Saturday, March 9, 2019

கல்வி சூழல் - 2018

நமது கல்வி வரலாற்றின் பின்புலத்தை பொறுத்தவரை இந்தியாவில் கல்விமுறை சிந்து சமவெளி
காலம் துவங்கி பல்வேறு வடிவங்களில் இருந்து வருகிறது. அரசர்கள், வணிகர்கள், கணக்காளர்கள்,
புலவர்கள் மற்றும் கண்காணிப்பளர்கள் என ஆரம்பக்காலத்தில் தங்கள் குடும்ப பணியாக தலைமுறை
தலைமுறையாக தங்கள் தொழில் சார்ந்த கல்வியையும், குருகுலக் கல்வியையும் கற்றும் கற்றுகொடுத்தும்
வந்தார்கள். வேதகாலம், பெளத்தம் மற்றும் சமணர்களின் காலம், சைவ, வைணவ காலம், இஸ்லாமியர்கள்
மற்றும் ஆங்கிலேயர்கள் காலம் வரை கல்வி முறை பலவடிவங்களில் இருந்து வந்திருந்தாலும், நாம் இன்று
கற்று வரும் திட்டமிடப்பட்ட அல்லது முறையானக்கல்வி (FORMAL EDUCATION)என்பது ஆங்கிலேயர்களால்
அறிமுகப்படுத்தப்பட்ட “மெக்காலே கல்வி” முறையே ஆகும். அதே போல பதினாறாம் நூற்றாண்டு வரை
சாதாரண மக்களுக்கான திண்ணை பள்ளிகளும் இருந்து வந்துள்ளது.
கல்வியை மேம்படுத்த ஆங்கிலேயர் காலத்தில் வுட் அறிக்கை, ஹண்டர் கல்விக்குழு துவங்கி
இன்று வரை பலஅறிக்கைகளும், குழுக்களும் போடப்பட்டுள்ளது. அதே போல் தொடக்கக்கல்வியை ஆறு
வயது முதல் பத்துவயது வரை அரசே தரவேண்டும் என பம்பாய் மாகாண சட்டமன்றத்தில் கோபால
கிருஷ்ண கோகலே அவர்கள் தீர்மானம் முன்வைக்க அத்தீர்மானத்தை 13 பேர் மட்டுமே ஆதரித்து, 38 பேர்
எதிர்த்த 1910 ம்  ஆண்டு துவங்கி இலவச கட்டாயக் கல்வியுரிமை சட்டம் 2010 ம் ஆண்டு
நடைமுறையாகும் வரை கல்வியை அரசே தரவேண்டும் எனக்கூறவே நூற்றாண்டுகள் போராட்ட
வேண்டியுள்ளது. கல்வியில் சமூக நீதிக்கான கோரிக்கையும் இந்நூறாண்டு போராட்டத்தில்
இழையோடியுள்ளது. 1882 ம் ஆண்டு ஹன்டர் கல்விக்குழு முன் ஜோதிராவ் பூலேவும், சாவித்ரிபாய்
பூலேவும் முன்வைத்த கல்விக்கான சமூகநீதி கேள்விகள் இன்றும் தொடர்கிறது.
மிகமுக்கியமாக 1917ல் மாண்டேகு செம்ஸ் போர்ட் சீர்திருத்தம் தொடக்கக்கல்வியை உள்ளாட்சி
அமைப்பிடம் கொடுத்தது, பின் 1935 ல் கல்விப்பொறுப்பு மாநில அரசுக்கு மாற்றப்பட்டது. விடுதலைக்கு
பிறகு பொதுப்பட்டியலில் கல்வி இருந்தாலும் தற்போது ஆளும் பிஜேபி அரசு கல்வியை
மத்தியப்பட்டியலுக்கு கொண்டு வரும் நடவடிக்கையை எடுத்து வருகிறது. 1937ல் காந்தியின் ஆதாரக்
கல்விக்கொள்கை உருவானது. பிறகு 1944 ம் ஆண்டு சார்ஜண்ட் அறிக்கை 3 முதல் 6 வரை முன்பருவமும்,
6 முதல் 14 வரை  கட்டாய இலவச தொடக்கக்கல்வி கொடுக்க வேண்டும் என்றது. 1948-49
இராதாகிருஷ்ணன் அறிக்கை முன்வைத்து 1950 ஆண்டு அரசு ஏற்றது. மேலும் ஏ.எல்.முதலியார்
ஆய்வுக்குழு உயர்நிலைப் பள்ளிக்கல்வி குறித்து கூறியது.
