Friday, March 25, 2022

தேசிய உயர்கல்வி தகுதி கட்டமைப்பு வரைவு எனும் காவிகார்பரேட் கல்வி திட்டம்.

தேசிய உயர்கல்வி தகுதி கட்டமைப்பு வரைவு எனும் காவிகார்பரேட் கல்வி திட்டம்.

- இளைஞர் முழக்கம் DYFI

ஒன்றிய பாஜக அரசு தேசிய கல்விக் கொள்கை NEP2020ஐ வேகமாக நடைமுறைப்படுத்தி வருகிறது. 

அதன் மிகமுக்கிய நகர்வாக கடந்த பிப்ரவரி  ஒன்றாம் தேதி  NHEQF (National Higher Education Qualification Framework) எனும் தேசிய உயர்கல்வி தகுதிக் கட்டமைப்பு வரைவை வெளியிட்டு உயர்கல்வியில் செய்யபோகும் மாற்றங்கள் குறித்து பதிமூன்று நாட்களில் கருத்து கூற காலகெடு விதித்திருந்தது.

புதிய கல்வி கொள்கை வரைவு வெளியிட்டது போன்றே இந்த வரைவையும் எந்த ஒரு மாநில மொழியிலும் வெளியிடவில்லை. 

குறைந்த காலகெடுவில் உள்ள அநீதியை அனைத்து தரப்பினரும் எதிர்த்த பிறகு வெறும் எட்டு நாட்களை கூடுதலாக அறிவித்து பிப்ரவரி 21க்குள் கருத்து கேட்கப்பட்டுவிட்டதாக அறிவித்துள்ளது. 

நவதாராளமயமாக்கல் கொள்கை தீவிரமாக உலகம் முழுவதும் அமல்படுத்தப்பட்டு வரும் சூழ்நிலையில். உலக வர்த்தக அமைப்பின் காட்ஸ் ஒப்பந்தத்தில் (WTO-GATS) இந்தியா கையெழுத்திட்டபடி பாஜகவின் வலதுசாரி தத்துவம், உலக நிதி மூலதனத்தோடு இணைந்து தனக்கான காவிமயச் சிந்தனைகளையும் புகுத்தி உருவாக்கப்பட்டதே இவ்வரைவு. 

63 பக்கங்களில் வெளியிடப்பட்டுள்ள இவ்வரைவு பி.ஏ., பி.எஸ்.சி., எம்.ஏ., எம்.எஸ்சி., படிப்புகளில் செய்யப்போகும் மாற்றங்கள் குறித்து கூறியுள்ளது. இத்துடன் இவ்வரைவானது சட்டம், மருத்துவம் தவிர அனைத்துவிதமான உயர்கல்வி படிப்பிலும் செய்யப்போகும் மாற்றங்கள் குறித்து கோட்பாட்டளவில் திட்டத்தை உள்ளடக்கியுள்ளது.

கலை, அறிவியல் மற்றும் பொறியியல், தொழில்நுட்பம் சார்ந்த கல்வியை இணைத்து ஒருங்கி ணைந்த படிப்பாக உருவாக்கி உள்ளது. அதாவது NVEQF (Vocational) எனும் தேசிய தொழிற்கல்வி தகுதி கட்டமைப்பு  மற்றும் NSQF (Skill) தேசிய திறன் தகுதி கட்டமைப்பு ஆகியவற்றை ஒருங்கிணைத்து அல்லது உள்ளடக்கி தேசிய உயர்கல்வி தகுத்திக் கட்டமைப்பு வரைவு (NHEQF) உருவாக்கப்பட்டுள்ளதாக 
தெரிவித்துள்ளது. 

கலை அறிவியலில் திறன் தொழில்நுட்பத்தை இணைப்பது சந்தைக்கான திறன்பெற்ற உழைப்பாளிகளை உருவாக்கவும், காவிவாதச் சிந்தனையின் குலக்கல்வி, குலத்தொழில் கொள்கையை பள்ளிக்கல்வி முதல் உயர்கல்வி வரை நடைமுறைப் படுத்த இவ்வரைவு உருவாக்கப்பட்டுள்ளது. 

