கல்வி வளாகங்களை காவு வாங்க துடிக்கும் மத்திய அரசு
உலகின் புகழ்பெற்ற கல்வி நிறுவனம் என போற்றப்படும் இந்திய தேசத்தின் தலைநகரில் அமைந்துள்ள தில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்திலிருந்து தில்லியின் மையப்பகுதிக்கு செல்லும் மெட்ரோ ரயில் நிலையங்கள் மூடப்பட்டுள்ளது. நொய்டாவிலிருந்து வரும் மக்கள் தில்லியை அடைய டி.என்.டி அல்லது அஷர்தம் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள். மதுரா சாலை மற்றும் கலிண்டி கன்ஞ் சாலை எண் 13ஏ போக்குவரத்து மூடப்பட்டுள்ளதாக தில்லி போக்குவரத்து போலீஸ் தெரிவித்துள்ளது. மத்திய அரசின் நேரடிக் கட்டுப்பாட்டில் உள்ள தில்லி மாநகரின் பாதுகாப்பிற்கு அப்படி என்ன தான் ஆனது? சாலைகளும், மெட்ரோ இரயில்களும் கடந்த முப்பது நாட்களுக்கு மேலாக மூடப்பட யார்தான் காரணம்?.
கடந்த டிசம்பர் 6 ம் தேதி மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித்சா அவர்கள் குடியுரிமை திருத்தச் சட்ட மசோதாவை (CAB) பாராளுமன்றத்தின் குளிர்கால கூட்டத் தொடரில் முன்மொழியப்பட்டு 12ம் தேதி குடியரசுத் தலைவர் உயர்திரு இராம்நாத் கோவிந்த் அவர்களின் ஒப்புதலோடு சட்டமாக (CAA) நிறைவேற்றப்பட்டது. இதன் மூலம் பாக்கிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் வங்கதேசதிலிருந்து அகதிகளாக இந்தியாவிற்குள் வரும் இந்து, சீக்கியர், பார்சி, கிருஸ்தவர், பெளத்தர்கள் மற்றும் சமணர்கள் தவிற மற்றவர்களுக்கு குடியுரிமை மறுக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்தது. அதாவது இம்மூன்று நாடுகளிலிருந்து வந்த இஸ்லாமியர்களுக்கும், மியான்மரிலிருந்து வந்த ரொஹிங்கியாக்களுக்கும், பூடானிலிருந்து வந்த கிருஸ்தவர்கள் மற்றும் இலங்கையிலிருந்து வந்த தமிழர்களுக்கும் இந்தியாவில் குடியுரிமை மறுக்கப்படுவதாக புதிய சட்டத்திருத்தத்தின்படி நேரடியாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
உச்சநீதிமன்றம் அஸ்ஸாமில் கடந்த ஐம்பது ஆண்டுகளாக வங்கதேசம் மற்றும் மியான்மரிலிருந்து குடியமர்ந்த மக்களால் ஏற்பட்ட மாநிலத்தின் உட்பிரச்சனைகளுக்கு தீர்வு கான தேசிய குடிமக்கள் பதிவேட்டை (NRC) ஏற்படுத்த மத்திய அரசுக்கு அறிவுறுத்தியது. அஸ்ஸாம் மாநில பிரச்சனைக்கு தீர்வுகான உச்சநீதிமன்றத்தால் அறிவுறுத்தப்பட்ட தேசிய குடிமக்கள் பதிவேட்டை (NRC) நாடுமுழுவதும் நடத்தப்போவதாக மத்திய அரசு அறிவித்தது. மேலும் பத்தாண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் மக்கள் தொகை கணக்கெடுப்பை; மக்கள் தொகை பதிவேடாக (NPR) தேசம் முழுவதும் நடத்தப்போவதாக அறிவித்து இதற்காக கூடுதலாக 4 ஆயிரம் கோடி நிதியையும் அறிவித்தது. இதன் மூலம் இந்திய மக்கள் அனைவரும் தங்களுக்கு மட்டுமின்றி தங்களின் தாய், தந்தை மற்றும் தாத்தா, பாட்டிக்குமான பிறப்பு சான்று, பிறந்த இடம் தெரிவிக்க வேண்டிய நிலை வந்துள்ளது. இதன் மூலம் இந்திய மக்கள் அனைவரும் முறையான சான்றுகளை சமர்பிக்க தவறும்பட்சத்தில் நாடற்றவர்களாக வதை முகாம்களுக்கு (Concentration camp) அனுப்பப்படும் அபாயத்திற்கு தள்ளப்படுள்ளார்கள்.