கல்வி குறித்தான குழுவில் மிகமுக்கியமாக 1962 – 64 கோத்தாரி கல்விக்குழு பொதுக்கல்வி,
அருகாமை பள்ளி அரசே செய்ய வேண்டும் என்பன பற்றி பேசியது. இன்றுவரை இதன் பரிந்துரைகள் பல

விவாதமாகவே உள்ளது. 1965 ம் ஆண்டுகளில் மும்மொழிக்கல்விக் கொள்கையை இராஜாஜி அரசு
அறிமுகப்படுத்தியது அதை தொடர்ந்து தமிழகம் முழுவதும் இந்தி திணிப்பிற்கு  எதிரான போராட்டமாக
நடந்தது. பள்ளிக்கல்வியை கல்வித்துறைக்கு 1971 ல் மாற்றப்பட்டது. பின் 1975 ல் கல்வி மாநிலப்
பட்டியலில் இருந்து பொதுப்பட்டியலுக்கு மாற்றப்பட்டது. அதே போல 1982ம் ஆண்டில் தான் எம்ஜிஆர்
முதல்வராக இருக்கும் போது ஆசிரியர்கள் அரசு ஊழியராக்கப்பட்டனர்.
நமது கல்விக் கொள்கையில் ஓரளவு சுயசார்பான வளர்ச்சியை தனியாரிடம் கொடுப்பதற்காக 1986
புதியக்கல்வி கொள்கை முன்வைக்கப்பட்டு 1992 ல்இந்திய அரசும் ஏற்றுக்கொண்டது. அதன் பிறகு 1991
இராமமூர்த்தி கல்விக்குழு, 1991– எழுதறிவுத்திட்டம், 1993 யஷ்பால் கல்விக்குழு, 1998 அம்பானி பிர்லா குழு,
2001 அனைவருக்கும் கல்வித்திட்டம் (எஸ்.எஸ்.எ), 2005ம் ஆண்டு செயல் வழிகற்றல் (எ.பி.எல்.)
அறிமுகப்படுத்தப்பட்டது. 2002 ல் கல்வியுரிமை மசோதா 2005 இறுதிப்படுத்தப்பட்டு வெளியிடப்பட்டது.
பின் 2009ல் ஏற்றுக்கொள்ளப்பட்டது. 2010ம் ஆண்டு ஏப்ரல் 1 நாடுமுழுவதும் நடைமுறைக்கு வந்தது. 2009
அனைவருக்கும் இடைநிலை கல்வி திட்டம் (ஆர்.எம்.எஸ்.எ).
நமது நாட்டில் தற்போதுள்ள கல்விமுறை என்பது மெக்காலே கல்வியாகவே இருந்து வருகிறது.
ஆங்கிலேயர் காலத்தில் எடுபுடி வேலைகள் செய்வதற்காக உருவாக்கப்பட்ட குமாஸ்தா கல்வி முறையாகும்.
இருப்பினும் பல அடித்தட்டு சமூகத்திற்கு இதன் வழியே தான் கல்வி சென்று சேர்ந்தது. ஆனால்
விடுதலைக்கு பிறகும் எந்தவித மாற்றங்களும் இன்றி அதே மெக்காலே கல்வியை திணித்து வருவது
நியாயமானது இல்லை. தற்போது பிஜேபி இக்கொள்கைகளோடு இணைத்து புதியக் கல்விக் கொள்கை
என்ற பெயரில் இந்துத்துவ குலக் கல்வித் திட்டத்தை புகுத்தி வருகிறது. பாடத் திட்டங்களை மாற்றி,
புராணக்கதைகளை அறிவியலாகவும், வரலாறாகவும் எழுதி வருகிறது. சமஸ்கிருதத்தையும், இந்தியையும்
தன்னிச்சையாக அனைத்து மாநிலங்களிலும் திணித்து வருகிறது. கல்வியை மாநிலப் பட்டியலில் இருந்து
பொதுபட்டியலுக்கு காங்கிரஸ் கொண்டு சென்றது. தற்போது அதை மத்தியப்பட்டியலுக்கு
கொண்டுசெல்லும் நடவடிக்கையை பிஜேபி செய்து வருகிறது.  மத்திய மனிதவளத் துறை அமைச்சர்
பிரகாஷ் ஜவடேகர் இந்தியா முழுமைக்கு ஒரே வகையான கல்வி போதும் என்கிறார். இது எந்த வகை
நியாயம் முப்பதுக்கும் மேற்பட்ட தேசிய இனங்கள் கொண்ட நமது நாட்டில் ஒரே கல்வி சாத்தியமல்ல.
