நீட் எனும் உயிர்கொல்லி தேர்வு
உடல் முழுவதும் பற்றி எரிய மாணவி வைசியாவின் கதறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வருகிறார்கள் மண்ணெண்ணையை ஊற்றி உடலை பற்ற வைத்துக் கொண்டதால் தீயை அணைக்க முடியாமல் இறந்து போகிறாள். மரணித்து போன மாணவி வைசியாவின் அலறல் சத்தம் தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையை சோகத்தால் நிசப்தமாக்கியுள்ள நிலையில், இச்சம்பவத்திற்கு சற்று நேரத்திற்க்கு முன்புதான் திருப்பூர் மாவட்டம் வெள்ளியங்காடு பகுதியை சார்ந்த பனியன் தொழிலாளியின் 17 வயது மகள் ரிது ஸ்ரீ தன் உயிரை தூக்கு கயிற்றிற்க்கு இறையாக்கியுள்ளார். அதனை தொடர்ந்து விழுப்புரம் மோனிசா என்ற மாணவியும், சேலம் எடப்பாடி பகுதியைச் சார்ந்த பாரத பிரியன் என்ற மாணவனும் என தொடர்ச்சியான கோர மரணத்திற்கு காரணம் நீட் தேர்வு தான்.
பன்னிரண்டாம் வகுப்பு தேர்வில் நல்ல மதிப்பெண்களைப் பெற்றும் நீட் தேர்வில் போதிய மதிப்பெண் எடுக்க முடியாமல் போனதால் மனம் உடைந்து இந்த பச்சிளம் பிள்ளைகள் உயிரை மாய்த்துக் கொண்டுள்ளனர். அனிதாவில் துவங்கிய இந்த மரண ஓலம் பிரதீபா, அருண் பிரசாத், சுபஸ்ரீ என்ற வரிசையில் வைசியா, ரிது ஸ்ரீ, மோனிசா, பாரத பிரியன் என பதினோர் உயிரை குடிதுள்ளது நீட். மோடியும், எடப்பாடியும் வழக்கம் போல் மௌனித்துக் கிடக்கிறார்கள்.
நீட் தேர்வை நடத்துவதன் மூலம் தனியாரின் லாப வெறி கட்டுப்படுத்தப்படுகிறது(!) ஏழை எளிய மாணவர்களுக்கும் மருத்துவ படிப்பை சாத்தியமாக்க முடியும்(!) போன்ற பல்வேறு காரணங்கள் நீட் தேர்வுக்கு ஆதரவாக வரிந்துகட்டி தெரிவிக்கப்பட்டது.
இந்த ஆண்டு நீட் தேர்வு சுமார் 15 லட்சம் மாணவர்கள் கடந்த மே 5ஆம் தேதி மற்றும் 20 ஆம் தேதிகளில் எழுதியுள்ளனர். ஜூன் 5ம் தேதி நீட் தேர்விற்கான முடிவு அறிவிக்கப்பட்டது. இந்தியா முழுவதும் 56.6 சதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளார்கள். இதில் தமிழகத்தில் தேர்வு எழுதிய 1,23,078 பேர்களில் 59,785 பேர் அதாவது 48.57 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதாவது தேர்வு எழுதிய மாணவர்களில் 51.43 சதம் மாணவர்கள் தமிழகத்தில் தேர்வாகவில்லை.
இந்தியா முழுவதும் வெளியான தேர்வு முடிவில் எஸ்சி பிரிவைச் சார்ந்த மாணவர்கள் 20,009 பேரும் எஸ்டி பிரிவைச் சார்ந்த மாணவர்கள் 8,451 பேர் ஒபிசி சார்ந்த மாணவர்கள் 63,789 பேரும் தேர்வாகியுள்ளனர். அதாவது நீட் தேர்வில் மொத்தம் தேர்வானவர்களில் 11.5 சதம் பேர் மட்டுமே இட ஒதுக்கீட்டில் உள்ளவர்கள் தேர்வாகியுள்ளனர். மீதம் 88.5 சதமான பேர் பொதுப் பிரிவில் இருந்து தேர்வாகியுள்ளனர். பொதுப்பிரிவில் தேர்வானவர்களில் கனிசமான எண்ணிக்கையில் மற்ற பிரிவினரைவிட எஸ்சி பிரிவைச் சார்ந்த மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி பெற்ற மொத்த மாணவர்களில் முதல் 50 இடத்தில் தமிழகத்தைச் சேர்ந்த எந்த மாணவர்களும் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
நேஷனல் டெஸ்டிங் ஏஜென்சியால் நடத்தப்பட்ட இத்தேர்வு 11 மொழிகளில் நடைபெற்றுள்ளது. தென் இந்தியாவை பொருத்தவரை கேரளா 66.59 சதவீதமும், ஆந்திரப் பிரதேசம் 70.72 சதவீதமும், கர்நாடகா 63.72 சதவீதம் மாணவர்களும் தேர்வாகியுள்ளனர்.
