Saturday, March 9, 2024

உலக உழைக்கும் மகளிர் தினம்.

International Working Women's day

உலக உழைக்கும் மகளிர் தினம்.

உலக தொழிலாளி வர்க்கத்தின் மகத்தான போராட்ட வரலாற்றில் பிரிக்க முடியாத அங்கமாக மகளிர் தினம் உள்ளது. இரத்தம் தொய்ந்த போராட்ட வரலாற்றை நினைவு கூறும் தினமாகவும், முன்னிலும் வேகமாக செயல்பட நினைவூட்டும் தினமாகவே உழைக்கும் மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது.

மேதினம், சுதந்திர தினம், குடியரசு தினம் .. போன்ற தினங்களை போலவே உலக மகளிர் தினத்தையும், திரைப்படம், கோலப்போட்டி, மியூசிக்சேர், சமையல் போட்டி, கலர்கலரான சேலை விளம்பரம், தள்ளுபடி, பிங் கலர் ஸ்கூட்டி ஆஃபர்... என இந்த முதலாளித்துவ, நிலப்பிரபுத்துவ சமூகம் நாம் யாரை, எதை எதிர்க்க வேண்டுமோ அவர்களோடு சேர்ந்து அவற்றையே கொண்டாடட செய்யும் சூட்சமம் நடக்கிறது.

எழுத்தறிவு பெற்ற தலைமுறையினராகிய நாம் மார்ச் 8 வரலாற்றை நம் மக்களுக்கு எடுத்துரைக்க வேண்டிய கடமையுள்ளது. குறிப்பாக நெறியற்ற முதலாளித்துவ ஊடக உலகில்  உழைக்கும் மகளிர் தின வரலாற்றை நாம் உரத்து சொல்லியாக வேண்டியுள்ளது.

''ரோசா லக்ஸம்பர்க், கிளாரா ஜெட்கின், அலெக்சாண்டரா கொலண்டாய், குரூப்ஸ்கையா....'' போன்ற எண்ணற்ற ஆளுமைகளின் வர்க்க போராட்ட (Class struggle) வரலாற்றை உலகிற்கு மீண்டும், மீண்டும் சொல்லியாக வேண்டும். ஓட்டுரிமை, சொத்துரிமை, மகப்பேறு மீது முடிவெடுக்கும் உரிமை, பேறு கால விடுமுறை, ஆண் பெண் சம ஊதியம்... போன்ற பல சரித்திர புகழ்மிக்க போராட்டங்களையும் இப்போராட்டத்தின் மூலம் நாம் சோவியத் யூனியனிலும், மற்றும் பல சோசலிச நாடுகளிலும் நடைமுறைபடுத்தி சாதித்துகாட்டியதும் பேசியாக வேண்டும். தொடர்ச்சியான போராட்டங்களும் அதை சாதித்தும் காட்டிய பிறகே மற்ற மேலைநாடுகளும் தவிர்க்கமுடியாமல் பெண்களுக்கான உரிமைகளை வழங்க நிர்பந்திக்கபட்டது. 

முதலாளிதுவ நாடுகளில் பெண்கள் சுதந்திரமாகவும், சம உரிமை பெற்றது போன்ற தோற்றத்தை ஊடகங்களும் அறிவுஜீவிகளும் வளமையாக பேசி கொண்டிருப்பார்கள். இவர்கள் மகளிர் தினத்தின் உண்மை வரலாறை என்றைக்கும் பேசியதில்லை. ஒரு சமூகம் உழைப்பு சுரண்டலை நியாயப்படுத்தும் சமூகமாக இருக்கும் போது உழைப்பாளிகளில் சரிபகுதியினரான பெண்கள் மட்டும் எப்படி சுதந்திரமாக சம உரிமை பெற்றவர்களாக இருக்க முடியும். எனவே தான் மேலே குறிப்பிட்ட மார்க்சியவாதிகள் பாட்டாளிவர்க்க போராட்டத்தின் பிரிக்கமுடியாத பகுதியாக பெண்சுதந்திரம், சம உரிமைகளை முன் வைத்தார்கள்..

இந்திய சமூகத்தில் காலனியாதிக்க அடிமை தளையை தகர்ப்பதற்காகவும், நவீன முதலாளித்துவ சுரண்டல் சமூகத்தை எதிர்த்த போராட்டத்தையும், ஆணாதிக்க சாதிய கொடுமைகளுக்கு எதிராய் நாம் நடத்திய போராட்டத்தையும் பெருமையோடு கொண்டாட வேண்டிய தினம். மேலும் நாம் அடைய வேண்டிய சோஷலிச சமூக லட்சியத்திற்கான வரலாற்று கடமையை தொடர்வதற்கான தெம்பை உரமேற்றிக் கொள்வதற்கான நாள். 
பெண்கள் குழந்தைகள் மீதான பாலியல் வன்முறை, குடும்ப வன்முறை, கல்வி வாளாகங்களில், குழந்தைகள் முதல் ஆராய்ச்சி மாணவிகள், ஆசிரியைகள் வரை மீது இழைக்கப்படும் பாலியல் அத்து மீறல்களுக்கான போராட்டத்தை நாம் முன்னிலும் வேகமாக முன்னெடுக்க வேண்டும். சம வேலைக்கு, சம ஊதியம் பாலின பாகுபாடின்றி கிடைக்க செய்வது, 8 மணி நேர வேலையை அனைத்து துறைகளிலும் உறுதிபடுத்துவது, திருமணம் குழந்தை பேறு உள்ளிட்டவைகளை பெண்களே முடிவெடுத்துக் கொள்ளும் உரிமை.. என பல்வேறு உரிமைகளை போராட்டங்களை முன்னெடுப்போம்...

இன்குலாப் ஜிந்தாபாத், உழைக்கும் மகளிர் உரிமை ஜிந்தாபாத், வெல்லட்டும் வெல்லட்டும் உலக உழைக்கும் மகளிர் தினம் வெல்லட்டும், மார்ச் 8 கோரிக்கைகள் வெல்லட்டும்.

-க.நிருபன் சக்கரவர்த்தி
(08.03.2022)

#womensday #workingwomen #internationalwomensday #march8

No comments:

Post a Comment

உலகை அதிரவைத்த மக்கள் சீனத்தின்செயற்கை நுண்ணறிவு டீப் சீக் (Deep seek)

உலகை அதிரவைத்த மக்கள் சீனத்தின்  செயற்கை நுண்ணறிவு டீப் சீக் (Deep seek) செயற்கை நுண்ணறிவு (artificial intelligence) துறையில் பேராதிக்கம் செ...