சோசலிசமே இலக்கு
"சமூக அவலங்களை எதிர்த்து பொதுவாழ்வில் உரிமைக்காக போராடும் எங்களை பொருளை வாங்க-விற்க வந்த நுகர்வு கலாச்சார பார்வையில் பார்க்கக் கூடாது. பணக்காரர்களுக்கு ஒரு நீதி, ஏழைக்கு ஒரு நீதி, சிலியின் சமத்துவமின்மையால் ஏழைகள் பாதிக்கப்படுவதை இனியும் அனுமதிக்க மாட்டோம்."
38 ஆண்டுகளுக்கு பிறகு சிலியில் மீண்டும் இடதுசாரி அரசை உருவாக்கவுள்ள கேப்ரியல் போரிக் மாணவ தலைவராக இருக்கும்போது எழுப்பிய முழக்கங்கள் தான் இவை.
கடந்த பத்தாண்டுகளில் உலகம் முழுவதும் ஏற்பட்ட நிதி மூலதனத்தின் கடுமையான நெருக்கடி உலக அரசியலை கடும் வலதுசாரி திருப்பத்தை நோக்கி கொண்டு சென்றது. டொனால்ட் ட்ரம்ப், போரிஸ் ஜான்சன், போல்சனரோ, நரேந்திர மோடி போன்ற அதிதீவிர வலதுசாரி எண்ணம் கொண்ட அரசியல் தலைவர்கள் முன்னுக்கு வந்தனர்.
அதேசமயம் நவதாராளமய கொள்கையை எதிர்த்து, கடும் உழைப்பு சுரண்டலுக்கு எதிராக, கொரோனா காலத்தில் முதலாளித்துவ சுகாதார கட்டமைப்பின் தோல்வியை எதிர்த்து சமூக உரிமைகளுக்காக உலக மக்கள் நடத்திய போராட்டங்கள் உலக அரசியலை ஆட்டம் காண செய்தது. சோசலிச அரசுகளின் பொதுமக்கள் நலன்சார்ந்த அரச கட்டமைப்புக்கும், முதலாளித்துவத்திற்க்கும் இடையிலான முரண்பாடு தெளிவாக வெளிப்பட்டது.
அரசியலில் உள்ள யாவரும் மக்கள் நலனை, ஜனநாயகத்தை, சோசலிசத்தை பேசவேண்டிய நிலைமைக்கு அரசியல் நகர்த்துள்ளது. இந்த கடும் நெருக்கடி முதலாளித்துவ நாடுகளின் இயலாமைக்கு சோசலிசமே மாற்று எனும் நிலை முன்னுக்கு வந்துள்ளது.
கல்வி வியாபாரத்திற்கு எதிராக உலகம் முழுவதும் மாணவர் போராட்டம் அதிகரித்துள்ளது. மேலும் மாணவர்கள் தங்கள் அடிப்படை உரிமைகளுக்காக மட்டுமின்றி பொதுமக்களின் நலன் சார்ந்த கோரிக்கைகளிலும் பெருந்திரளாக பங்கெடுப்பது அதிகரித்துள்ளது. இந்தியாவில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து மாணவர்களின் போராட்டம் குறிப்பிடத்தக்கது. விவசாயிகளின் வீரம் செறிந்த ஓராண்டு போராட்டத்தில் மாணவர் சங்கங்கள் இறுதிவரை உடன் நின்றது.
இத்தகைய போராட்டங்களில் முன்னிற்க்கும் மாணவர்களை கைது செய்வதும், ஆர்.ஆர்.எஸ். அடியாட்கள் ஏபிவிபி கொண்டு தாக்குவதும் நிகழ்ந்தது. குறிப்பாக ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் மாணவர் பேரவை தலைவரும், இந்திய மாணவர் சங்கத்தின் உறுப்பினருமான ஆயிஷி கோஷ் உள்ளிட்டு பலர் கடுமையாக தாக்கப்பட்டார். உடல்முழுவதும் இரத்த காயங்களோடு அடுத்தநாள் போராட்டத்திலும் பங்கெடுத்தார். ஜாமியா மிலியா, அலிகார், டெல்லி பல்கலைக்கழகம், கெளஹாத்தி பல்கலைக்கழகம் என போராடிய மாணவர்கள் மீது 20,000 மேற்பட்ட வழக்குகள் போடப்பட்டது. என்.ஐ.ஏ. மூலம் ஆள்தூக்கி சட்டம் எனப்படும் யுஏபிஏ மூலம் எண்ணற்ற மாணவர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் இதுவரை இல்லாத வகையில் கடந்த ஐந்தாண்டுகளில் ஐந்தாயிரத்துக்கும் மேற்பட்ட வழக்குகள் மாணவர்கள் மீது மட்டும் போடப்பட்டுள்ளது. இதில் மாணவர் சங்க தலைவர்கள் ஒவ்வொருவர் மீதும் குறைந்தது இருபது வழக்குகள் புனையப்பட்டுள்ளது. திமுக தலைமையிலான முற்போக்கு ஜனநாயக கூட்டணி வெற்றிபெற மாணவர் போராட்டம் மிக முக்கியமான காரணமாகும். ஆனால் மாணவர்கள் மீதான பொய வழக்குகள் தொடர்ந்த வண்ணமே உள்ளது. சமீபத்தில் கோவையில் வேளாண் பல்கலைக்கழக குளறுபடிக்கு எதிராக போராடிய மாணவர்களை இரவு முழுவதும் சிறையில் அடைத்து காலையில் மாஜிஸ்டிரேட் உத்தரவால் வெளியிடப்பட்டனர். இதில் ஒரு மாணவி உள்ளிட்டு கைது செய்யப்பட்டு வழக்கு புனையப்பட்டுள்ளது. சில தினங்களுக்கு முன் ஒரக்கடம் ஃபாக்ஸ்கான் போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்களோடு பங்கெடுத்த மாணவர் சங்க தலைவர்களையும் கைது செய்து நான்கு நாட்கள் சிறையில் வைத்திருந்தது. ஆட்சியாளர்கள் யார் மாறினாலும் காட்சிகள் மாற அரசு இயந்திரம் மக்களுக்கானதாக மாற்றப்பட வேண்டும்.