இந்தியா முழுவதிலும் கல்வியில் தமிழகத்தை விட பின்தங்கிய மாநிலங்கள் நீட் தேர்வில் கூடுதல் தேர்ச்சி பெறும் போது தமிழகம் மட்டும் பின் தங்கி இருக்க காரணம் என்ன?
தமிழக கல்வி முறை காரணமா என்றால் இல்லை என்று தான் சொல்ல வேண்டும். ஏனென்றால் நீட் தேர்வுக்கு காரணமாக சொல்லப்பட்ட அனைத்து அம்சங்களும் இந்தியா முழுவதிலுமே முறையாகப் பொருந்தவில்லை வெரும் கண்கட்டி வித்தையாகதான் உள்ளது. நீட் தேர்வில் தேர்வான மாணவர்களில் கட் ஆப் மதிப்பெண் அடிப்படையில் மருத்துவத்திற்கான இடம் ஒதுக்கப்படுவதாக சொல்லப்படுகிறது. இந்தியா முழுவதும் கிட்டத்தட்ட 65 ஆயிரம் மருத்துவ இடங்கள் உள்ள நிலையில் 15 சதவீத இடங்களை மத்திய அரசும் 85 சதவீத இடங்களை மாநில அரசும் நேர்முகத் தேர்வு கலந்தாய்வு மூலம் நிரப்புகிறது. இதில் நிகர்நிலை பல்கலை கழகத்தை சார்ந்த தனியார் மருத்துவக் கல்லூரி இடங்களை தனியாரே நிரப்பிக் கொள்கிறது. அந்த வகையில் பார்த்தோமானால் கிட்டத்தட்ட 28,000 மருத்துவ இடங்களை தனியாரே கலந்தாய்வு நடத்தி தனக்கான மாணவர்களை தேர்வு செய்து கொள்கிறது.
2016 ஆம் ஆண்டு கேரள இடது ஜனநாயக முன்னணி அரசு இதற்கு எதிராக அரசே கலந்தாய்வு நடத்த முடிவெடுத்தபோது நீதிமன்றம் தலையிட்டு ”நிகர்நிலை பல்கலைக் கழகங்களை பொருத்தவரை அவர்களுக்கான மருத்துவ படிப்பு இடங்களை நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் அவர்களே நிரப்பிக் கொள்ளலாம்” எனக் கூறியது. இதன் மூலம் தனியார் முதலாளிகளின் மருத்துவக் கல்விக் கொள்ளைக்கு நீதிமன்றமே ஒப்புதல் அளித்ததாக மாறிபோனது. இன்றைக்கும் இந்தியா முழுவதும் கிட்டத்தட்ட தனியார் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் மருத்துவ கலந்தாய்வு மூலம் சேரும் மாணவர்களின் கல்விக் கட்டணம் மிகப்பெரிய அளவில் உயர்ந்துள்ளது. அரசு ஒதுக்கீட்டில் சேரும் மாணவர்களுக்கு பத்து லட்சத்திற்கு மேல் கல்விக் கட்டணம் செலவாகும் எனும்போது தனியாரை சொல்லவேண்டியதில்லை ஒவ்வொரு ஆண்டும் மருத்துவ படிப்பிற்கான கட்டணம் கடுமையாக உயர்ந்து வருகிறது. எனவே நீட் தேர்வு நடத்துவதன் மூலம் தனியார் முதலாளிகளின் கட்டணக் கொள்ளை சட்டபூர்வமாக முறைப்படி நடக்க அனுமதித்துள்ளது.
அதேபோல் சமூகநீதி கொள்கையும் நீட் தேர்வின் மூலம் தூக்கி எறியப்பட்டுள்ளது. நீட் தேர்வை பொருத்தவரை தமிழகத்தில் பயிற்சி மையங்கள் கூடுதலாகியுள்ளது. 2006 முன்பு மருத்துவ படிப்பு நுழைவுத் தேர்வுக்காக பயிற்சி கொடுப்பதாக கூறி எப்படி தனியார் முதலாளிகள் கோடிக்கணக்கில் லாபம் சம்பாதித்தார்களோ அதைப்போலவே தற்போதும் கடந்த பத்தாண்டுகளுக்கு முன்பைவிட பன்மடங்கு அதிகமாகியுள்ளது. நீட் தேர்வில் சாதித்துள்ள டெல்லி, ராஜஸ்தான், உத்தர பிரதேசம் போன்ற மாநிலங்களில் மருத்துவம் படிக்கும் மாணவர்கள் பதினொன்றாம் வகுப்பு, பனிரெண்டாம் வகுப்பு கல்வி பயில்வதை தவிர்த்து நேரடியாக நீட் பயிற்சிக்கு செல்கிறார்கள். ஓரளவு தேர்ச்சி பெறும் மதிப்பெண் மட்டும் 11, 12 வகுப்புகளில் எடுத்து விட்டு முழு கவனத்தையும் நீட் தேர்வில் செலுத்துகிறார்கள். அதற்கான தனி பள்ளிகளும் பயிற்சி மையங்களும் ஆயிரக்கணக்கில் அங்கு முன்பைவிட உருவாகியுள்ளது. எடுத்துக்காட்டாக ராஜஸ்தானில் உள்ள கோட்டா எனும் பகுதியில் இந்தியாவில் வேறெந்த பகுதியையும் விட கூடுதலான தனியார் பயிற்ச்சி நிலையங்கள் உள்ளன.