இந்த கொடுமையான சட்டத்தை திரும்பப் பெறக்கோரி அஸ்ஸாம் மாணவர்கள் மக்களோடு களத்திலிறங்கி போராட்டத்தை துவங்கிட அலிகார் பல்கலைக் கழகம், ஜாமியா மிலியா இஸ்லாமியா பல்கலைக் கழகம், ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகம் மற்றும் இந்தியாவின் அனைத்து மாணவர்களும் போராட்டத்தை தொடர்ந்தனர். மக்களும் ஜனநாயகத்தை விரும்பும் அனைத்து அமைப்புகளும் இப்போராட்டத்தை தொடர்ந்து முன்னெடுத்து வரும் சூழலில் மாணவர்களை ஒடுக்கினால் போராட்டத்தை கட்டுபடுத்தலாம் என்ற மூடத்தனமான நம்பிக்கையில் மாணவர்கள் மீது அடக்குமுறையை மத்திய அரசு ஏவியது. அஸ்ஸாமில் மாணவர்கள் உள்ளிட்டு நான்கு பேர் பாதுகாப்புபடையின் துப்பாக்கி குண்டுகளுக்கு இறையாகிட ஜாமியாவிலும், அலிகாரிலும் பல்கலைக்கழகத்தின் ஒப்புதலின்றி கல்வி வளாகங்களுக்குள் புகுந்து கண்மூடித்தனமான தாக்குதலை காவல் துறையினர் தொடுத்தனர். மேலும் கல்வி வளாகத்தின் வெளியிலிருந்து கற்களையும், கண்ணீர் புகைக்குண்டுகளையும் காவல்துறையினர் எறிந்தது மட்டுமல்லாமல் தில்லி மாநகரின் பேருந்தையும் பெட்ரோல் ஊற்றிக் கொளுத்தினர். மேலும் சில ஆர்.எஸ்.எஸ் குண்டர்கள் காவல் துறை வேடம் அணிந்து போராடும் மாணவர்களை கொடூரமாக தாக்குவது என வன்முறையின் உச்சத்திற்கே மத்திய அரசு சென்றது.
போராட்டத்தை முன்னெடுப்பதில் முன்னிலை வகித்த ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழக மாணவர்களை கட்டுபடுத்த ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் மாணவர் பிரிவான ஏ.பி.வி.பி அமைப்பினரின் ரெளடிகுண்டர்களை கொண்டு மாணவர்களை தாக்க மத்திய அரசு திட்டமிட்டது. அதன்படி கடந்த ஜனவரி 5ம் தேதி பல்கலைக்கழகத்தின் கல்விக்கட்டணம் மற்றும் விடுதி கட்டண உயர்வுக்கு எதிராகவும் பருவத்தேர்வை தள்ளிவைக்க கோரியும் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர்கள் போராட்டம் நடத்தினர். அதற்கு ஆதரவாக பல்கலைக்கழகத்தின் மாணவர் பேரவை தலைவர் அயிசே கோஸ் தலைமையில் மாணவர்களும் பங்கேற்றனர். அமைதியாக அறவழியில் நடைபெற்றுவந்த இப்போராட்டத்தில் ஏ.பி.வி.பி அமைப்பினர் மாலை 6 மணியளவில் முகத்தை மறைத்துக் கொண்டு முகமூடிகளுடன் கைகளில் இரும்பு ராடுகள், குண்டாந்தடிகள் உள்ளிட்ட கொலைக்கருவிகளைக் கொண்டு மாணவர்களையும், பேராசிரியர்களையும் தாக்கத் துவங்கினர். சுமார் இரண்டு மணி நேரங்களுக்கு மேலாக நடைபெற்ற இக்கொலைவெறித் தாக்குதலில் மாணவர் பேரவை தலைவர் அயிசே கோஸ், பேராசிரியர் சுச்சாரிடா உள்ளிட்ட 39 பேர் கடுமையாக தாக்கப்பட்டு தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டனர்.
