#ஹீராமண்டி #Heeramandi
The Diamond bazaar
#Netflix web series
"பெண்களை பொட்டு கட்டிவிடுதல், தேவரடியாளாக்குதல்'' எனும் தேவதாசி முறை (பாலியல் சுரண்டல்) போல ஒன்றுபட்ட இந்தியாவில் லாகூரின் நவாப்புகளால் உருவாக்கப்பட்ட தவாயுப் (#Tawayif) பெண்கள் (பாலியல் சுரண்டலில் தள்ளப்பட்டவர்கள்) வாழ்வையும், அவர்களுக்குள் நடக்கும் போட்டி, பொறாமை, வஞ்சம் என நகர்ந்து இறுதியில் ஆங்கிலேயர்களுக்கு ஆதரவாக இருக்கும் நவாப்புகளை உதரிவிட்டு விடுதலைக்காக இன்குலாப் முழக்கம் ஒலிப்பது வரை சிறப்பாக எடுக்கப்பட்டுள்ளது.
சஞ்சய் லீலா பன்சாலியின் இயக்கத்தில் நேர்த்தியாக எடுக்கப்பட்டுள்ள இந்த வெப்சீரிஸ் 8 எபிசோட்களாக ஏழுமணி நேரம் ஓடுகிறது. ஆங்கிலேயனுக்கு எந்த நவாப்புகள் அடிமைகளாக இருக்கிறார்களோ அவர்களின் பிள்ளைகளே புரட்சியில் ஈடுபடுவதும் அவர்களோடு தவாயுப் பெண்களும் வீதியில் இறங்குவதும் உணர்வுபூர்வமாக உள்ளது. இறுதியில் பிபோஜானாக வரும் அதிதி பிரிட்டிஸ் போலிசின் துப்பாக்கி முனையில் சுடப்படுவதற்கு முன் ''இன்குலாப்'' என முழங்க சிறைசுவற்றின் மறுபக்கத்தில் திரண்டிருக்கும் தவாயுப் பெண்கள் "ஜிந்தாபாத்" என முழங்கும் போது சிலிர்த்துவிடுகிறது. இப்படி வரலாற்றில் எத்தனையோ பெண்களின் வீரதியாகம் இன்னும் வெளிவராமலிருக்கும் என்ற கேள்வியும் எழுகிறது.
ஹீராமண்டியின் ஹொசூர்களில் (தலைவி) ஒருவராக வரும் மணீசா கொய்ராலா, ரெஹாணா மற்றும் பரீதாவாக வரும் சோனாக்சி என அனைவரின் நடிப்பும் சிறப்பாக உள்ளது. பழமையான இசை, அரண்மணை, உடை, ஆபரணங்கள் என அனைத்தும் இருபதாம்நூற்றாண்டின் துவக்கத்திற்கு அழைத்து செல்கிறது. சதத் ஹசன் மண்டோவின் (#Manto) கதைகள் ஏற்கனவே படித்திருப்பதால் பல கதைகள் கண்முன் வந்து போகிறது.