Wednesday, January 8, 2020

டிரம்பின் அடாவடித்தனமும், ஈரானின் தற்காப்பும்; அமைதியும் போரும் யார் கையில்

டிரம்பின் அடாவடித்தனமும், ஈரானின் தற்காப்பும்; அமைதியும் போரும் யார் கையில்

கடந்த சில தினங்களுக்கு முன் உலகமே அதிர்ந்த ஒரு கோரமான சம்பவம் அரங்கேறியது.  அமெரிக்க ஆளில்லா விமானம் மூலம் இராக்கெட் குண்டுகளை ஏவி ஈரானின் மிக உயரிய இராணுவ அதிகாரிகள் 14 பேர் அநியாயமாக படுகொலை செய்யபட்டார்கள். அதில் ஈரானிய மக்களின் நம்பிக்கைக்குரிய ஈரான் அரசின் புரட்சிப்படை தளபதியாக இருந்த காசம் சுலைமானீ படுகொலையும் அடங்கும். இந்த படுபாதக செயலை செய்துவிட்டு டிரம்பின் இரத்தம் சொட்டும் பற்களால் மத்திய கிழக்கில் அமெரிக்க அரசு அமைதியை விரும்புவதாகவும் நேட்டோ நாடுகள் இவ்விவகாரத்தில் தலையிட வேண்டும் எனவும் கொக்கரித்தார்.

ஈரான் நாடாளுமன்றம் அந்நாட்டு மக்களின் உணர்வை மட்டுமல்ல உலக மக்களின் மனசாட்சியாக இருந்து ஒரு துணிச்சல் மிக்க தீர்மானத்தை ஏகமனதாக நிறைவேற்றியது. அது அமெரிக்காவின் இராணுவ தலைமையகமான பென்டகனை பயங்கரவாத அமைப்பாக அறிவித்த நடவடிக்கையாகும். அதே கையோடு தளபதி காசம் சுலைமானியின் இறுதி ஊர்வலத்தை 30 கி.மீ தூரத்திற்க்கு 10 இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் திரளினிடையே நடத்தி அத்தேசமே கண்ணீர் அஞ்சலியை செலுத்தி இறுதியடக்கம் செய்தது.



ஒரு இறையாண்மை மிக்க தேசத்தின் இராணுவ தளபதியை உப்புசப்பில்லாத சில காரணங்களை சொல்லி படுகொலை செய்துள்ள அமெரிக்க அரசின் அடாவடிதனத்தை, சண்டித்தனத்தை, கோழைதனமாக ஜேஎன்யு மாணவர்களை தாக்கிய ஆர்எஸ்எஸ் கும்பலை போன்று எந்தவொரு முன்னறிவிப்புமின்றி பேடித்தனமாக செய்த இந்த நடவடிக்கைகளை எந்த முதலாளித்துவ நாடுகளும் கண்டிக்கவில்லை.



தற்போது ஈரான் தனது நாட்டிற்கு அச்சுறுத்தலாக இருக்கும் தனது நாட்டிற்குள்ளேயே ஊடுருவி மிரட்டிவரும் அமெரிக்க தளங்களை தற்காப்பிற்காக தாக்கியதும் உலகின் மிகப்பெரும் அறிவிஜீவிகள் வெகுண்டெழுந்து அமைதியை நிலைநாட்ட வாய்திறந்துள்ளனர். மேலும் மூன்றாம் உலகப்போர் ஏற்படபோவதாக கப்சாவிடுகிறார்கள்.

உண்மையில் யார் அமைதியை ஏற்படுத்த முடியும் பலமிக்க ஒரு மனிதன் பச்சிளம் குழந்தையின் மீது கால்களால் அழுத்தும்போது யார் அமைதியை ஏற்படுத்த முடியும். உலகை பலமுறைகளுக்குமேல் தரைமட்டமாக அழிக்கும் அளவிற்கான ஆயுதங்களை கொண்டுள்ள மூர்க்கதனமான வெறிபிடித்த மிருகமான அமெரிக்காவின் பக்கம் உங்கள் கையை ஒரு முறை நீட்டி கண்டியுங்கள் ஒன்றும் குறைந்துவிடாது என்ன சில எழும்பு துண்டுகள் குறையலாம். 

ஈரான் ஒன்றும் அமெரிக்க அடிமை அரசுகள் போல் இல்லை தனது நாட்டின் இறையாண்மை மிக்க மக்களின் உணர்வுகளை பிரதிபலித்து வருகிறது. தனது நாட்டின் மீதான பொருளாதார தடைகளையும் மீறி இந்தியா தனக்கான கச்சா எண்ணெய்களை அமெரக்க டாலரில் அல்லாமல் இந்திய ரூபாய்களிலேயே வாங்கிக் கொள்ளலாம் என நமக்கு ஆதரவு அளிக்கும் நாடுதான் ஈரான். அல்கொய்தா, தாலிபான், ஐஎஸ்ஐஎஸ் போன்ற பயங்கரவாத அமைப்புகளை கண்டு அதை தோற்றுவித்த அமெரிக்க நேட்டோ படைகளே பயந்து நடுங்கிய போது அதன் கொட்டத்தை ஒட்ட ஒட்ட ஒடுக்கியது ஈரானும் அதன் தளபதி சுலைமானீயும் தான்.

