Tuesday, June 1, 2021

தமிழகத்தில் மாணவிகள் மீது தொடரும் பாலியல் குற்றச்சாட்டுகள் மீது நடவடிக்கை எடுக்க கமிட்டி அமைத்திடுக.

தமிழக அரசுக்கு இந்திய மாணவர் சங்கம் அறிக்கை.
சென்னை கேகே நகரில் உள்ள பத்மா சேஷாத்திரி பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர் ராஜகோபாலன் மற்றும் கராத்தே மாஸ்டர் கெவின் ராஜ் மீதான பாலியல் குற்றச்சாட்டுகள் சம்பந்தமான புகார்கள் வெளிவர தொடங்கியதிலிருந்து பல்வேறு இடங்களிலிருந்து இதுபோன்ற அதிர்ச்சித் தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளது. குறிப்பாக கொரோனா  பெருந்தொற்றின்  இரண்டாவது அலை மிகத்தீவிரமாகப் பரவி வரக்கூடிய காலகட்டம் என்பதால் மாணவர்கள் வீட்டிலிருந்தே இணையவழியில் கல்வி கற்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இணையம் வழியே பாடம் நடத்தும் ஒருசில ஆசிரியர்கள் இதனைப் பயன்படுத்திக் கொண்டு மாணவிகளிடம் மோசமாகவும், ஆபாசமாகவும் நடத்துகொள்வது தற்போது வெளிவரத் துவங்கியுள்ளது. 

பத்மா சேஷாத்திரி பள்ளியின் மீதான விசாரணைகள் நடந்து கொண்டிருக்கும் நிலையில் சென்னையில் மேலும் சில பள்ளிகளில் பாலியல் குற்றச்சாட்டுகள் நடந்துள்ளதாக புகார்கள் வந்துள்ளது. இது தமிழகத்தின் மற்ற மாவட்டங்களிலும் தொடரும். குறிப்பாக சென்னையில் பிரபல தடகளப் பயிற்சியாளர் நாகராஜன் என்பவர் மீதும் பாலியல் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. இவர் மத்திய அரசின் ஜிஎஸ்டி வரி கண்காணிப்பாளராக பணியாற்றி வருகிறார். சென்னையில் பிரைம் என்ற  பெயரில் தடகள பயிற்சி மையத்தை நடத்தி வருகிறார். அங்கு பயிற்சிக்கு வரும் அனைத்து வீரர்களையும் பாலியல் ரீதியாக சீண்டல் செய்ததோடு மட்டுமல்லாமல் குறிப்பாக 17 வயதுடைய மாணவிகளை பாலியல் சீண்டலுக்கு உள்ளாக்கி இருக்கிறார். அவர் மீது புகார் கொடுக்கப்பட்டு விசாரணை நடந்து கொண்டிருக்கிறது. 

அதே போல் சென்னை ராஜா அண்ணாமலை புரத்தில் உள்ள செட்டிநாடு வித்யாஷ்ரம் பள்ளியில் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக முன்னாள் மாணவர்கள் 900 பேர் வரை தமிழ்நாடு குழந்தைகள் மற்றும் பாதுகாப்பு ஆணையத்தில் புகார் அளித்துள்ளனர். 

தொடர் பாலியல் குற்றச்சாட்டுகள்  தமிழக  பள்ளிக்கல்வியில்  மிகப்பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. பல்வேறு கனவுகளோடு எதிர்காலத்தை  மனதில் கொண்டு  படிக்க வரக்கூடிய மாணவிகளிடம் இவ்வாறு பாலியல் சீண்டலில் ஈடுபடும் நபர்கள் மீது பாரபட்சமில்லாமல் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

1. விசாகா கமிட்டி வழிகாட்டுதல்படி  மாணவிகள் மீதான குற்றங்கள் தடுக்கப்பட நடவடிக்கைகள் தீவிரமாக்கப்பட வேண்டும்.

2.இணைய வழியில் மட்டுமின்றி இயல்பான பள்ளிவேலை நாட்களிலும் இது போன்ற குற்றங்கள் நடந்துள்ளது தற்போது வெளிவரத் துவங்கியுள்ளது. பள்ளிக்கல்வியில் இது போன்ற துர்நிகழ்வுகள் நடைபெறாமல் இருக்க அரசு எடுக்கும் சில நடவடிக்கைகளை வெளிப்படைத் தன்மையோடு கடும் தண்டனையின் விவரங்களோடு பத்திரிகைகளில் செய்தியாக்கப்பட வேண்டும்.  

3.இது போன்ற தொடர்பாலியல் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படக் கூடிய தனியார் பள்ளிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்து அரசே ஏற்று நடத்த வேண்டும். 

4.பாலியல் புகார்களில் குற்றம் சாட்டப்பட்டிருக்கக் கூடிய நபர்கள் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து மிகக் கடுமையான தண்டனைகள் வழங்கப்பட வேண்டு.

5.உடனடியாக தமிழக அரசு பெற்றோர்கள், மாணவர்கள், கல்வியாளர்கள், சமூக செயற்பாட்டாளர்கள், மாணவர் இயக்கங்கள், காவல்துறை, வழக்கறிஞர்கள், மாதர் அமைப்பு மற்றும் சமூக நலத்துறை உறுப்பினர்கள் உள்ளடக்கி விசாரணை குழு அமைத்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.  

6.ஆன்லைன் வகுப்பில் ஆசிரியர், மாணவர்களுக்கான விதிமுறைகள் வகுக்கப்பட்டு அதை அனைவரும் அறியும் வண்ணம் அரசு வெளியிட வேண்டும். ஆன்லைன் வகுப்புகள் அனைத்தும் பதிவு செய்யப்பட வேண்டும்.

7.ஆன்லைன் வகுப்பு மற்றும் தற்போது வெளிவரும் பல்வேறு பாலியல் குற்றங்களை புகார் செய்ய மாநில அளவில் கூடுதலாக தனி இணையதளமுகவரி, தொலைபேசி எண் போன்றவை உருவாக்கப்பட்டு அதை அனைவரும் அறியும் வண்ணம் அரசு வெளியிட வேண்டும். பாதிக்கப்பட்டவர்களின், புகார்தாரர்களின்  தனிப்பட்ட தகவல்கள் பாதுகாக்கப்பட வேண்டும்.

என தமிழக மாணவர்களின் சார்பில் இந்திய மாணவர் சங்கத்தின் தமிழ்நாடு மாநில குழு தமிழக அரசைக் கேட்டுக்கொள்கிறது.

ஏ.டி.கண்ணன்
மாநிலத்தலைவர்

வீ.மாரியப்பன்
மாநிலச்செயலாளர்

No comments:

Post a Comment