மேலும் HEERA (higher education empowerment regulation agency) என்ற உயர் கல்வி மேம்பாடு
மற்றும் ஒழுங்குபடுத்தும் நிறுவனம் என்ற பெயரில் பல்கலைக்கழக மானியக்குழு, அகில இந்திய
தொழிற்நுட்ப கவுன்சிலை கலைக்கப் போகிறது. தற்போது இந்திய உயர்கல்வி ஆணையம் (Higher
Education Commission of India - HECI)  என்ற பெயரில் UGC யை கலைத்துள்ளது. அதற்கான கருத்துக் கேட்பு
காலமும் தற்போது முடிந்துள்ளது. இதுபோன்ற நடவடிக்கைகளுக்கு more power என்ற வார்த்தையை
ஆளும் பிஜேபி அரசு தொடர்ந்து சொல்லிவருகிறது. ஜனநாயகத்தின் கட்டமைப்பு அனைத்தையும்
உடைத்து ஒருநபர் கீழ் கொண்டுசெல்லும் நடவடிக்கையே இது. ஜனநாயக இந்தியாவின் முக்கியமான
அம்சமாக இருந்த திட்டக்  கமிஷனை கலைத்து நிதி ஆயோக் என்ற பெயரில் அனைத்து அமைப்புகளையும்
குவித்து வருகிறது.
இந்நடவடிக்கையின் தொடர்ச்சியாக  BAR COUNCIL, NCERT, MCI போன்ற அமைப்புகளையும்
கலைக்க உள்ளது. இவ்வாறு ஒட்டுமொத்த துறையையும் ஒருநபர் ஆதிக்கத்தின் கீழ்கொண்டு செல்லும்
ஜனநாயக விரோத நடவடிக்கையை எடுத்து வருகிறது. அரசு கல்வி நிறுவனங்கள் அனைத்தையும்,
தனியாருக்கும், அந்நிய முதலாளிகளுக்கும் திறந்துவிட இருக்கிறது. எல்லா படிப்புகளுக்கும் தேர்வுகளை
வைத்து வடிகட்டும் வேலையை துவங்கியுள்ளது. தற்போது நடந்த நீட் தேர்வில் தேசிய அளவில் தலித்
மற்றும் பழங்குடி மாணவர்கள் எண்ணிக்கை மிகக்குறைந்த அளவிலேயே தேர்ச்சியுற்றனர் என்பதே இதற்கு
மிகச் சரியான எடுத்துக்காட்டாகும்.
நிதிசார் பல்கலைக் கழகம் (financial autonomy) என்ற பெயரில் பல்கலைக்கழகங்களுக்கு
கொடுத்துவந்த நிதியை முழுவதும் குறைத்து தானே நிதியை உருவாக்கிக்கொள்ளவேண்டும் என
கூறியுள்ளது. அரசுடைமையாகவுள்ள பல்கலைக்கழகங்களை தனியார்வசம் கட்டுத்திடவே
இந்நடவடிக்கையை எடுத்துள்ளது. மேலும் அனைத்துப் படிப்புகளுக்கும் கட்டணம் வசூல் செய்யவும்,
கட்டணத்திற்காக புதிய பாடத்திட்டங்களை உருவாக்க வேண்டிய சூழல்ஏற்படும் சாதாரணமற்றும் நடுத்தர
மாணவர்கள் உயர்கல்வி பெற முடியாத சூழல் ஏற்படும்.

