உலக அரசியல் சூழலில் கடந்த மூன்று ஆண்டுகளில் பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்துள்ளது. கடந்த
முப்பது ஆண்டுகளாக அமலில் உள்ள நவீன தாராளமய கொள்கைகளின் தாக்குதல் 2008 ஆம் ஆண்டு
முதல் கடும் நெருக்கடியாக உருவெடுத்தது இது உலக முதலாளித்துவ நாடுகளுக்குள் முரண்பாட்டை
அதிகரிக்கச் செய்தது. உலகளவில் ஏற்பட்டுள்ள இப்பொருளாதார நெருக்கடிகளை மக்களின் மீது திணித்து
அவர்களின் அன்றாட வாழ்க்கையை கேள்விக்குள்ளாக்கி உள்ளது. கடும் பொருளாதார
நெருக்கடிகளுக்கெதிராக மக்களிடம் ஏற்பட்டுள்ள அதிருப்தியையும் கோபத்தையும் வலதுசாரி பிற்போக்கு
அரசியலின் மூலம் ஆளும் அரசுகள் மடைமாற்றம் செய்து வருகிறது.
அமெரிக்க ஏகாதிபத்தியம்
அமெரிக்காவில் 2017 ல் நடைபெற்ற பொதுத்தேர்தலில் ஆளும் ஜனநாயக கட்சியின் அதிபராக
இருந்த பாரக் ஒபாமாவை வீழ்திய குடியரசுக் கட்சியை சார்ந்த டொனால்ட் ட்ரம்ப் மிக மோசமான
பிற்போக்கு அரசியலை முன்னெடுக்கிறார். அமெரிக்காவை பொறுத்தவரை மாறி மாறி ஆட்சி
செலுத்திவரும் இந்த இரண்டு கட்சிகளுக்கும் எந்த வேறுபாடுமில்லை. இரண்டு கட்சிகளும்
முதலாளிதுவத்திற்கு ஆதரவான வலதுசாரி அரசியலை கொள்கையாக கொண்டு செயல்படும் கட்சிகளே
ஆகும். தனது பாசிச இன மோதல் அரசியல் சித்தாந்தத்தின் மூலம் கடந்தாண்டு தலைமைப் பொறுப்பிற்கு
ட்ரம்ப் வந்தது முதல் வலதுசாரிகளின் மிகத் தீவிரமான பிற்போக்காளர்களின் தலைமை பாத்திரத்தை
செவ்வனே நிறைவேற்றி வருகிறார்.
அமெரிக்காவில் இதுவரையில் இருந்துவந்த ஓரளவு இனமோதலுக்கு எதிரான மனநிலை
தலைகீழாக மாறியுள்ளது. இனவாத போக்கின் உச்சமாக ஏழு இஸ்லாமிய நாடுகளின் மக்களுக்கு
அமெரிக்கா வருவதற்கான விசாவை தடைசெய்யும் முயற்சியை தொடர்ந்து. மெக்சிகோ எல்லையில்
அகதிகள் வருகையை தடுக்க 1,200 கி.மீ நீளத்திற்கு சுவர்களை எழுப்புவது போன்ற மோசமான
நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறார்.
அமெரிக்க ஏகாதிபத்தியம், தன்னுடைய உலக மேலாதிக்கத்தை வலுப்படுத்துவதற்காகவும்,
பொருளாதார நெருக்கடியின் எதிர்மறைத் தாக்கத்திலிருந்து தற்காத்துக் கொள்ளவும், தன்னுடைய
மூர்க்கத்தனமான நடவடிக்கைகளை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக தன்னுடைய அரசியல்
மற்றும் ராணுவத் தலையீடுகளை மிகப்பெரிய அளவில் உலக நாடுகள் மீது திணித்துக் கொண்டிருக்கிறது.