மேலும் கல்வி என்பது லாபத்தின் அடிப்படையில் அல்லது ‘தேவை- அளிப்பு விதிக்கு’ உட்பட்டு தேவை  அதிகமுள்ள அதாவது, கல்விச் சந்தையில் எந்தப் படிப்பிற்கு கிராக்கி அதிகமாக உள்ளதோ அத்தகைய படிப்புகளே கூடுதலாக உருவாக்கப்படும். அதன்படி ‘லாப மற்ற’ படிப்புகள், துறைகள் படிப்படியாக நீக்கப்படும்.

இளநிலை படிப்புகளை மூன்றாண்டுகளிலிருந்து நான்காண்டுகளாக மாற்றி மூன்றாண்டு பட்டப்படிப்பை முடித்த பிறகு நான்காவதாண்டை ஹானர்ஸ்/ஆராய்ச்சி முக்கியத்துவம் கொண்ட படிப்பாக மாற்றப்போவதாக கூறியுள்ளது. அதாவது இதனால் மூன்றாண்டு படிப்பின் முக்கியத்துவம் இயல்பாகவே குறைக்கப்படும். 

இதற்கான அறிவிப்பு கூட, பல்கலைக்கழக மானியக்குழு சார்பில் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

இளநிலைப் படிப்பில் எந்த ஆண்டில் வேண்டு மானாலும் இடையில் வெளியேறலாம்; அவ்வாறு வெளி யேறும் போது அதற்கான சான்று வழங்கப்படும்.  

முதலாம் ஆண்டு என்றால் சான்றிதழ்  (Undergraduate Certificate) சான்றும், இரண்டாம்  ஆண்டு என்றால்  டிப்ளோமா படிப்பு (Undergraduate Diploma) சான்றும், மூன்றாண்டு படித்து முடிக்கும் மாணவருக்கு இளநிலை பட்டம் (Bachelor’s Degree) வழங்கப்படும்; நான்காவதாண்டை முடிக்கும் போது இளநிலை ஹானர்ஸ்/ஆராய்ச்சி (Bachelor’s Degree Honours/Research) பட்டம் வழங்கப்படும். 

இடைநிற்றலை ஊக்குவிக்கும் இந்த திட்டத்தின் நோக்கமே அனைவரும் உயர்கல்வி முழுமையாக பயிலக் கூடாது என்பதுதான். 

மேலும் சான்றிதழ், டிப்ளோமா, பட்டம் பெறுதலுக்கான படிப்புகளோடு ஒருங்கிணைந்த படிப்பிற்கான பாடங்களை மற்றும் கற்பித்தலை (Curriculum and Pedagogy) துவங்குவது நடைமுறை சாத்தியமற்ற திட்டமாகும். இது மாணவர்களை குழப்பத்திற்கே உள்ளாக்கும்.
 
முதுநிலையில் முதலாம் ஆண்டை மட்டும் முடிக்கும் மாணவர்களுக்கு முதுநிலை டிப்ளோமா (Post-Graduate Diploma) பட்டம் வழங்கப்படும், இரண்டாண்டு முதுநிலை படித்து முடிக்கும் மாணவர் களுக்கு முதுநிலை பட்டம் (Master Degree) வழங்கப் படும். 

மேலும் இதில் மூன்றாண்டு பட்டத்தை முடித்தவர்கள் இரண்டாண்டு முதுநிலை படிப்பை படித்தால் முதுநிலை பட்டம் பெறலாம். நான்காண்டு இளநிலை படிப்பை முடித்தவர்கள் ஓராண்டு படித்தால்  போதுமானது முதுநிலைப் பட்டம் வழங்கப்படும். அல்லது நான்காண்டு இளநிலை ஹானர்ஸ்/ஆராய்சி முடித்தால் நேரடியாக பிஹெச்டி முனைவர் பட்டப்படிப்பில் சேரலாம்.

தற்போது யுஜிசி இவ்வறிவிப்பை மார்ச்சில் அறிவித்துள்ளது. 

மேலும் எம்பில் நிரைஞர் படிப்பையும் இந்த கல்வியாண்டோடு முடித்து வைப்பதாகவும் அறிவித்துள்ளது. நிரைஞர் பட்டம் என்பது மினி பிஹெச்டி என அழைக்கப்படுவதுண்டு பல ஏழை எளிய மாணவர்கள், பெண்கள் இத்தகைய படிப்பை ஒரே ஆண்டில் முடித்து விரிவுரையாளராக பணியாற்றி வந்தனர் என்பது குறிப்பிடதக்கது. 