இந்தியாவில் நவீன தாராளமைய கொள்கை அமல்படுத்தப்பட்டு அனைத்து அரசு
நிறுவனங்களையும் சூறையாடிவரும் சூழலில் கல்வியை முழுவதும் விற்பனையாக்க 2000 ம் ஆண்டு
வாக்கில் அம்பானி பிர்லா பெயரில் ஒரு பரிந்துரை முன்வைக்கப்பட்டது. அதை அமல்படுத்தவே
இன்றுவரை வேலைகள் நடந்துவருகிறது. அந்தவகையில் ஏற்கனவே இருந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி
அரசின் அதே கல்விக் கொள்கையையே தற்போதைய தேசிய ஜனநாயக முன்னணியும் கடைபிடித்து
வருகிறது.. பத்தாண்டுகளாக மன்மோகன் சிங் முயற்சித்ததை சில ஆண்டுகளிலேயே நரேந்திர மோடி
சாதித்து அம்பானி, அதானியின் கும்பல்களுக்கு மகிழ்ச்சியாகஇருக்கலாம்  ஆனால் மாணவர்கள்
சொல்லொண்ணா துயரத்தில் ஆட்பட்டுவருகிறார்கள்.
உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி மாணவர்களுக்கான உதவித் தொகையை திட்டமிட்டுக் குறைத்து
வருகிறது. மத்திய அரசின் யுஜிசி நெட் பெலோஷிப் , பல்கலைக் கழகத்தின் நான்நெட் பெலோஷிப், ராஜீவ்
காந்தி தேசிய பெலோஷிப்  போன்ற பல உதவித்தொகைக்கான மாணவர் எண்ணிக்கையையும் குறைத்து
வருகிறது. உதவி பெரும் ஆய்வு மாணவர்களையும் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது.
ஆய்வுக்கான மாணவர் எண்ணிக்கையையும் சரிபாதியாக குறைத்துள்ளது. பேராசிரியர்களின் கைட்ஷிப்
எண்ணிக்கையை குறைப்பதன் மூலம் இதை செய்து முடித்துள்ளது. உலகிலேயே மிகக்குறைவாக
ஆய்வுக்கட்டுரைகள் வரும் நாடாக இந்தியா உள்ள சூழலில் இது மேலும் நிலைமையை மோசமாக்கும்.
கல்வி நிலைய ஜனநாயகதை பாதுகாத்திட 2006 ல் லிண்டோ கமிட்டி ஒரு பரிந்துரை செய்தது.
அதில் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் மாணவர் பேரவை போல இந்தியா முழுவதும் அனைத்து
வளாகங்களிலும் தேர்தல் நடத்த வேண்டும் என்றது. ஆனால் இன்று ஜேஎன்யு வின் ஜனநாயகமே
மிகப்பெரிய கேள்விக்குறியாகி உள்ளது. இந்தியா முழுவதும் உயர்கல்வி நிறுவனங்கள் மீதும்
கல்வியாளர்கள் மற்றும் மாணவர்கள் மீதுமான மதவாத தாக்குதல்கள் நாளுக்கு நாள் அதிகரித்துள்ளது.
ரோஹித் வெமுலா முதல் நஜீப், முத்துக்கிருஷ்ணன் வரை கல்விக்கூடம் கொலைகூடமாக மாறியுள்ளது.
குல்மெஹர் கவுர் என்றமாணவி “தன் தந்தை கார்கில் போரில் பாகிஸ்தானால் கொல்லப்படவில்லை,
போரினால் கொல்லப்பட்டார்” என்று கூறியதற்காக ஏ.பி.வி.பி. மாணவர் அமைப்பினர் அந்த பெண்ணை
“பாகிஸ்தானிற்கு ஆதரவானவள்” என்றும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் பலாத்காரம் செய்வோம் எனக் கூறி
தொடர்கொலை மிரட்டல் விடுத்தது. இவ்வாறு ஜனநாயக உரிமைகள் மறுக்கப்படுவதோடு, ஜவஹர்லால்
நேரு பல்கலைக்கழகத்தை இழுத்து மூடுவதற்கான பணிகளை மத்தியஅரசு துவங்கியுள்ளது. கடந்தாண்டு
மட்டும் மாணவர் சேர்க்கைக்கான அறிவிப்பில் 900 இடங்கள் வரை ஓராண்டுக்கு நிரப்பிவந்த மாணவர்
சேர்க்கையின் எண்ணிக்கையை குறைத்து வெறும் 100 இடங்களுக்கு மட்டும் அறிவித்திருந்தது.