மத்தியக் கிழக்கு நாடுகளில் ஐ.எஸ்.ஐ.எஸ். போன்ற பல பயங்கரவாத கும்பலை தூண்டி அரசியல்
குழப்பங்களை ஏற்படுத்துவது போன்ற நாசகர செயலில் ஈடுபட்டு வருகிறது. பாலஸ்தீனத்தில் எரியும்
நெருப்பில் எண்ணெயை ஊற்றும் நடவடிக்கையாக இஸ்ரேல் தலைநகரை பாலஸ்தீன பகுதியான
ஜெருசெலத்திற்கு மாற்றி அதை வெள்ளை மாளிகையிலிருந்து அங்கீகரித்து தனது தூதரகத்தையும்
திறந்தது. சிரியா மீதான தாக்குதல்கள், காசாவில் அரங்கேறும் மனித உரிமை மீறல்கள், ஈரான் மீதான
பொருளாதார தடை என அமெரிக்கா தொடர்ந்து மத்தியக் கிழக்கு நாடுகளை வேட்டையாடி வருகிறது.
லத்தீன் அமெரிக்காவின் பல நாடுகளில் அமெரிக்காவின் அரசியல் மற்றும் ராணுவத்
தலையீடுகளுக்கு எதிராக ஓர் தீவீரமான மோதல் நடந்து கொண்டிருக்கிறது. அமெரிக்கா தன்னுடைய
ஒட்டுமொத்த ராணுவப் பிரிவுகளையும் இக்கண்டத்தில் உள்ள இடதுசாரிகள் தலைமையிலான
அரசாங்கங்களை பலவீனப்படுத்துவதற்கும், மக்கள் மத்தியில் செல்வாக்குடன் நிலவும் ஏகாதிபத்திய
எதிர்ப்பு அலையை மாற்றியமைத்திடவும் பயன்படுத்திக் கொண்டிருக்கிறது.
ஆப்பிரிக்க, ஆசிய கண்டங்களில் உள்ள வளரும் நாடுகள் மற்றும் ஏழை நாடுகளை உலக வங்கி,
ஐ.எம்.எப், உலக வர்த்தக நிறுவனம், ஐக்கிய நாடுகள் சபை போன்றவற்றின் மூலம் ஜனநாயகத்தை
வேரறுத்து நாடுகளை ஒட்டச்சுரண்டி வருகிறது. சர்வதேச ஒப்பந்தங்கள் சிலவற்றிலிருந்து
ஒருதலைப்பட்சமாக விலகிக் கொண்டிருப்பதன் காரணமாகவும், சுயேச்சையாக நாடுகளுடன் இருதரப்பு
தேவைக்காக மட்டும் ஒப்பந்தம் செய்து கொள்வதற்கே முன்னுரிமை வழங்குகிறது. புவி வெப்பமயமாதல்,
அமைதி, சுகாதாரம், கல்வி, வேலை, பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு, உலக வர்த்தக அமைப்பு
போன்ற சர்வதேச ஒப்பந்தங்களின் எதிர்காலம் நம்பிக்கையற்றதாக மாறியுள்ளது.
லத்தீன் அமெரிக்கா, மத்திய கிழக்கு மற்றும் ஆப்பிரிக்காவின் ஒரு பகுதியில்
இராணுவரீதியாகத் தலையிடுவதை அமெரிக்கா தொடர்கின்ற அதேசமயத்தில்,
அமெரிக்காவின் உலக அளவிலான இராணுவ போர்த்தந்திர கவனம் பசிபிக்
பெருங்கடலை நோக்கி நகர்ந்திருக்கிறது. பசிபிக்கில் தன்னுடைய கப்பல் படைகளில்
மூன்றில் இரண்டு பங்கினை நிறுத்தி வைத்திருப்பதுடன், அமெரிக்கா “சீனாவைக்
கட்டுப்படுத்த வேண்டும்” என்பதற்காக தெற்கு சீனக் கடலில் ஏற்பட்டுள்ள சச்சரவு மீது
குறிப்பாக கவனம் செலுத்திவருகிறது. ஏனெனில், தன்னுடைய உலக மேலாதிக்க
சூழ்ச்சி நடவடிக்கைகளுக்குப் போட்டியாக சீனாதான் வலுவாக வளர்ந்து வருகிறது
என கடும் எரிச்சலுடன் பார்க்கிறது.
