ஊரடங்கு காலத்திலும் மாணவர்கள் மீது பாயும் உபா அடக்குமுறை சட்டம்; மத்திய அரசின் தீராத பாசிச வெறி!
27 வயதான ஜாமியா மிலியா இஸ்லாமியா பல்கலைக்கழக மாணவி சபூரா சர்கார் கடந்த ஏப்ரல் 10தேதி முதல் திகார் மத்திய சிறையில் உபா (யுஏபிஏ-சட்டவிரோத செயல் தடுப்பு சட்டம்) கருப்பு சட்டத்தின் கீழ் அடைக்கப்பட்டுள்ளார். மூன்றுமாத கற்பிணியான சபூராவின் மீது டெல்லி காவல்துறை புனைந்துள்ள குற்றச்சாட்டு என்பது கடந்த பிப்ரவரி இறுதியில் டெல்லி வடகிழக்கு பகுதியில் நடந்த வன்முறைக்கு காரணமாக இருந்தார் என்பதாகும். தற்போது சபூராவை விடுதலை செய்யக்கோரி சமூக வலை தளங்களில் கூட குரல் எழுந்துவருவதை அறிந்திருப்பீர்கள்.
கொரோனாவின் கொடுமைகளுக்கு மத்தியில் இத்தகைய கைது நடவடிக்கைகள் தொடர்ந்தது. கடந்த ஏப்ரல் 14ம் தேதி அண்ணல் அம்பேத்கரின் பிறந்த தினத்தில் மனித உரிமை செயற்பாட்டளர்களும், அம்பெத்கரிய சிந்தனையாளர்களுமான ஆனந்த்டெல்டும்டே, கெளதம்நவ்ளகா ஆகியோரும் இதே சட்டத்தின் கீழ் கைது செயப்பட்டனர். கைது செய்யப்படுவதற்கு எதிராக உலகமுழுவதிலும் எதிர்ப்பு எழுந்தது, ஏன் மாமேதை டாக்டர் அம்பெத்கரின் வீட்டிலும் கூட அவரின் பிறந்த தனதன்று கருப்பு கொடியை ஏற்றி துக்கநாளை அனுசரித்தார்கள். ஆனால் வழக்கம் போல் மத்திய அரசு அம்பெத்கரின் சிலைக்கு மாலை அணிவிப்பதோடு நிறுத்திக்கொண்டது. அவர்களின் கைதுக்கு எதிரான எதிர்ப்பை துளிகூட செவிமடுக்கவில்லை.
அதனை தொடர்ந்து ஏப்ரல் 20ம் தேதி தில்லி காவல்துறை தில்லியின் வடகிழக்கு பகுதியில் நடந்த வன்முறைக்கு காரணமாக இருந்தார்கள் என கூறி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவர் உமர்காலித், ஜாமியா மிலியா இஸ்லாமியா பல்கலைக்கழக மாணவர்கள் குல்பிசா, மீரான் ஹதர், இஸ்லாமிய அமைப்பை சார்ந்த இஸ்ரத் ஜகான், காலித் சைபா மற்றும் ஏப்ரல் 26ல் ஜாமியா பல்கலையின் முன்னாள் மாணவர் கூட்டமைப்பின் தலைவர் சைபா அர் ரஹ்மான், இதே காரணத்திற்காக ஜம்மு காஸ்மீர் காவல்துறையும் மஸ்ரா ஜாரா என்ற ஊடகவியலாளரையும் கைது செய்துள்ளது. மேலும் பல மாணவர்கள் காவல் துறை மற்றும் என்.ஐ.எ என சொல்லக்கூடிய தேசிய புலனாய்வு முகமையின் கண்கானிப்பிலும், கட்டுப்பாட்டிற்குள்ளும் வந்துள்ளனர். அனைத்திந்திய மாணவர் கழகத்தின் தில்லி மாநில தலைவர் கபால் பிரித் அவர்களின் கைபேசி உள்ளிட்ட உடைமைகள் அனைத்தும் பரிசோதனைக்குட்படுத்தி வழக்கு பதிவு செய்துள்ளது. இந்த நடவடிக்கை தொடர்ந்து வரும் சூழலில் மத்திய உள்துறை அமைச்சகம் இது துவக்கம் தான் என கூறியுள்ளது.