கல்வி என்பது உயர்தட்டு ஜாதி மக்களுக்கு மட்டுமே, மற்றவர்கள் அதற்கடுத்தடுத்த
நிலைகளிலேயே இருக்க வேண்டும் எனவே கல்விக் கட்டணம் உயர்த்தப்படும், கல்வி உதவித்தொகை
நிறுத்தப்படும், ஆராய்ச்சி செய்யும் மாணவர்களின் எண்ணிக்கை குறைக்கப்படும். மாட்டுச் சாணியில்
விண்வெளி ஆராய்ச்சியும், கோவில் கழிவு நீரில் மருத்துவ ஆராய்ச்சியும் செய்ய நிதி வாரி இறைக்கப்படும்.
விளையாட்டுப் போட்டிக்கு போகாமல் யோகா, தியானம் செய்தால் அர்ஜுனா விருது வழங்கப்படும்.
மொத்தத்தில் பாபா ராம்தேவும், சத்குருவும் கல்வி தந்தைகள் ஆக்கப்படுவார்கள். தனியார் நிறுவன
முதலாளிகள் துணைவேந்தர்களாக ஆக்கப்படுவார்கள் என்பதே நிதர்சன் உண்மை.

தமிழக கல்வி சூழல்

மத்திய அரசின் அதே தாராளமய தனியார்மய கொள்கைகளை தமிழகமும் கடைபிடிப்பதால் கல்விக்
கொள்கையில் பெரிய மாற்றமின்றியே உள்ளது. ஆளும் கட்சிகளின் ஒரு அமைச்சர் பதவியும் லஞ்சமும்,
ஊழலுமே கல்வி துறையாக பார்க்கப்படுகிறது. கொள்ளை லாபம் சம்பாதிக்கும் வியாபாரமாக கல்வி
பார்க்கப்படுகிறது. தனியார் பள்ளிக்  கல்லூரிகளின் மோசமான லாபவெறி அரசு கல்வி நிறுவனங்களின்
வளர்ச்சியற்ற தன்மையே தமிழக கல்வியில் காணப்படுகிறது.
பள்ளிக் கல்வி
தற்போது நமது மாநிலத்தில்  பள்ளிக்கல்வி, உயர்கல்வி, ஆராய்ச்சிக் கல்வி என்றுள்ளது.
பள்ளிக்கல்வி என்பது மழலையர் கல்வி தவிர்த்து மொத்தம் 12 ஆண்டுகள் பள்ளிக்கல்வியை இன்று படித்து
வருகிறோம். அதேபோல் இம்முறையிலான கல்வியை இங்கு அரசு பள்ளிகள், அரசு உதவிபெறும்

பள்ளிகள், தனியார் பள்ளிகள், மத்திய அரசு கல்வி திட்ட பள்ளிகள் (சி.பி.எஸ்.சி மற்றும் ஐ.சி.எஸ்.ஈ),
கேந்திர வித்தியாலயம், ஆங்கிலோ இந்தியன், மாண்டசரி, மதரசா, அமெரிக்கன் பள்ளி (ஐ.ஜி.சி.எஸ்.இ)
மற்றும் ஓரியண்டல் பள்ளிகள் உள்ளன. நமது நீண்ட நெடிய போராட்டத்தின் விளைவாக சமச்சீர்க்கல்வி
இன்று நடைமுறைபடுத்தப்பட்டாலும் அது பாடநூலாக மட்டுமே சுருங்கிப் போனது. எனவே இன்றும்
சாதாரண மாணவர்களுக்கும் உயர்தட்டு மாணவர்களுக்குமான வேறுபாடு அதிகமாகவே உள்ளது.
தற்போது பள்ளிகள் எண்ணிக்கையின் அடிப்படையில் தமிழகத்தில் 36,505 அரசுப் பள்ளிகளும்,
அரசு உதவி பெறும் தனியார் பள்ளிகள் 8266 ம் என்ற எண்ணிக்கையிலும், தனியார் பள்ளிகள் 10896 ம்
என்ற எண்ணிக்கையிலும் உள்ளது. ஆக மொத்தம் தமிழகத்தில் 55,667 பள்ளிகள் உள்ளன.
