரணம் ஐரோப்பாவிற்கு தேவையான
கம்பளி, பட்டு, கலப்படமற்ற பஞ்சு, வாசனை பொருள்கள், மசாலா வகைகள் மற்றும் பீங்கான்
போன்றவை இந்தியா, சீனாவிடமிருந்து தான் வாங்கவேண்டி இருந்தது. அதே போல் இந்த
நாடுகளுடன் வர்த்தகம் செய்ய ஐரோப்பிய நாடுகள் செய்த பல சூட்சமங்களின் சுவாரசியமான
தகவல்கள் இந்நூலை படிக்கும் போது அறிந்து கொள்ளமுடியும். இந்தியாவில்
விளைவிக்கப்பட்ட அபின் சீனாவை அடிமையாக்கியது. அதேபோல் அபின் மற்றும் அவுரி கொள்ளை
லாபத்திற்காக இங்கு பயிரிடப்பட்டதால் அப்போது செழிப்பாக இருந்த நெல் உற்பத்தி
தடுக்கப்பட்ட்டது. இதனால் 1776 - 1779 ம் ஆண்டுகளில்
இந்தியாவில் மிகப்பெரிய பஞ்சம் வர காரணமானது.
இந்தியாவில் சுல்தான்கள் மற்றும் அக்பரின் காலத்தில் நிலவரி
வசூலிப்பதையும் வட்டித்தொழில் செய்வதையும் குலதொழிலாக கொண்ட டானியா, போகரா,
பார்சி, சிந்து, ஜெயின், மார்வாரி, செட்டி, கோமுட்டி பிற்காலத்தி மோடி போன்ற
சாதியினர் மற்றும் லேவாதேவிகாரர்கள் இருத்ததை குறிப்பிடுகிறார். அக்பரின்
அரசவையிலேயே ராஜா மான்சிங் (ஜெயின்), ராஜா தோடர்மால் (மார்வாரி), ராஜா பீர்பால்
(பிராமணர்) போன்ற வசூல்ராஜாக்கள் இருந்துள்ளார்கள். மேலும் அரச அதிகாரிகள், ராஜ
விசுவாசிகள், வர்த்தகர்கள் போன்ற நடுத்தர செல்வந்தர்களும் இவர்களுக்கு பணிவிடை
செய்வதற்காகவும், ஆடம்பர பொருட்கள் தயாரிக்கவும் புதிய தாழ்த்த சாதிகள் உருவானதையும்
குறிப்பிடுகிறார். அதே போல இங்கிலாந்து உலகின் முதல் ஏகாதிபத்திய நாடக உருவாக
இந்தியாவில் உருவாக்கப்பட்ட வெடிமருந்து உப்பும், சூரத் கப்பல் கட்டும் தளமும்,
விசுவாசமிக்க சீக்கிய சிப்பாய்கள் உள்ளிட்ட இந்திய சிப்பாய்கள், அவுரி மற்றும்
கஞ்சா மூலம் பெற்ற பொருளாதார, அரசியல் லாபங்கள் பெருமளவுக்கு உதவியுள்ளது.
நெப்போலியனை வாடர்லூவில் தோற்கடிக்க டன் கணக்கான இந்திய வெடி உப்பே காரணம் என்பது
வரலாற்றில் பதிய வேண்டிய அறிய உண்மை சம்பவம் ஆகும். இந்திய வரலாறு குறித்து
இயக்கவியல் பொருள்முதல்வாத அடிப்படையில் ஆய்வு செய்ய விரும்புபவர்கள், இளம்
மாணவர்கள் மற்றும் இந்திய பொருளாதாரத்தை வரலாற்றுபூர்வமாக அறிய விரும்பும் இளம்
வாசகர்களுக்கு சுவாரசியமான துவக்க நூலாக இந்நூல் அமையும். மேலும் இந்நூலில் பல
அறிய தகவல்கள் நிறைந்து கிடப்பதால் மேற்கோள் நூல் பட்டியல்கள்
கொடுக்கபட்டிருந்தால் மேற்கொண்டு அறிந்துகொள்ள விரும்புவோற்க்கு உதவியாக
இருந்திருக்கும்.
-க.நிருபன் (27-4-2017)
No comments:
Post a Comment