ஈரான் தேசம் தனது யுரேனிய செரிவூட்டல் நடவடிக்கைகளை உலக நாடுகளின் தோழமையான கோரிக்கையை ஏற்று நிறுத்தியது. முப்பதாண்டுகளுக்குபின் அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தைகளை துவங்கியது. அணுவாய்த ஒப்பந்தத்தில் அமெரிக்காவோடு கையெழுத்திட்டது என பல வழிகளில் உலகின் ஜனநாயக காக்கும் நடவடிக்கைகளில் தன்னை அற்பணிப்புடன் இணைத்துக் கொண்டது.

மேலும் ஈரானின் இது போன்ற ஆக்கபூர்வ நடவடிக்கைகளை பார்த்து அமெரிக்க அடிமை அரசுகள் சவுதி உள்ளிட்டு ஈராக், சிரியா இன்னும் சில அரபுநாடுகள் என மத்தியக்கிழக்கின் பல நாடுகள் நட்புபாராட்ட ஊர் ஒன்றுபட துவங்கியது. இது அமெரிக்க படைகளின் தேவையை குறைத்துவிட்டது. அமெரிக்காவின் பித்தளாட்டம் அணு ஆயுதம், பேரழிவாயுதம், போர்குற்றம், அமைதி, பாதுகாப்பு போன்ற பசப்பு வார்த்தைகள் பாசாங்குதனங்கள் தோலுரிய துவங்கியது.

அமெரிக்க மக்களும் எதிர்கட்சிகளான ஜனநாயக கட்சியும் கூட மத்தியக்கிழக்கிலிருந்து இராணுவ துருப்புகளை பின்வாங்க கூறிவருகிறார்கள். பென்டகனும் டிரம்பை அறிவற்ற முட்டாளாக கருதுவது உலகறிந்த உண்மை. நேற்றைதினம் கூட அமெரிக்க நாடாளுமன்றத்தில் டிரம்ப் ஈரான் மீதான போர் குறித்து முடிவெடுக்க கூடாது என ஜனநாயக கட்சி தீர்மானம் கொண்டுவந்துள்ளது.



இப்படியான நடவடிக்கைகளோடு ஈரானின் குழாய் வழியில் உலக நாடுகளுக்கு எண்ணெய் விநியோக திட்டத்தையும், ஈரானின் புதிய எண்ணெய் வயல் கண்டுபிடிக்கபட்ட நிகழ்வையும் இணைத்து பார்த்தால் எளிதாக புரிந்துகொள்ள முடியும்.

அமெரிக்க நேட்டோ பயங்கரவாத கும்பல்கள் தங்கள் இலாபவெறிக்காக எண்ணெய் வயல்களை சுவைக்க எடுக்கும் நடவடிக்கைகளை பின்வாங்க வேண்டும். மத்தியக்கிழக்கு நாடுகளை அவர்களே தங்கள் மக்களின் விருப்பத்திற்கு ஏற்ப ஜனநாயகபூர்வ வழியில் ஆண்டு கொள்ள அனுமதிக்க வேண்டும். அமெரிக்க உளவுபிரிவான சிஐஏ வின் மூலம் மத்தியகிழக்கு மக்களின் கழிவறைகளை எட்டிபார்பதை கைவிட வேண்டும். அமைதிக்கான சூழலும் இதன் மூலம் இயல்பாகவே ஏற்பட துவங்கும்.

இந்திய அரசு தற்போது அமைதி குறித்து பேசியிருப்பது ஆறுதல் தான் அது நாம் மேற்சொன்ன வகையில் தெளிவாக பேச வேண்டும். மேலும் ஈரானோடு தனது நட்பை பலப்படுத்த, பொருளாதார சரிவை பாதுகாக்க குழாய்வழியான எண்ணெய் திட்டத்தில் இணைந்திட நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒரு மக்களுக்கான அரசின் உணர்வை மதித்து அவர்களுக்கு நாம் துணைநிற்க வேண்டும்.

ஈரான் பாக்தாத்தில் ஏவுகணைகளை வீசியதும் அமெரிக்காவின் அதிபர் டிரம்பின் குரல் மட்டும் நடுங்கவில்லை ஒட்டு மொத்த உலக பொருளாதரமே அதிர்வானது. இந்தியாவின் அனைத்து பங்குகளும் சரிந்தது தங்கம் விலை கிடுகிடுவென உயர்தது. இது மேலும் ஏற்படாமல் இருக்க அனைவரும் அமெரிக்க அரசை பார்த்து அவர்களின் ஏகாதிபத்திய வாலை சுருட்டி கொண்டு அமைதியாக இருக்க சொல்வதுதான் பொருத்தமாக இருக்கும்.

-க.நிருபன் சக்கரவர்த்தி

#Iran #USA #War #ஈரான் #அமெரிக்கபடை # சுலைமானீ #அமைதி #peace #ஏகாதிபத்தியம் #கச்சாஎண்ணெய் #தங்கம்விலை #பெட்ரோல்டீசல் #வளைகுடாநாடுகள் # மத்தியகிழக்கு


No comments:

Post a Comment