இது குறித்து டைம் இணைய இதழில் பதிவிடும் ரானா அயூப் அவர்கள் “ஜேஎன்யு வில் மாணவர்கள் தாக்கப்பட்ட சம்பவம் அறிந்ததும் சிறுது நேரத்தில் சில பத்திரிக்கையாளர்களும் நானும் அங்கு சென்றுவிட்டோம். ஒரே இருட்டாக இருந்தது மெயின் கேட் மூடப்பட்டிருந்தது சிறிது நேரத்தில் கேட் திறக்கபட உள்ளிருந்து ஐம்பதுக்கும் மேற்பட்ட நபர்கள் காவிநிற துணிகளால் முகத்தை மறைத்துக் கொண்டு ‘பாரத் மாதாகீ ஜே’ போன்ற முழக்கத்துடன் கைகளில் இரும்பு ராடு, கட்டை…. போன்றவற்றுடன் வெளியே வந்தனர். 200க்கும் மேற்பட்ட காவலதுறையினர் இதை அமைதியாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர்… வன்முறையாளர்களில் சிலர் உள்ளூரை சார்ந்தவர்கள் என தெரிந்தது அவர்களை அனுகி நான் கேட்ட போது ‘முகாலாயர்களை வளாகத்திலிருந்து சுத்தப்படுத்துவதாக’ கூறினார். மேலும் விடுதிகளில் இருந்த மாணவர்களையும், சில பார்வையற்ற மாணவர்கள் உள்ளிட்டு கடுமையாக தாக்கபட்டிருந்தனர்…. தலையில் பலத்த காயத்துடன் மாணவர் தலைவர் இருந்த ஆம்புலன்சை வெளியே பொவிடாமல் தடுத்து நிறுத்தியுள்ளனர் நீண்ட நேர அலக்கழிப்பிற்கு பின் ஒரு வழியாக கடினப்பட்டு பின்புற கேட் வழியாக மருத்துவமனைக்கு சென்றுள்ளனர். இது குறித்த பல்வேறு வீடியோ ஆதாரங்களை நான் தில்லியின் மிக உயரிய போலீஸ் அதிகாரிகளுக்கு அனுப்பி வைத்தேன் ஆனால் காவல்துறையோ மண்டை உடைந்து ஐந்து தையல்கள் போடபட்டிருந்த பல்கலைக்கழகத்தின் மாணவர் பேரவை தலைவரும் இந்திய மாணவர் சங்கத்தின் (SFI) நிர்வாகியுமான அயிசே கோஸ் மீதே முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்தது… ஆளும் பிஜேபி அரசின் மாணவர் பிரிவான ஏபிவிபி அமைப்பினர் தான் எங்களை தாக்கினார்கள் என பாதிக்கப்பட்ட மாணவர்கள் ஆதரத்துடன் தெளிவாக குறிப்பிட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை” இது குஜராத் கோப்புகள் என்ற ஆவணத்தை வெளியிட்டு மோடி, அமிஷாவின் வன்முறை, பாலியல் குற்றங்களை வெளி கொணர்ந்த இந்தியாவின் புகழ்பெற்ற ஊடகவியலாளர் ரானா அயூப்பின் பதிவுகளின் சிறு பகுதியே. மேலும் இந்தியா டுடே தொலைக்காட்சியில் ஏபிவிபி நிர்வாகி நாங்கள் தான் அடித்தோம் என்று சொன்ன ஆதரங்கள் போன்று எண்ணற்ற ஆதாரங்கள் இருந்தும் தில்லி காவல்துறையும் நீதிமன்றமும் இருக கண்ணை கட்டிக்கொண்டுள்ளது.
ஜாமியா மிலியாவில் 1000 மாணவர்கள் மீது வழக்கு புனைந்துள்ளனர். அலிகாரிலும் பாதிக்கபட்ட மாணவர்களையே சிறையில் அடைத்துள்ளனர். ஒட்டுமொத்தமாக இந்தியா முழுவதும் நடைபெற்ற தாக்குதல்களில் நாற்பதுக்கும் மேற்பட்டோர் படுகொலை செய்யப்பட்டுள்ளார்கள் இதில் 21 பேர் உத்திரபிரதேசத்தில் கொல்லப்பட்டுள்ளனர். மிகப்பெரும் போராளியாக மோடியின் நடிப்பையே விஞ்சும் மம்தா ஆட்சி நடந்தும் வங்கத்தில் ஜாதவ்பூர் பல்கலைக்கழகத்திலும், விஸ்வபாரதி பல்கலைக்கழகத்திலும் மாணவர்கள் கொடூரமாக தாக்கப்பட்டுள்ளனர். புதிய கல்விக் கொள்கை மூலம் காவி கார்பரேட் அஜண்டாவை அமுல்படுத்த முயற்சிக்கும் சூழ்நிலையில் இக்கொடிய தாக்குதல்களை முறியடிக்கும் வகையில் தற்போது (24.01.2020) இந்துதுவா பயங்கரவாதிகளின் சோதனைக் கூடமாகவுள்ள குஜராத்தின் மத்திய பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற மாணவர் பேரவைத் தேர்தலில் இந்திய மாணவர் சங்கத்தின் இடது ஜனநாயக சமூக நீதிக்கூட்டணி அசத்தலான வெற்றியை பெற்றுள்ளது.
வன்முறைகளும் கொலைக்கருவிகளும் கல்வி வளாகத்தின் கட்டிடங்களை, கதவு, ஜன்னல்களை தகர்கலாம், மாணவர்களின் இரத்தங்களை சுவைத்து நுகரலாம் ஆனால் மதச்சார்பற்ற ஜனநாயகபூர்வ கல்விக்கான மாணவர்களின் போராட்ட உணர்வில் சிறுதுரும்பை கூட அவர்களால் அசைக்கமுடியாது என வரலாறு தொடர்ந்து நிரூபித்து வருகிறது.
க.நிருபன் சக்கரவர்த்தி
இந்திய மாணவர் சங்கம்
No comments:
Post a Comment