ஐரோப்பா
தற்போது ஐரோப்பாவில் அதிதீவிர வலதுசாரி நவீன பாசிஸ்ட் சக்திகளின் எழுச்சி ஏற்பட்டுள்ளது.
அமெரிக்க ஆளும்வர்க்கத்தின் மிகவும் பிற்போக்கான பிரிவினரைப் பிரதிநிதித்துவப்படுத்தும் டொனால்டு
டிரம்ப், அமெரிக்க ஜனாதிபதியாக வந்திருப்பது இத்தகைய போக்கை மேலும் வலுப்படுத்தியுள்ளது.
ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து இங்கிலாந்து வெளியேற பிரிட்டனில் பிரெக்சிட் (பிரிட்டன்
எக்ஸிட்) வாக்கெடுப்பில் வலதுசாரிகள் அணிதிரண்டது. அதுபோல் ஜெர்மன், ஆஸ்திரியா,
பிரான்ஸ் போன்ற ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் சுமார் மூன்றில் ஒரு பகுதி
உறுப்பினர்கள் வலதுசாரி மற்றும் அதிதீவிர வலதுசாரி அரசியல் கட்சிகளிலிருந்து
பிரதிநிதித்துவப்படுத்துவது போன்ற அனைத்தும் வலதுசாரி அரசியல் வளர்ச்சியை
காட்டுகிறது.
அதே நேரத்தில் சில நாடுகளில் அதிதீவிர வலதுசாரிகள் தலைதூக்குவதற்கு
எதிர்ப்பு இருந்திருக்கிறது. போர்ச்சுக்கல் மற்றும் கிரீஸ் போன்ற நாடுகளில்,
கம்யூனிஸ்ட் கட்சிகள் ஒரு வலுவான சக்தியாகத் தொடர்ந்து நீடிப்பதுடன், தேர்தல்
ஆதாயங்களையும் பதிவு செய்திருக்கின்றன. சைப்ரஸில், கம்யூனிஸ்ட் கட்சி,
சமீபத்தில் நடைபெற்ற உள்ளூர் நகராட்சித் தேர்தல்களில் தன்னுடைய நிலையை
மேம்படுத்திக் கொண்டிருக்கிறது.
ஐரோப்பாவின் வேறுசில இடங்களில் நவீன-இடதுசாரி அமைப்புகள்
வளர்ந்திருக்கின்றன. கிரீஸில் சிரிசா நவீன தாராளமய சீர்திருத்தங்களை
எதிர்ப்பதாகவும், தொழிலாளர்வர்க்கத்தின் மீதான தாக்குதல்களை கைவிடுவோம்
என்றும் பறிக்கப்பட்டுள்ள உழைக்கும் மக்களின் ஜனநாயக உரிமைகளை மீண்டும்
அளித்திடுவோம் என்றும் வாக்குறுதிகள் அளித்துத் தேர்தலில் வெற்றி பெற்றிருந்தது.
கிரீஸில் மக்கள் மத்தியில் விளைந்துள்ள அதிருப்தியின் விளைவாக அது இப்போது
அதிதீவிர வலதுசாரிகளுக்கு எதிராக அரசியல் போராட்டம் நடைபெறும் இடமாக
மாறியிருக்கிறது. ஸ்பெயினில், போடிமோஸ் என்னும் ஒரு முற்போக்குக் கட்சி
அமைக்கப்பட்டு, இடதுசாரி சக்திகளுடன் கூட்டணி வைத்துக் கொண்டு, கணிசமான
அளவிற்குத் தேர்தல் ஆதாயத்தைப் பெற்றிருக்கிறது.