ஒரு மாணவன் எவ்வளவு செலவு செய்ய முடியுமோ அதற்கு ஏற்ப பயிற்சியைப் பெற்று நீட் தேர்வை எழுத முடியும் என்றாகியுள்ளது. பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மாணவர்களிலும் வசதியானவர்கள் மட்டுமே நீட் தேர்வை எழுத முடியும் என்றாகியுள்ளது. எனவேதான் தமிழகம் போன்ற மாநிலத்தில் 11, 12ஆம் வகுப்புகளில் கூடுதலான மதிப்பெண்கள் எடுத்தும் நீட் தேர்வை வெற்றி பெற முடியாமல் மாணவர்கள் பாதிக்கப்படுகிறார்கள்.
நீட் தேர்வு பாடதிட்டமும் டெல்லியில் உள்ள மத்திய அரசு பாடத் திட்டத்தின் அடிப்படையிலேயே கேட்கப்படுவதால் தமிழகத்தில் உள்ள மாணவர்கள் பாதிப்புக்குள்ளாகிறார்கள். தமிழகத்தில் 9 லட்சம் மாணவர்கள் சமச்சீர் கல்வியில் படித்து பனிரெண்டாம் வகுப்பு தேர்வு எழுதுகிறார்கள் என்றால், வெறும் 15 ஆயிரம் மாணவர்கள் மட்டுமே சிபிஎஸ்சியில் எழுதுகிறார்கள். சமச்சீர்க் கல்வி என்பது தமிழகத்தின் சூழலில் இருந்து உருவான பாடம் முறையாகும். ஆனால் மத்திய அரசின் பாடத்திட்டம் என்பது இந்தியா முழுமைக்குமானது அல்ல, மாறாக இந்தியாவின் மேல்தட்டு வர்க்கத்தின் தேவையிலிருந்து டெல்லியில் உருவான ஒரு தேர்வு முறையாகும். தற்போதைய புதிய கல்விக் கொள்கையும் இதை உறுதிபடுத்தி மேலும் இதை வலுப்படுதும் வகையிலேயே உள்ளது.
தமிழகத்தில் மட்டும் கிட்டதட்ட 5000 வரையுள்ள மருத்துவ இடங்களில் வெளிமாநிலத்தவர்கள் போக தமிழகத்தைச் சார்ந்த வசதி படைத்தவர்கள் மட்டுமே தேர்ச்சி பெற்று மருத்துவத்தில் சேர முடியும் என்ற நிலை உருவாகியுள்ளது.
2006ல் மருத்துவப் படிப்பிற்கான நுழைவுத் தேர்வை ரத்து செய்ததற்கு பிறகு ஏழை எளிய மாணவர்கள் குக்கிராமத்திலும், மழைப் பகுதியில் உள்ள பழங்குடியின மாணவர்கள் கூட தாங்கள் படிக்கும் பள்ளியிலேயே தான் கையில் வைத்துள்ள அரசின் பாட புத்தகத்தை படிப்பதன் மூலமே மருத்துவ படிப்பு சாத்தியமாகும் என்ற நிலை இருந்தது. ஆனால் அந்த நிலைமை தலைகீழாக மாறியுள்ளது.
நீட் தேர்வை தமிழகத்தில் ரத்து செய்ய வேண்டும் என கடந்த மூன்று ஆண்டுகளாக மிகப் பெரிய போராட்டங்கள் நடைபெற்று வந்த சூழலில் நாடாளுமன்றத் தேர்தலிலும் கூட நீட் தேர்வை தமிழகத்தில் ரத்து செய்ய அரசியல் கட்சிகள் குறிப்பாக ஆளும் அதிமுக அரசு தேர்தல் அறிக்கையிலும் கூறியது. தமிழக அரசு சட்டமன்றத்தில் ஏற்கனவே நிறைவேற்றிய 2 தீர்மானங்களையும் குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற்று அமல்படுத்தினாலே போதுமானதாக இருக்கும். மேலும் பல மாணவர்களின் உயிரை குடிக்க தயாராக இருக்கும் நீட் தேர்வை தமிழகத்தில் இருந்து விரட்ட தமிழக அரசு உருப்படியான நடவடிக்கைகளை இனிமேற்கொண்டாவது எடுக்க வேண்டும்.
க.நிருபன் சக்கரவர்த்தி
இந்திய மாணவர் சங்கம்
No comments:
Post a Comment