இளநிலையில் மூன்றாம் ஆண்டை முடித்தவர்கள் ஒட்டுமொத்த தர புள்ளி சராசரி (CGPA - Cumulative Grade Point Average) 7.5 புள்ளிகள் வாங்கியிருந்தால் மட்டுமே நான்காம் ஆண்டு செல்ல முடியும்.

கல்வி பயிலும் வருடங்களை பத்து நிலைகளாக (Levels) பிரித்துள்ளது. நிலை 1 முதல் 4 வரை  பள்ளிக் கல்வியாகவும், நிலை 5 முதல் 10 வரை உயர்கல்வியாகவும் தீர்மானித்துள்ளது. 

அதாவது 5ஆம் நிலை இளநிலை சான்றிதழ் சான்று (இரண்டு செமஸ்டர்கள்), 6ஆம் நிலை இளநிலை டிப்ளோமா சான்று (நான்கு செமஸ்டர்கள்), 7ஆம் நிலை இளநிலை பட்டப்படிப்பு (ஆறு செமஸ்டர்கள்), 8ஆம் நிலை   இளநிலை ஹானர்ஸ் ஆய்வு  (எட்டு செமஸ்டர்கள்) மற்றும் முதுநிலை சான்றிதழ் சான்று (இரண்டாண்டு முதுநிலையில் முதல் இரண்டு செமஸ்டர்கள்), 9ஆம் நிலை முதுநிலை பட்டம் (நான்கு செமஸ்டர்கள்) மற்றும்  நான்காண்டு இளம்நிலை ஹான்ர்ஸ்/ஆய்வு முடித்தவர்களுக்கான ஓராண்டில் முடிக்கும் முதுநிலை பட்டம் (இரண்டு செமஸ்டர்), 10ஆம் நிலை முனைவர் பட்ட ஆராய்ச்சிப் படிப்பு.

இளம்நிலையில் முதலாமாண்டு மற்றும் இரண்டாம் ஆண்டு முடிப்பவர்கள் இரண்டுமாத தொழிற்பயிற்சியுடன் (Appranticeship/Internship) அவருக்கான சான்று வழங்கப்படும். அப்படியான தொழிற்பயிற்சி அந்தந்த பிராந்தியம் சார்ந்த தொழிலை கற்க வேண்டும். 

அது கோழிப்பண்ணையாகவோ, ஆடு  வளர்ப்பாகவோ, மாடு வளர்ப்பு அல்லது பண்ணையாகவோ, தோட்டவேலை, விவசாயக் கூலி, தொழிற்சாலை பணிகள், கடைகள், வணிக வளாகம்... அல்லது பிரதமர் மோடி அவர்களின் வார்த்தையில் பக்கோடா போடுதலோ எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். அதற்கு அதிகபட்சம் 10 கிரெடிட் அளவிற்கு வழங்கப்படும். 

குறைந்தது 6 கிரடிட் கண்டிப்பாகப் பெற வேண்டும். மேலும் ஒவ்வொரு ஆண்டு படிப்பிற்கும் கிரெடிட் வழங்கப்படும்.  இத்தகைய கிரெடிட் எவ்வாறு தீர்மானிக்க முடியும் அப்படுயான கட்டமைப்பு வளர்ந்த மாநிலகளிலேயே இல்லாதபோது, உ.பி., ம.பி., பீகார் போன்ற மாநிலங்களில் இதை யோசித்துகூட பார்க்க இயலாது. 

மேலும் வர்ணபேத கல்விக் கொள்கையின்படி பகுதிசார்ந்த அல்லது குடும்பம் சார்ந்த தொழில் என்னவாக இருக்கும்; அப்படி யான தொழிலில் மாணவர்களுக்கான கிரெடிட் அளவீடு எவ்வாறு கணக்கிடப்படும் என்பதும் அறுதியிட்டுக் கூறமுடியும் இது குழப்பமானதாகும்.
 
ஏபிசி (ABC-Academic Bank of Credit) என்ற ‘கல்வி கிரெடிட் வங்கி’ உருவாக்கப்படும். அதில் மாணவர்கள் பெறும் கல்விக்கான ஒட்டுமொத்த கிரெடிட் இணையத்தின் மூலம் சேமிக்கப்படும். இந்த இணைய சேவைக்கு தொகை வசூலிக்கப்படும். 