கிரேட் பிரிட்டனில் தொழிலாளர் கட்சி ஜெரிமி கோர்பின் தலைமையில்
புத்துணர்ச்சி பெற்று, மக்கள் பிரச்சனைகளை தேர்தல் பிரச்சாரங்களின் மையமாக
வைத்து செயல்பட்டிருக்கிறது. இவ்வாறு ஒருவிதத்தில் அது கிரேட் பிரிட்டனில்
இடதுசாரி நிகழ்ச்சிநிரலுக்குப் புத்துயிரூட்டியுள்ளது. அமெரிக்காவில், பெர்னி
சாண்டர்ஸ் தன்னுடைய பிரச்சாரங்களை உழைக்கும் மக்களின் மத்தியில் செய்து
ஆதரவு திரட்டி வருகிறார்.
இந்நிகழ்ச்சிப்போக்குகள் அனைத்தும் காட்டுவது என்னவென்றால்
எங்கெல்லாம் இடதுசாரிகளும் இடதுசாரிகள் தலைமையிலான சக்திகளும், நவீன
தாராளமயம் மற்றும் ஏகாதிபத்திய மூர்க்கத்தனத்தை எதிர்த்து மக்களைத் திரட்டி
போராட்டங்களை வீரியத்துடன் முன்னின்று நடத்துகிறார்களோ, அங்கெல்லாம்
மக்களின் ஆதரவைப் பெற்று, முன்னேற்றங்களைப் பதிவு செய்திருக்கிறார்கள்
என்பதும் எதிர்காலத்தில், இதுதான் அரசியல் போராட்டங்களுக்கான அரங்கமாக
இருக்கப்போகிறது என்பதும் நவீன தாராளமயத்திற்கு எதிராக ஒரு வலுவான
இடதுசாரிகள் தலைமையிலான எதிர்ப்பு இல்லையெனில், மக்களிடையே
அதிகரித்துவரும் அதிருப்தியை வலதுசாரிகள் தங்களுக்கு சாதகமாக ஆதாயமாக்கிக்
கொள்வார்கள் என்பதும் தெரிகிறது.
லத்தீன் அமெரிக்கா
லத்தீன் அமெரிக்காவில், மக்களுக்கும் அமெரிக்காவின் அரசியல் மற்றும்
இராணுவத் தலையீடுகளுக்கும் இடையே ஓர் ஆழமான மோதல் கூர்மையாக
உருவாகிக்கொண்டிருக்கிறது. அமெரிக்க ஏகாதிபத்தியம், உணவுப்பற்றாக்குறையை
வலுக்கட்டாயமாகத் திணிப்பதன் மூலம் வெனிசுலாவைக் குறிவைத்துத் தாக்கிக்
கொண்டிருக்கிறது. வெனிசுலாவின் மக்கள் தலைவனை கடந்த சில நாட்களுக்கு முன்
கொலைசெய்திடும் முயற்சியையும் செய்துள்ளது. அதேபோன்று, லத்தீன் அமெரிக்க நாடுகளான
பிரேசிலிலும் பொலிவியாவிலும் மற்றும் இதர நாடுகளிலும் இடதுசாரிகள் தலை
தூக்காவண்ணம் கட்டுப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தோடும், முன்பு
இருந்ததைப்போன்று அந்நாடுகளின் பொருளாதாரம் மற்றும் அரசியலில்
அமெரிக்காவின் கட்டுப்பாட்டைக் கொண்டுவர வேண்டும் என்ற குறிக்கோளுடனும்
அமெரிக்காவின் தலையீடுகள் கூர்மையாகிக் கொண்டிருக்கின்றன.
சோசலிஸ்ட் கியூபாவும் அதன் தாக்குதல் இலக்காகத் தொடர்ந்து இருந்து
வருகிறது. முந்தைய ஒபாமா நிர்வாகத்தால் கியூபாவுடனான உறவுகளில்
சகஜநிலைக்குக் கொண்டுவருவதற்காக மேற்கொள்ளப்பட்ட சில முயற்சிகளைக்கூட
டொனால்ட் டிரம்ப் கைவிடுவதற்கான நடவடிக்கைகளை எடுக்கத்
தொடங்கியிருக்கிறார்.