தமிழகத்தில் உள்ள 55,667 பள்ளிகளில் 1,35,05,795 மாணவர்கள் பயின்று வருகிறார்கள். இதில்
அதிகப்படியாக மேல்நிலை பள்ளிகளில் மட்டும் 62,56,434 மாணவர்கள் பயின்று வருகிறார்கள். தனியார்
பள்ளிகளில் 43,51,054 மாணவர்களும் அரசு உதவி பெறும் தனியார் பள்ளிகளில் 33,01,845
மாணவர்களும், அரசுப் பள்ளிகளில் 58,52,896 மாணவர்களும் பயின்றுவருகிறார்கள். ஒப்பீட்டளவில் அரசு
பள்ளிகளை விட குறைவாக உள்ள தனியார் பள்ளிகளில் தான் பள்ளி மற்றும் மாணவர்களின் விகிதாச்சார
அடிப்படையில் அதிகமான மாணவர்கள் பயின்று வருவதை அறிய முடிகிறது. அரசுப் பள்ளிகளில்
பள்ளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப மாணவர்கள் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது. அதற்கடுத்தாற்
போல் அரசு உதவி பெறும் தனியார் பள்ளிகளில் அதிக மாணவர்கள் பயின்று வருவதும் அரசுப்பளியில்
மாணவர்கள் விகிதம் அதைவிட குறைவு என்பதும் வேதனையான உண்மையாகும்.
தமிழக அரசு மாணவர்களுக்கு கடந்த காலங்களில் சத்துணவுத்திட்டம் துவங்கி சீருடை இலவச
பாடநூல் என பல சலுகைகளை கொடுத்து வந்துள்ளது. தற்போது தமிழக அரசு கிட்டத்தட்ட 14 பள்ளி
உபகரணங்கள் (சைக்கிள், பேனா, பென்சில், பேக்...... ) என நீளும் விலையில்லா பொருட்கள்
மாணவர்களின் எண்ணிக்கையை கூட்டவில்லை என்பதே நிதர்சனமான உண்மையாகும்.நமது இந்திய
மாணவர் சங்கம் உள்ளிட்ட அமைப்புகளின் தொடர் போராட்டத்தின் விளைவாய் தமிழகம் முழுவதும்
பல்வேறு கல்வி முறையாக பிரிந்து கிடந்த பள்ளிக் கல்வியை ஒரே கல்வி முறைக்குள் கொண்டுவந்திடும்
வகையில் சமச்சீர் கல்வி முறை அறிமுகப்படுத்திட செய்தோம். 2012 ம் ஆண்டில் மாணவர்களின் புத்தகச்
சுமையைக் குறைக்கும் வகையில் பருவமுறை பாடத்திட்ட அறிமுகம் செய்தது. 2012 ல் தொடர்  மற்றும்
முழுமையான மதிப்பீட்டு முறை அறிமுகம்செய்யப்பட்டது . தற்போது மதிப்பீட்டு முறையிலும் சில மாற்றம்
வந்துள்ளது.
ஆசிரியர்களை பொறுத்தவரை 36,505 அரசுப் பள்ளிகளில் 2,09,820 ஆசிரியர்கள் உள்ளனர்.
அந்தவகையில் கணக்கிட்டால் ஒருபள்ளிக்கு 6 ஆசிரியர்கள் தான் உள்ளனர்.  ஆனால் 10,896 பள்ளிகளை
கொண்ட தனியார் பள்ளிகளில் 2,44,716 ஆசிரியர்கள் உள்ளனர். அதாவது ஒரு பள்ளிக்கு 24 ஆசிரியர்கள்
என்ற வகையில் உள்ளனர். ஒப்பீட்டளவில் அரசு பள்ளி ஆசிரியர்களின் விகிதப்படி பார்த்தால் 4:1 என்ற
விகிதத்தில் நமது அரசு பள்ளிகள் அதல பாதாளத்தில் கிடக்கிறது. தற்போது பள்ளிக்கல்வி அமைச்சர்
செங்கோட்டையன் அவர்களின் சமீபகால பேட்டி ஒன்றில் அரசு பள்ளிகளில் உள்ள ஆசிரியர்
 காலிபணியிடம் மொத்தம் 4,542 நிரப்பப்படும் என அறிவித்தார். உடனே ஊடகங்கள் இவ்வளவு
காலிபணியிடங்களா வியந்து எழுதி நம்மையும் நம்பவைத்து அதாவது தோழர்களே தனியார் பள்ளிகளை
ஒப்பிட்டால் விகிதாசார அடிப்படையில் இலட்சத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் அரசுப்பள்ளிக்கு மேலும்
தேவை என்பதே உண்மையாகும். ஊதியம் என்பதை பார்த்தோமானால் தலைகீழாக உள்ளது, அரசு பள்ளி
ஆசிரியர்கள் சராசரியாக 40 ஆயிரம் வாங்கினால் தனியார் பள்ளிகளோ 15 ஆயிரம் தருவதே ஆச்சரியமாக
உள்ளது. இந்த தலைகீழ் விகிதங்களை நாம் சரியாக எடுத்துரைத்தால் அனைத்து தரப்புகளையும்
அணிதிரட்டலாம்.
