Friday, May 29, 2020

கம்யூனிஸ்டாக வாழ்வது..

கம்யூனிஸ்டாக வாழ்வது..

கம்யூனிஸ்ட் கட்சியில் உறுப்பினர்களாக இருக்கும் நாம் கம்யூனிஸ்டாக வாழ்கிறோமா? என்ற கேள்வி இயல்பாகவே நமக்குள் எழத்தான் செய்கிறது. ஒரு கம்யூனிஸ்டாக இருப்பது என்பது ஒவ்வொரு ஆண்டும் நாம் கட்சியின் உறுதிமொழிகளை படித்து படிவத்தில் கையெழுத்திடுவதோடு முடிவதல்ல அதன் பிறகான நமது வாழ்விலும், நடைமுறையிலும் அவ்வாறு வாழ்ந்திட வேண்டும் என்பதே அவசியமானதாகும். அதற்க்கு கட்சியின் அன்றாட பணிகளை சலிப்பின்றி முன்னெடுப்பதோடு மார்க்சிய லெனினிய தத்துவ ஆசான்கள் வழியில் இச்சமூக கட்டமைப்பை புரிந்து கொள்ள வேண்டும். 
வர்க்க அடிப்படையிலான இச்சமூகத்தில் சர்வதேச பார்வையோடு பாட்டாளி வர்க்க அரசியலை சமரசமின்றி முன்னெடுத்துச் செல்ல விவசாய தொழிலாளர்களின் முன்னணி படையாக கம்யூனிஸ்ட் கட்சி உள்ளது என்பதை உழைக்கும் மக்களிடம் கொண்டு செல்பவராக நாம் இருக்க வேண்டும். 

இயற்கையில் உருவான இப்பூவுலகில் மனித சமூகம் முழுமைக்குமான விடுதலைக்கான தத்துவமாக மார்க்சிய தத்துவம் விளங்குகிறது. மேம்பட்ட உயிரினமாக இயற்கையையே மாற்றியமைக்கும் வல்லமை கொண்டதாக மனித இனம் இருப்பினும், தன்னை தானே அழித்து கொள்வதோடு நமது ஒட்டுமொத்த உயிர்கோளத்தையே அழித்திடும் நோக்கத்தோடு முதலாளிதுவ சக்திகளும் அதன் இலாப வேட்கையும் உலகிற்கே அச்சுறுத்தலாக உள்ளது. பழமையான பிற்போக்கான சமூக கட்டமைப்பை பாதுகாத்து முதலாளிதுவ சக்திகளோடு கைகோர்த்து நிற்க்கும் நிலப்பிரபுதுவ வலதுசாரி சக்திகள் உழைக்கும் மக்களை வர்க்க உணர்வு பெறுவதிலிருந்து தடுத்து வருகிறது. 

ஆளும் வர்க்க தத்துவங்களுக்கு சேவகம் செய்யும் பல்வேறு  சித்தாந்தங்களை அரசியல் கட்டமைப்புகளை முதலாளிதுவ நிலப்பிரபுதுவ அரசுகள் ஏற்படுத்தியுள்ளது. அது ஒவ்வொரு தனிமனித எண்ணங்களிலும் பழமையான மூடபழக்க வழக்கங்கள் துவங்கி தனிமனித சுயநல சிந்தனைகள் வரை விரைவி பரவிக்கிடக்கிறது. எனவே தான் பாட்டாளி வர்க்கத்தை பொறுத்தவரையில், அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றுவதும் அரசியல் விடுதலையை சாதிப்பதும் புரட்சியுனுடைய துவக்கம் மட்டுமே, பிரமாண்டமான பணிகளை அதன் பின்னர்தான் தொடங்க வேண்டியிருக்கும். 

சமுதாய விடுதலையின் கட்டங்களை புரிந்து கொண்டு, எதிரிவர்க்கத்தின் தற்போதைய இருத்தலை கண்டறிந்து, பரந்துபட்ட உழைக்கும் மக்களோடு நட்பு சக்திகளை ஒன்றிணைத்து போராட்டங்களை முன்னெடுக்கும் அதே வேளையில் நமக்குள்ளான தனிமனித போராட்டத்தையும் இணைக்க வேண்டும். அதற்க்கு நாம் மார்க்சிய லெனினியத்தின் செயலூக்கமுள்ள தத்துவங்களை கற்றுதேறும் மாணவர்களாக முதலில் இருக்க வேண்டும். 
இயக்கவியல் பொருள்முதல்வாத கண்ணோட்டத்தோடு இயற்கையையும், வரலாற்றையும், உபரிமதிப்பு குறித்தான பொருளாதார கோட்பாடுகளையும் நிச்சயம் ஒவ்வொரு உறுப்பினரும் கற்றுதேற முடியும் எனபதே வரலாற்று நிரூபணம். எழுதபடிக்க தெரியாத எத்தனையோ விவசாயிகளும், தொழிலாளிகளும் மார்க்சியக் கல்வியை கற்றறிந்து மிகச்சிறந்த கம்யூனிஸ்ட் கட்சி ஊழியர்களாக, தலைவர்களாக இன்றும் நம்மோடு செயல்பட்டு வருகிறார்கள் என்பதை நாம் புறிந்து கொள்ள வேண்டும். 