மத்திய அமெரிக்காவில், நிகரகுவாவில் கிட்டத்தட்ட 13 சதவீதப்புள்ளிகள்
வறுமையைக் குறைத்ததன் காரணமாக, டானியல் ஒர்டேகா மீண்டும்
தேர்ந்தெடுக்கப்பட்டார். வெனிசுலா அணியில் லத்தீன் அமெரிக்காவின் ஏனைய
நாடுகளான பொலிவியா, ஈக்குவேடார், ஹோண்டுராஸ் மற்றும் நிகரகுவாவில் இடது-
முற்போக்கு அரசாங்கங்களை பலவீனப்படுத்து வதற்கானமுயற்சிகளில் அமெரிக்க
ஏகாதிபத்தியம் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது.
மேற்கு ஆசியா
மத்திய கிழக்கு நாடுகளில், அமெரிக்கா – இஸ்ரேல் உடன்படிக்கை தொடர்ந்து
ஒரு மையமான பங்கைச் செலுத்தி வருகிறது. இப்பகுதியை அமெரிக்க
ஏகாதிபத்தியத்தின் பொருளாதார, அரசியல் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதற்காக
ஈரானை பலவீனப்படுத்தித் தனிமைப்படுத்துவதும், இஸ்ரேலை வலுப்படுத்துவதும்
இந்த உடன்படிக்கையின் நோக்கமாகும். இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்திற்கும்
இடையே அமைதிப் பேச்சுவார்த்தைகளுக்கான சாத்தியக்கூறுகள் ஏதேனும்
இருக்குமாயின் அதனை நெரித்துக் கொல்வதற்கு அமெரிக்க நிர்வாகம்தான்
பொறுப்பாகும். உலக அளவில் பல்வேறு பிரச்சனைகளை உருவாக்கக்கூடிய
விதத்தில் இப்பிராந்தியத்தில் மேலும் பதற்றங்களையும் மோதல்களையும்
தூண்டிவிடும் தன்மையுடையதாகும்.
மத்தியக் கிழக்கு நாடுகளின் இதர பகுதிகளிலும் அமெரிக்காவின் தலையீடுகள்
தொடர்கின்றன. எனினும், இப்போது சிரியாவில் ஆட்சி மாற்றத்தைக்
கொண்டுவருவதற்காக அமெரிக்க ஏகாதிபத்தியத்தால் மேற்கொள்ளப்பட்ட அனைத்து
முயற்சிகளையும் முறியடித்து, ஆறு ஆண்டு காலமாகத் தொடர்ந்து நடைபெற்று
வந்த உள்நாட்டு யுத்தத்தில் சிரிய படையினரின் வெற்றி, ஒரு மிகப்பெரிய
சாதனையாகும். அமெரிக்கா மற்றும் அதன் அரபுக் கூட்டணியினரால்
முட்டுக்கொடுக்கப்பட்ட இஸ்லாமிஸ்ட் படையினர் தோல்வியடைந்திருப்பது மேற்கு
ஆசியாவின் அரசியலில் ஆழமான விளைவினை ஏற்படுத்தும். சிரியாவில்
ரஷ்யாவின் வெற்றிகரமான இராணுவத் தலையீடு இப்பிராந்தியத்தில் அதன்
தாக்கத்தை வலுப்படுத்தி இருக்கிறது. ரஷ்யா – துருக்கி – ஈரான் கூட்டு முயற்சிகள்
இப்பிராந்தியத்தில் அமெரிக்காவின் சூழ்ச்சித்தந்திரங்களை முறியடித்திருக்கின்றன.