பள்ளிக்கல்வி செயலாளர் உதயச்சந்திரன் பல்வேறு மாற்றங்களை கடந்த காலங்களில் பள்ளிக்
கல்வித் துறையில் புகுத்தியுளார். புதிய பாடத்திட்ட வரைவில் பல நல்ல மாறுதல்கள் இருப்பதை பார்க்க

முடிந்தது. ரேங்க் முறையை ஒழித்தது, பதினொன்றாம்  வகுப்புக்கு தேர்வு நடத்திட எடுத்த முடிவு என சில
ஆரோக்கியமான மாற்றங்கள் இருந்தது. அதே நேரத்தில் இது போதுமானதில்லை. கல்வியுரிமை சட்டம்
இன்றளவிலும் முழுமையாக அமலாக்கவில்லை. நிதி குறைந்துள்ளது. புதிய பள்ளிகள்
உருவாக்கப்படவில்லை. கேரளாவில் கடந்த ஆண்டு தனியார் பள்ளிகளில் இருந்து ஒன்றரை லட்சம்
மாணவர்களை அரசுப்பள்ளிக்கு ஈர்த்துள்ளது. நம் தமிழகம், இருக்கும் மாணவர்களை பாதுகாப்பதே
போதும் என்றே உள்ளது.
அதே போல தனியார் பள்ளிகளின் கட்டணக்கொள்ளைக்கு எதிரான நமது போராட்டமும் அதை
தொடர்ந்து சிங்காரவேலு, ரவிராஜ பாண்டியன் துவங்கி தற்போது மாசிலாமணி கமிட்டி வரை
போடப்பட்டுள்ளது. ஆனால் தனியார் பள்ளிகள் இதை பொருட்படுத்துவதாக இல்லை பல்வேறு
பெயர்களில் மாணவர்களிடம் பெரும் தொகையை கல்விக் கட்டணமாக வசூல் வேட்டையை இன்றும்
நடத்தி வருகிறது.
உயர்கல்வி
தமிழகத்தின் உயர்கல்வி மிகமோசமான சூழ்நிலையில் உள்ளது. மதுரை காமராஜர்
பல்கலைகழகத்திற்கு உட்பட்ட  தேவாங்கர் கல்லூரி மாணவிகளை தவறாக பயன்படுத்த பேரம்பேசிய
நிர்மலாதேவி பிரச்சனை தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் வரை சென்றதே இம்மோசமான
சூழலுக்கான வெளிப்பாடு. கடந்த மூன்று ஆண்டுகளில் பத்து துணைவேந்தர்கள் வரை
காலிப்பணியிடங்களை நிரப்பப்படாமல் இருந்து கடந்தாண்டுகளில்தான் நியமித்தது. அதிலும் மத்திய
ஆர்எஸ்எஸ் கும்பலின் சேவகர்களை சட்டப் பல்கலைக்கழகத்தில், அண்ணா பல்கலைக்கழக்தில், இசை
பல்கலைக்கழகத்தில் நியமித்தது. தேடுதல்குழு(Searching committee) அமைக்கப்பட்டு அதன் பரிந்துரைகளை
மதியாமல் ஆளுநரின் நேரடி தலையீட்டில் இந்நடவடிக்கைகள் நடந்துள்ளது.
நம் மாநிலத்தில் 10 கலை அறிவியல் 1 தொழிற்நுட்பம், 1 கல்வியல், 10 திறந்தநிலை என  மொத்தம்
23 மாநில பல்கலைக் கழகங்கள் உள்ளது. அதுபோக இரண்டு மத்திய பல்கலைக் கழகங்கள், 1 அரசு உதவி
பெரும் பல்கலைக் கழகம் , 28 தனியார் நிகர்நிலைப் பல்கலைக்கழகமும் உள்ளது. மருத்துவக் கல்லூரியை
பொறுத்தவரை 28 அரசு மருத்துவக் கல்லூரிகள், 26 தனியார் மருத்துவக் கல்லூரிகளும் உள்ளன.