பாண்டிச்சேரி மத்தியில் பல்கலைக்கழகத்தில் கட்டண உயர்வுக்கு எதிராக போராடிய மாணவர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். ஐஐடிகளில் தொடரும் சமூகநீதிக்கு எதிரான நடவடிக்கைகள், பல்கலைக்கழகம் உள்ளிட்ட கல்விதுறையில் இந்துத்துவா தலையீடு குறைந்தபாடில்லை. நீட் தேர்வு விலக்கு வரைவை இன்று வரை குடியரசுத் தலைவருக்கு அனுப்பாமல் ஆளுநர் இழுத்தடித்து வருகிறார். மாநில முதல்வர் ஒருசில சந்திப்போடு அமைதியாகியுள்ளார். பள்ளிகல்வி அமைச்சர் தேசியக்கல்வி கொள்கையில் நல்ல அம்சத்தை நடைமுறைபடுத்துவது குறித்து யோசிப்போம் என்கிறார். ஒன்றிய பாஜக அரசின் காவிகார்பரேட் கொள்கையை எதிர்ப்பதென்பது சமூக அரசியல் பொருளாதார கட்டமைப்பில் சமரசம் செய்து கொண்டு எதிர்க்க முடியாது. மக்களோடு, மாணவர்களோடு வீதியில் இறங்கி போராட வேண்டும். ஒன்றிய அரசின் மக்கள் விரோத சட்டங்களை அமல்படுத்த மறுக்க வேண்டும்.
மாணவர் தற்கொலை, பாலியல் சீண்டல் போன்ற கல்வி சூழலில் ஏற்பட்டுள்ள அவலங்களை மாற்றியமைத்திட பொதுக்கல்வியை பலப்படுத்த வேண்டும். ஆசிரியர்கள் தங்கள் பணியை சமூக அரசியல் பணியாக உணர வேண்டும். திமுக அரசு கடந்த 2007 ஆம் ஆண்டு நிறுத்திய மாணவர் பேரவை தேர்தல்களை மீண்டும் நடந்த வேண்டும். ஆரம்ப கல்விமுதல் ஆராய்ச்சி கல்வி வரை அரசே வழங்க வேண்டும். கல்வி மட்டுமின்றி சுகாதாரம், போக்குவரத்து, விவசாயம், கனிமவளங்கள், தொழிற்சாலை மற்றும் தொழில் வளர்ச்சியும் பொதுகட்டமைப்போடு இணைக்கப்பட வேண்டும்.
தேசம்முழுமைக்கும் ஒன்றிய அரசு எதிர்ப்பில் தமிழகம் முன்னிற்க்க மாணவர் போராட்டம் மிக முக்கியமானது. தேசியக்கல்வி கொள்கையை எதிர்த்து, நீட் தேர்வை எதிர்த்து தொடர் போராட்டங்களை முன்னெடுப்போம். 280க்கும் மேற்பட்ட மாணவர் தியாகிகளை நெஞ்சில் ஏந்தி சுதந்திரம், ஜனநாயகம், சோசலிசம் என்ற இலக்கை நோக்கி தொடந்து பயணிப்போம்.
இன்று (30.12.2022)இந்திய மாணவர் சங்கத்தின் 52வது அமைப்பு தினம்.
க.நிருபன் சக்கரவர்த்தி
மத்தியக்குழு உறுப்பினர்
இந்திய மாணவர் சங்கம்.
No comments:
Post a Comment