தன்னுடைய கூட்டணி நாடான சவுதி அரேபியாவுடன் சேர்ந்துகொண்டு,
அமெரிக்க ஏகாதிபத்தியம் ஈரானை பலவீனப்படுத்துவதற்காக, ஏமனில் சவுதி
அரேபியர்கள் தமது இராணுவக் தலையீட்டைத் தொடர்வதை ஊக்குவித்து
வந்துள்ளது. ஐ.நா. சபை ஏமனில் குறைந்தபட்சம் 50 ஆயிரம் குழந்தைகள் 2017
டிசம்பர் இறுதியில் பசி-பஞ்சம்-பட்டினியால் இறந்திருப்பார்கள் என்று
மதிப்பிட்டிருக்கிறது. சவுதி அரேபியாவின் தலையீடுகள் கத்தார், சிரியா மற்றும்
ஏமனில் தொடர்கின்றன. இப்போது அது லெபானானைக் குறிவைத்திருக்கிறது.
கத்தார், இப்பிராந்தியத்தில் உள்ள அமெரிக்காவின் மிகப்பெரிய இராணுவத்
தளங்களில் ஒன்றை பராமரித்து வருகிறது. அதில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட
அமெரிக்க இராணுவத்தினர் பணியாற்றுகிறார்கள். மேலும் கத்தார், அமெரிக்காவின்
சென்ட்காம் எனப்படும் படைப்பிரிவின் தலைமையகத்தையும் பராமரித்துவருகிறது.
இது, சிரியா மற்றும் ஈராக்கில் அமெரிக்காவின் இராணுவ நடவடிக்கைகளுக்கு
மிகவும் உதவியாக இருக்கிறது. கத்தாரும், ஈரானும் உலகின் மிகப்பெரிய சவுத்
பார்ஸ் எரிவாயு வயல்வெளி (South Pars gas field) யைக் கூட்டாக நடத்தி வருகின்றன.
அதன் விளைவாக அவை ஹைட்ரோ கார்பன் துறையில் பரஸ்பரம் கூட்டாக
செயல்பட வேண்டியது தேவையாகவுள்ளது.
ஆப்பிரிக்கா
அதிதீவிர மதவெறி சக்திகள் வடக்கு ஆப்பிரிக்க பிராந்தியத்தை ஆதிக்கம்
செலுத்துவது தொடர்கிறது. லிபியா மீது ஏகாதிபத்தியத்தின் தாக்குதல் நாட்டை
பலவீனப்படுத்தி சீர்குலைத்ததோடு மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த பிராந்தியத்திலும்
கடும் தாக்கங்களை ஏற்படுத்தி இருக்கின்றது. அதிதீவிர மதவெறி மற்றும்
பயங்கரவாத சக்திகள் இப்பிராந்தியத்தில் அதிகரித்திருக்கின்றன. பயங்கரவாதத்தைக்
கட்டுப்படுத்துகிறோம் என்ற பெயரால் அமெரிக்கா தன்னுடைய இராணுவத்
தலையீட்டை ஆப்ரிகாம் (AFRICOM) மூலமாக வலுப்படுத்திக் கொண்டிருக்கிறது.
நைஜீரியா, மாலி, சாஹல் முதலான பல நாடுகளில் பயங்கரவாத எதிர்ப்பு
நடவடிக்கைகள் என்று கூறப்படுவனவற்றில் அமெரிக்க இராணுவத்தினர்
கொல்லப்பட்டுள்ளார்கள் என்று செய்திகள் வெளியாகி இருக்கின்றன. ஆப்பிரிக்க
கண்டத்தில் உள்ள அபரிமிதமான இயற்கை வளங்களைக் கைப்பற்ற வேண்டும்
என்பதற்காகவும், முக்கியமான வர்த்தக பாதைகளையும், சந்தைகளையும் தங்கள்
கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரவும், அதிகரித்துவரும் சீனாவின் செல்வாக்கைக்
கட்டுப்படுத்துவதற்காகவும், அமெரிக்கா இந்நாடுகளின் உள்விவகாரங்களில்
தலையிட்டுக் கொண்டிருக்கிறது.
-க.நிருபன் (2018 ஆகஸ்ட்)
No comments:
Post a Comment