பொறியியல் கல்லூரிகளை பொறுத்தவரை 7 அரசு பொறியியல் கல்லூரிகள், 3 அரசு உதவிபெறும்
பொறியியல் கல்லூரிகள், 18 அண்ணா பல்கலைக் கழக கல்லூரிகள், 618 சுயநிதி பொறியியல் கல்லூரிகள்
உள்ளன. கடந்த பத்தாண்டுகளுக்கு முன்னாள் மிகப்பெரிய அளவில் விற்பனை செய்யப்பட பொறியியல்
படிப்புகளின் விற்பனை குறைந்து வருகிறது. மாணவர்கள் எண்ணிக்கை ஒவ்வொரு ஆண்டும்
கலந்தாய்விலும் கணிசமாக குறைந்து வருவது நிதர்சனமான உண்மையாகும். தொழிற்நுட்பக் கல்லூரிகளில்
518 பாலிடெக்னிக் கல்லூரிகளும் மேலும் சென்னை ஐ.ஐ.டி , திருச்சி என்.ஐ.டி. ஆகிய அரசு
தொழில்நுட்பக்கல்லூரியும்  உள்ளது.
கலைஅறிவியல் கல்லூரிகளை பொறுத்தவரை நமது தொடர்ச்சியான போராட்டத்தின்  விளைவாக
37 பல்கலைக்கழக உறுப்புக்கு கல்லூரிகளை அரசு கல்லூரியாக சமீபத்தில் அறிவித்துள்ளது. 2003 ம்
ஆண்டு 67 நாட்கள் நாம் நடத்திய வீரஞ்செறிந்த போராட்டம் முதல் இன்றுவரை நாம் நடத்திய
இயக்கங்களின் விளைவாக அரசு அறிவித்துள்ளது. ஏற்கனவே 83 அரசு கலைஅறிவியல் கல்லூரியும், 139
அரசு உதவிபெறும் கல்லூரியும், 496 சுயநிதிக் கல்லூரியும் என மொத்தம் 718 கல்லூரிகள் உள்ளன.
அதுபோக 11 உடற்கல்விக் கல்லூரி, 734 கல்வியல் கல்லூரிகள், 4 ஓரியண்டல் கல்லூரிகளும் உள்ளன.
மேலும் பள்ளிக்  கல்லூரிகள் என மொத்தம் 5000 மேற்பட்ட அரசு விடுதிகள் உள்ளன.
அரசுக் கல்லூரிகளை பொருத்தவரை திறமையான ஆசிரியர்கள் இருந்தாலும், போதிய
எண்ணிக்கையில் இல்லை கிட்டத்தட்ட 4500 மேற்பட்ட ஆசிரியர் காலிப்பணியிடம் நிரப்பப்படாமல்
உள்ளது. பல உட்கட்டமைப்பு வசதிகள் இல்லை. இருக்கும் கட்டடமும் பழுதடைந்து காணப்படுகிறது.
 போதிய அலுவலக பணியாளர்கள், துப்புரவு பணியாளர்கள் இருப்பதில்லை. விளையாட்டு உபகரணம்,
அறிவியல் உபகரணம்இருப்பதில்லை. இருக்கும் அறையை பல கல்லூரிகளில் பூட்டிவைப்பதும் நடக்கிறது.

இன்றளவிலும் கழிவறை வசதி எண்ணிக்கைக்கும் ஏற்ப உத்தரவாதப்படுத்தவில்லை. மாணவர்களின்
ஜனநாயக உரிமை அறவே அனுமதிப்பதில்லை.
தனியார் கல்லூரிகள் மற்றும் பொறியியல் கல்லூரிகளில் மாணவர்கள் கடுமையான அடக்கு
முறைகளுக்கு உள்ளாகிறார்கள். அதே போல் மாணவர்கள் தற்கொலைகளும் கடந்த பத்தாண்டில்
மட்டும் தமிழகத்தில் தொடர்ந்து அதிகரித்து வந்துள்ளது.

-க.நிருபன் (ஆகஸ்ட் 2018)

No comments:

Post a Comment