திறந்த மடல்
ஆனந்த் டெல்டும்டே அவர்கள் தேசிய புலனாய்வு முகமையால் கைது செய்யப்படும் போது நாட்டு மக்களுக்கு “திறந்த மடல்” எனும் கடிதத்தை வறைந்தார். அதில் மும்பை காவல் துறையாலும், மத்திய அரசின் புலனாய்வு முகமையாலும் எந்த அளவிற்கு நெருக்கடிக்குள்ளானார் என்றும், சுதந்திரமான வாழ்கை பறிக்கப்பட்ட அவர் குடும்ப சூழலையும் விளக்கிவிட்டு இறுதியாக “உங்கள் முறை வருவதற்குள் பேசிவிடுங்கள்” என கூறியிறுந்தார். அவரின் கடிதத்தில் உள்ள உண்மைகள் நாளுக்குநாள் விளங்கி வருகிறது. கைது நடவடிக்கையும் துவக்க நிலையில் இருப்பதாக உள்துறை அமைச்சகம் கூறுவதையும் புறிந்து கொள்ள முடியும்.
பீமாகோரேகான் வன்முறை ஆர்.எஸ்.எஸ். அமைப்பை சார்ந்த மிலின்ட் ஏக்போட்டே, சம்பாஜி பைட்டே ஆகியோர் தலைமையில் எப்படி நடைபெற்றதோ அதே போல் தில்லி வடகிழக்கு பகுதியின் வன்முறையும் பிஜேபி தலைவர் கபில் மிஸ்ரா தலைமையில் நடைபெற்றது. சமீபதில் நடந்து முடிந்த தில்லி மாநில தேர்தலில் வெற்றி பெற்ற எட்டு பிஜேபி சட்ட மன்ற உறுப்பினர்கள் அவர்கள் சார்ந்த தொகுதிவாரியாக பொறுப்பெடுத்து வன்முறையை நிகழ்த்தினர். கோத்ரா சம்பவத்தை தொடர்ந்து குஜராத் முழுவதும் அமித்ஷா காவல்துறையை தனது கட்டுபாட்டில் கொண்டு வந்து எப்படி ஒரு மிகக் கொடூரமான இனப்படுகொலையை நிகழ்த்தினார்களோ அதே போல் தில்லியின் காவல்துறை கபில்மிஸ்ராவின் கட்டுபாட்டுக்குள் வந்தது. பிப்ரவரி 23ல் துவங்கிய வன்முறை தொடர்ந்து அதிகரித்து வந்தது டிரம்பின் வருகை கலவரக்காரர்களுக்குச் சாதகமாக அமைந்தது. அனைத்து ஊடகங்களும் மோடி டிரம்பின் ஒப்பனைமிகு நாடகத்தை செய்தியாக்குவதில் மும்முரமாக இருந்தார்கள்.
இக்கலவரத்தை நிறுத்த வேண்டுமென தில்லியின் வீதிகளில் மாணவர்கள் அலைஅலையாக இரவு பகலும் போராடிக்கொண்டிருந்தார்கள். ஆனால் உரக்கத்தில் இருந்த தில்லி மாநில அரசும், முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலும் விழித்துக் கொண்டு பாதிக்கபட்ட மக்கள் பற்றியோ, கலவர்த்திற்கு காரணமானவர்கள் பற்றியோ எதுவும் கூறாமல் உள்துறை அமைச்சர் அமித்ஷாவிற்கு இராணுவத்தை வரவழைக்க கோரி கோரிக்கைவிடுதார். இஸ்லாமியர்கள் மீது திட்டமிட்டு நடத்தப்பட்ட இந்த வன்முறையில் 54 பேர் உயிரிழந்ததாகவும், 200 மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் மத்திய அரசின் அறிக்கை சொல்கிறது. இன்று வரை பலர் வீடுகளை உடைமைகளை இழந்து நடுத்தெருவில் ஆடைகள்கூட இல்லாமல் தவிக்கும் அவலம் நீடிக்கிறது.