இந்த கிரெடிட் அடிப்படையிலேயே கல்வித் தகுதி நிர்ணயிக்கப்படும். கடந்தாண்டு ஜூலை மாதமே இது ஏற்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடதக்கது. இதன் மூலம் ஒருவர் ஒரு  கல்லூரியில் படித்துக்கொண்டே மற்றொரு பாடத்தை வேறொரு நிறுவனத்தில் படிக்கலாம் என்கிறது. 

அதாவது எழுபது விழுக்காடு படிப்புகளை கல்லூரிக்கு வெளியே படிக்கலாம் என்கிறது. அதாவது இணைய வழி மூலமே 70% விழுக்காடு  படிப்புகளை தொடர லாம் என்கிறது. அவ்வாறு பார்க்கும் போது அந்நிய கல்வி நிறுவனங்களும், தனியார் கல்வி நிறுவனங்களும் இதன் மூலம் கோலோச்ச முடியும். 

மேலும் கிரேடு அளவீடு வழங்கப்படுவதாகவும் அறிவித்துள்ளது. இளநிலை முதலாம் ஆண்டிற்கு 40 கிரேடு என்ற அடிப்படையில் மொத்தம் நான்காண்டில் 160 கிரேடு பெற வேண்டும் என்பதாகும்.

 தேசிய  உயர்கல்வி நிறுவனங்களுக்கான தரச்சான்று வழங்கும் ‘NAAC’ (தேசிய மதிப்பீடு மற்றும் தரச்சான்று  அவை) அங்கீகரித்துள்ள A, A+ போன்ற தகுதி பெற்ற கல்வி நிறுவனங்களே இத்தகைய படிப்புகளை வழங்க முடியும். தனியார் பல்கலைக்கழகம், தனியார் கல்லூரிகளே கல்விச் சந்தையில் 90 விழுக்காடு கல்வி விற்பனையை தனக்கு சாதகமானதாக மாற்றிக்கொள்ளும்.

அனைத்துப் படிப்புகளுக்கும் நுழைவுத் தேர்வு கட்டாயமாக்கப்படும். தற்போது கூட அனைத்து மத்திய பல்கலைக்கழகங்களுக்கும் பொது நுழைவு தேர்வு (CU-CET) அறிவித்துள்ளது இதன் பின்னணியில் இருந்தே. இனி வரும் ஆண்டுகளில் மாநில பல்கலைக்கழகங்கள், நிகர்நிலை பல்கலைக்கழகங்களும் இந்த பொது நுழைவு தேர்வில் இணைக்கப்பட உள்ளன.

 இளநிலை முதல் முதுநிலைப் படிப்பு வரை எந்தாண்டு வேண்டுமானாலும் வெளி யேறி, உள்நுழையலாம் (Multiple entry and exit)  என்பதை ‘பிரேக்கிங் சிஸ்டம்’ (ஒரு ஆண்டிலுள்ள இரண்டு செமஸ்டர்களையும் அரியர் இன்றி  தேர்ச்சி  பெறாமல் அடுத்த ஆண்டு செல்ல இயலாது)  கொண்டு வரப்பட்டுள்ளதில் இருந்து புரிந்து கொண்டால் இதன் சூட்சமத்தை தெரிந்து கொள்ள முடியும். இயல்பாகவே மாணவர்கள் தொழிற்பயிற்சியோடு மலிவான தொழிலாளியாக வெளியேற்றப்படுவார்கள்.

இந்த வரைவு அறிக்கையின் நோக்கங்கள் மற்றும் இலக்காக பல்வேறு விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது. தகுதி, தரம் உயர்த்துவது, செயல் திறன் மேம்பாடு, கற்றல் திறன் வளர்ப்பு, தொழிநுட்பத்திறன்,  தொழிற்பயிற்சி, தொழிற்பயிற்சியின் போது சமூக உறவு என்றெல்லாம் ஏராளமான விசயங்கள் பேசப்பட்டாலும்;  அனைத்துப் படிப்புகளுக்கும் அறநெறி, மனித நம்பிக்கைகள், நன்னெறி, நீதிநெறி போன்றவை கற்றுத் தரப்படும் என்கிறார்கள். இப்படி யான வார்த்தைகளுக்கான ஆர்எஸ்எஸ் உள்ளடக்கத்தின் விஷமத்தை நம்மால் எளிதில் புரிந்துகொள்ள முடியும்.
 
