அதிபரைச் சந்திக்க க்ரெம்லின் மாளிகையில் முக்கிய அதிகாரிகளும் அரசியல் பொறுப்பில் இருந்தவர்களும் வெகுநேரம் காத்துக் கொண்டிருந்தார்கள்..
ஆனால் அவரோ இரண்டு மணி நேரமாக யாரோ ஒருவரோடு பேரார்வத்துடன் உரையாடியபடி குறிப்புகளும் எடுத்துக் கொண்டிருந்தார்..
அவரோடு பேசிக் கொண்டிருப்பவர் மிக முக்கிய நபர் என்று காத்திருந்தவர்கள் அனைவரும் யூகித்துக் கொண்டனர்..
உரையாடல் முடிந்து வெளியே வந்தது கசங்கிய உடையுடன் காட்சி அளித்த ஒரு குலாக்(விவசாயி).. அவ்விவசாயியை ஆதுர தழுவி அனுப்பிவிட்டு காத்திருந்தவர்களை சந்திக்க துவங்கினார் அவர்...
அதே தலைவரைத்தான் பின்னொருநாளில் H G Wells சென்று சந்தித்தார்..அவருடனும் அதே பேரார்வத்துடன் உரையாடி பத்து ஆண்டுகளுக்குள் தன் நாட்டின் மின்சாரத் தேவையை பூர்த்தி செய்து விடுவதாகச் சொல்லி அதிர்ச்சி அளித்தவர்...
அவ்வாறே செய்தும் காட்டியவர்...
கண்டதும் சுட்டுத்தள்ள அரசு உத்தரவிட்டிருந்த காலத்திலும் பின்லாந்து பாதிரியார் உடையணிந்து நகர காவல் ஆணையரின் வீட்டிலேயே ஒளிந்து தங்கிக்கொண்டே புரட்சியை முன்னெடுத்த சாகசக்காரரும் கூட ..
தான் ரகசியமாய் புகை வண்டியில் பயணம் மேற்கொண்ட போது சுற்றிச் சூழ்ந்து கொண்ட காவலர்களின் கண்களில் தப்பி அதே புகைவண்டியில் கரி தள்ளுபவனாக உருமாறி தப்பிக்கும் அளவிற்கு அந்த புகைவண்டி தொழிலாளிகளின் மனதையும் வென்றவர்..
பக்கத்து நாடுகளில் ராட்சச கொசுக்கள் கடிக்கும் வனாந்தரங்களில் தங்கியபடியே வெட்டுபட்ட மரங்களை மேசையாகக் கொண்டு அவர் எழுதிய கட்டுரைகள், அறிக்கைகளை அவர் துவக்கிய பத்திரிக்கையான இஸ்க்ரா(தீப்பொறி), மூலம் நாடு கடத்தி தன் நாட்டிலே அக்கினி குஞ்சுகளாய் பற்ற வைத்தவர்...
தான் அதிபரானபின்பு ஒரு பெண்ணால் சுடபட்டு மயங்கி விழும் வேளையிலும் அப்பெண்ணை பாதுகாக்குமாறு சொல்லிவிட்டு மருத்துவமனை சென்றவர்...
மக்ஸிம் கார்க்கி போன்ற இலக்கிய படைப்பாளிகள் இன்றி தன் தேசம் புரட்சியை சாதிக்க முடியாது என்பதை வெளிப்படையாக சொன்ன அந்த தலைவர்தான் டால்ஸ்டாயையும் உள்வாங்கிக் கொண்டவர்...
இத்தனை புரட்சிகர நடவடிக்கைகளுக்கும் ஊடாக குருப்ஸ்கயா என்ற பெண்ணோடு காதல் வயப்பட்டு, கொடுங்குளிர் சைபீரியச் சிறையில் அடைக்கப்பட்டபோது, அவள் தன் தாயோடு பன்றி இறைச்சி கொழுக்கட்டைகளை மடியில் சுமந்து தன்னை சந்தித்து செல்லுமளவிற்கு அப்பெண்ணோடு காதல் தீயை வளர்த்தவர்..
ஒரு சாதாரண நம்மூர் தாலுகா அளவிலான கல்வி அதிகாரியின் மகனாகப் பிறந்து அறிவார்ந்த கனிவான தாய், கண்டிப்பான தந்தையின் கீழ் வளர்ந்து தன் பால பருவத்திலேயே தன் உடன் பிறந்த அண்ணன் ஒரு தீவிரவாத இயக்கத்தோடு தொடர்பில் இருந்தான் என்பதற்காக தன் தெரு அருகே உள்ள மின் கம்பத்தில் அரசால் தூக்கிலிடப்பட்டதை கண்ணுற்ற துர் வாய்ப்பு பெற்றவர்..
அத்தலைவன்தான், பேரரசன் ஜார் அவன் மனைவி ஜாரினி, அவளுடைய ரகசிய நண்பன் ரஸ்புடின் என்னும் மதகுரு ஆகியோர்கள் பெரும் நிலக்கிழார்களான ரசாக்குகளோடு சேர்ந்து ஏழை விவசாயிகள், தொழிலாளர்கள் மீது காட்டிய அதிகார வெறியாட்டத்தை வேரறுத்தவர்...
ஜாரெனும் பேரரக்கன் அலறி வீழ்ந்தான்... ஆஹாவென்று எழுந்தது பார் யுகப்புரட்சி என்ற நம் பாரதியின் செவ்விய வரிகளின் நாயகன்தான் அவர்...
விளாதிமிர் உல்லியனோவ் இலீச் லெனின்...
அவரின் நினைவு நாள் இன்று...
Lakshmi RS பதிவில்
No comments:
Post a Comment