பாதிக்கப்பட்டவர்களையே தண்டிப்பது
இவ்வன்முறைக்கு காரணமென கூறி தில்லி காவல்துறை 800 பேர்வரை கைது செய்து விசாரித்து வந்தது அந்த விசாரனைகளின் அடிப்படையிலேயே தற்போது மாணவர்களும், பேராசிரியர்கள் மற்றும் ஊடகவியலாளர்களும் கைது செய்யப்படுவதாக தில்லி காவல்துறை கூறியுள்ளது. ஜேஎன்யு பல்கலைக்கழக வன்முறையில் பாதிக்கப்பட்ட மாணவர் பேரவை தலைவர் ஆயிசி கோஸ் மீது எப்படி வழக்கு புனைந்ததோ அதே வகையில் தான் தாக்குதலுக்குள்ளான இஸ்லாமிய அப்பாவிகளையும், இஸ்லாமிய மாணவர்களையுமே காரணம் என கைது செய்துள்ளது.
காலனிய காலத்தில் ஆங்கிலேயர்களால் சுதந்திர போராட்டத்தை ஒடுக்க கொண்டுவரபட்ட பல கருப்பு சட்டங்களை போல் இன்றும் பல்வேறு வகையில் இந்திய அரசு அச்சட்டங்களை தொடர்ந்து வருகிறது. 1967ல் கொண்டு வரபட்ட இந்த உபா- சட்டவிரோத செயல் தடுப்பு சட்டம் 2004, 2008, 2012 காலகட்டங்களில் பல்வேறு மாற்றங்களுக்கு உள்ளாக்கப்பட்டு பொடா, தடா சட்டத்திற்கு மாற்றாகவே உருவெடுத்தது. 2019ல் இரண்டாவது முறையாக பிஜேபி அரசு பொறுப்புக்கு வந்த பிறகு என்.ஐ.ஏவின் கரத்தை வலுசேர்க்க உபா சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்பட்டது. மக்களவை, மாநிலங்களவை என இரு அவைகளிலும் இச்சட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கட்சி உள்ளிட்ட இடதுசாரி மற்றும் இஸ்லாமிய கட்சிகளின் எம்பிக்கள் மட்டுமே எதிர்ப்பு தெரிவித்தனர்.
இச்சட்டத்தின் பிரிவு 35-ன் படி எந்த அமைப்பையும் தீவிரவாத அமைப்பாக அறிவித்து அதன் அனைத்து உறுப்பினர்களையும் தீவிரவாதிகளாக கருதி கைது செய்ய முடியும். மேலும் அவ்வாறு தடைசெய்யப்படும் அமைப்பின் துண்டு பிரசுரங்கள், வெளியீடுகளை வைத்திருந்தாலோ அல்லது ஆதரவாளராக இருந்தாலோ கைது செய்யப்படலாம். சில வழக்குகளில் மார்க்ஸ் எங்கல்சின் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை வைத்திருந்ததற்காக கூட கைது செய்யப்பட்டுள்ளனர். அந்தவகையில் எந்த இலக்கியத்தையும் தடைசெய்யப்பட்டதாக அறிவிக்க முடியும். இந்த சட்டத்தின் பிரிவு 43-ன் படி கைது செய்யப்பட்டவர்களை 30 நாட்கள் வரை போலீஸ் காவலிலும், 90 நாட்கள் வரை எவ்வித விசாரணையுமின்றி நீதிமன்ற காவலிலும், 180 நாட்கள் வரை குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யாமல் சிறையிலும் அடைத்து வைக்க முடியும். தனி நீதிமன்றத்தில் எந்தவித வெளிப்படைத் தன்மையுமின்றி நடைபெறும் விசாரணையில் குற்றமென நிரூபிக்கப்பட்டால் 7 ஆண்டுகள் வரை தண்டனை வழங்கப்படும். மேலும் அதே 43-ன் பிரிவின் கீழ் கைது செய்யப்பட்டவர் ஜாமினில் வெளிவருவது இயலாத காரியமாகும். 35-40 வரை உள்ள எந்த பிரிவும் எது தீவிரவாதம் என குறிப்பிடாததால் எந்த அமைப்பையும், தனிநபரையும் இச்சட்டத்தின் கீழ் சட்டவிரோதமானது எனக்கூற முடியும்.