கலைத்துறை மீதான அறிவியலற்ற பார்வையை முன்வைக்கிறது. அறிவியல் துறையின் அடிப்படையாக ஆதாரங்கள், ஆதாரங்கள் அடிப்படையிலான அனுமானம், யூகங்களை நடைமுறையில் ஆய்வுக்கு உட்படுத்துதல் போன்றவற்றுக்கு மாறாக, நம்பிக்கை அறிவியல் (Moral scidnce), கட்டுக்கதைகளின் அடிப்படையில் உண்மையாக (Post truth) உருவகப்படுத்தல்/நம்பிக்கை கொள்ளுதல் போன்ற அறிவியலுக்கு ஒவ்வாத கருத்துகளை வளர்த்தெடுப்பதற்கான திட்டமிடலாக உள்ளது. 

ஆராய்ச்சிப் படிப்புகளை இந்தப் பின்னணியிலிருந்து புரிந்து கொண்டால், எதிர் காலத்தில் ஆர்எஸ்எஸ் கூறும் புராணக்கதைகள் அடிப்படையில் ஆய்வுகள் நடைபெற்று முனைவர் பட்டம் வழங்கப்படும்.
 
இவ்வரைவு திட்டம், இணைய வழிக்கல்வியை ஊக்கப்படுத்துகிறது. தொலைதூரக்கல்வியை இணையவழிக் கல்வியோடு இணைக்க உள்ளது. வெளிநாட்டுக் கல்வி நிறுவனங்கள் அதிகப்படுத்தப் படவுள்ளன. அவ்வாறான இணையவழிக் கல்வியும் நேரடிக்கல்வியும் சமமானதாக உருவாக்கப்படும். 

நேரடிக்கல்வி மற்றும் நேரடிக் கற்றலின் முக்கியத்துவம் குறைக்கப்படும். ஒன்றிய அரசு உருவாக்கியுள்ள கல்வி அமைச்சகத்தின் கீழ் ஒட்டு மொத்த மாநிலக் கல்வியும் தீர்மானிக்கப்படும். கல்வி நிறுவனங்களுக்கு மாநில அரசுகள் பெயரளவில் உரிமையாளராக மட்டும் இருக்கும்; அனைத்து திட்டமிடலும் மத்தியப்படுத்தப்படும்.

21ஆம் நூற்றாண்டிற்கான அறிவியல் வளர்ச்சியை பிற்போக்கான பார்வையில் பார்க்கும் இந்த வரைவு மாணவர்களும், இளைஞர்களும் முழுவதும் நிராகரிக்க வேண்டும்.
 
தேசிய கல்விக் கொள்கை உரு வாக்கத்தின் போது எப்படி அநீதியான முறையில் குறிப்பிட்டவர்களுக்கான கூட்டம், கருத்துக்  கேட்புகள் நடைபெற்றதோ அதுபோலவே தற்போதும்  நடந்துள்ளது. 

இதை ஒட்டுமொத்தமாக நிராகரித்து கூறப்படும் கருத்துகள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுவதில்லை. சில கல்வி நிறுவனங்களில் இணைய வழிகூட்டமாக நடத்தி மாணவர் ஒப்புதல் பெற்றதாக பொய்யான தகவல்களை சேகரித்துள்ளது. 

ஒட்டுமொத்ததில் இந்த தேசிய உயர்கல்விக் கட்ட மைப்பு வரைவு முழுவதும் நிராகரிக்கப்பட வேண்டிய தாகும். 

க.நிருபன் சக்கரவர்த்தி
25.03.2022

No comments:

Post a Comment

உலகை அதிரவைத்த மக்கள் சீனத்தின்செயற்கை நுண்ணறிவு டீப் சீக் (Deep seek)

உலகை அதிரவைத்த மக்கள் சீனத்தின்  செயற்கை நுண்ணறிவு டீப் சீக் (Deep seek) செயற்கை நுண்ணறிவு (artificial intelligence) துறையில் பேராதிக்கம் செ...