இச்சட்ட திருத்தம் கொண்டு வரும்போது மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்கள் நாடளுமன்றத்தில் “துப்பாக்கிகள் வன்முறைகளை உருவாக்குவதில்லை, அத்தகைய இலக்கியங்களே வன்முறையை உருவாக்குகிறது” என்றார். ஆர்.எஸ்.எஸ். சனாதனவாதிகளின் சிந்தனை மறுப்பும், இலக்கியங்கள், அறிவு மீதான வன்மத்தையும் இதிலிருந்து புரிந்துகொள்ள முடியும். எனவே தான் இவர்கள் எழுத்தாளர்களை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றவர்களையும், கலவரத்தில் போலீசின் உதவியோடு மக்களையும் மாணவர்களையும் நோக்கி துப்பாக்கியால் சுட்ட ஆர்.எஸ்.எஸ். ஆட்களையும் தவிர்த்து பாதிக்கப்பட்டவர்களையே கைதுசெய்து வருகிறது.
சர்வதேச மனித உரிமைக்கு எதிரானதும், இந்திய அரசியல் அமைப்பு சட்டம் பிரிவு 19 வழங்கியுள்ள உரிமைகளுக்கு எதிரான இச்சட்டத்தை விமர்சிக்கும் முன்னாள் உயர் நீதிமன்ற நீதிபதி அரிபரந்தாமன் அவர்கள் “இச்சட்டம் தனிநபர் சுதந்திரத்திற்கு மட்டுமல்ல அடிப்படை உரிமைகளுக்கே எதிரானது. சகல அதிகாரங்களையும் அரசு தன்வயப்படுத்துவது ஆபத்தான போக்கு. இது, மாற்றுக்கருத்து கொண்ட யாரையெல்லாம் அரசு தனக்கு எதிரியாக நினைக்கிறதோ, அவர்களை ஒடுக்கவே பயன்படும். அரசே தீர்பளிக்கும் அதிகாரத்தை எடுத்துக்கொண்டு செயல்படுவது அரசியலமைப்பின் அதிகாரப் பகிர்வைச் சீர்குலைப்பதோடு மட்டுமல்லாமல் குற்றம் நிரூபிக்கப்படும் வரை நிரபராதி என்பதை ‘Guilty unitil proven innocent’ என நிரபராதியே நிரூபிக்கும் வரை குற்றவாளி என்பது சட்ட விசாரணையின் அடிப்படையையே மாற்றுவதாக அமைகிறது” என்கிறார். எனவே இந்திய மக்களின் ஜனநாயக உரிமைக்கு எதிரான இந்த காலனியகால அடக்குமுறை சட்டத்தை திரும்பபெறுவதோடு, தொடர் கைது நடவடிக்கைகளை நிறுத்த வேண்டும். இதுவரை கைது செய்யப்பட்ட மாணவர்கள், பேராசிரியர், ஊடகவியளாலர்கள் மற்றும் ஆனந்த் டெல்டும்டே, கெளதம் நவ்லகா போன்ற எழுத்தாளர்களையும் விடுதலை செய்ய வேண்டும்.
04.05.2020
க.நிருபன் சக்கரவர்த்தி
மாநில துணைத்தலைவர்
இந்திய மாணவர் சங்கம்
No comments:
Post a Comment