சமூக வளர்ச்சி குறித்தான அறிவியளான மார்க்சிய லெனினியமானது தொடர்ந்து வளர்ந்து கொண்டும் செழுமையடைந்து கொண்டும் செல்லும் தத்துவமாகும். அறிவியல் வளர்ச்சியின் பெருக்கம் தவிர்க்க முடியாமல் மார்க்சியத்தையும் அதே அளவு வளர்ச்சிக்கு இட்டு செல்கிறது. எனவே நிலவுகின்ற சமுகத்தில் இருக்கும் அனைத்தையும் குறித்தான ஒரு அடிப்படையான புரிதலை நாம் கொண்டிருக்க வேண்டும். மார்க்சியத்தை கற்பதென்பது நடைமுறையுடன் கூடியதென்பதை அவசியமான நிபந்தனையாக உள்வாங்க வேண்டும். 
புரட்சிகர நடைமுறையில் நம்மை இணைத்துக் கொள்ளாமல் புரட்சிகர மாற்றத்தை ஏற்படுத்த முடியாது. நடைமுறையிலிருந்து கற்பதும், கற்பதிலிருந்து நடைமுறைக்குமான இயக்கமானது தொடர்ந்து நடந்து கொண்டே இருக்க வேண்டும். இதில் நாம் நம்மையோ அமைப்பையோ பிரித்து வைத்து பார்க்க கூடாது. அமைப்பில் உள்ள ஒவ்வொரு உறுப்பினரின் அனுபவம் தான் அமைப்பிற்கான ஒட்டுமொத்த அனுபவத்தை கொடுக்க முடிகிறது. நடைமுறையிலிருந்து அறிவுக்கும், அறிவிலிருந்து மீண்டும் நடைமுறைக்கும் என்பது அமைப்புக்கும் தான். அது மார்க்சியத்தின் தலைசிறந்த சித்தாந்த அறிவை பெறுவதோடு புரட்சிகரமான நடைமுறையும் இணையும் போதே ஏற்படுகிறது. 

மக்களிடம் ஒரு கம்யூனிஸ்ட் இணைந்தே இருக்க வேண்டும் கட்சியின் பத்திரிக்கைகளை, பிரசுரங்களை, துண்டு அறிக்கைகளை வாசிப்பதும் அதை மக்களிடம் கொண்டு செல்வதும், நாம் வசிக்கும் பகுதிகளில் சில மக்கள் பிரச்சனைகளுக்காக சுவரொட்டிகளை, துண்டறிக்கைகளை நமது அமைப்பின் சார்பில் கொண்டு செல்லவும; தானே எழுதும் வகையில், பேசும் வகையில் உருவாகவேண்டும். தன்னோடு இருப்பவர்களையும் உருவாக்க வேண்டும்.

"விமர்சனம், சுயவிமர்சனம்" எனும் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆகச்சிறந்த நடைமுறைதான் நம் அமைப்பின் செயலூக்கமுள்ள வர்க்க போராட்டத்தை முன்னெடுக்கும் ஆயுதமாக உள்ளது. ஒவ்வொரு கட்சி உறுப்பினரும் அமைப்புக் கூட்டங்களில் உறுப்பினர்களின் மீதான விமர்சனங்களை முன்வைக்கும் அதே வேளையில் தன் மீதான விமர்சனத்தையும் பாரபட்சமின்றி வைக்க வேண்டும். 

வர்க்க அரசியலை கடந்து வேறு ஒரு பார்வை அமைப்பு கூட்டங்களில் வருவதை கட்சி ஒரு போதும் அனுமதிப்பதில்லை. அமைப்பின் முடிவுகள் எடுக்கும் போது நடக்கும் வேறுபட்ட விவாதங்கள்; முடிவுகளுக்கு பின் ஒட்டுமொத்த கட்சியின் ஒவ்வொரு உறுப்பினரின் முடிவாக அமுலாக வேண்டும். குறிப்பிட்ட முடிவுகளுக்கு பிறகான அமைப்பு கூட்டங்களில் அமுலான அரசியல் வேலைகளின் அடிப்படையில் விவாதம் அமைய வேண்டும். 
எந்தவொரு சூழலிலும் அமைப்பின் எதார்த அனுபவங்களுக்கு ஒத்துவராத தனிநபர் கருத்தின் அடிப்படையில் விவாதம் அமைந்துவிடக் கூடாது. ஜனநாயக மத்தியத்துவபடுத்தப்பட்ட நம் இயக்கத்தின் ஒவ்வொரு பகுதியும் "மேலிருந்து கீழும்", "கீழிருந்து மேலும்" என்ற வகையிலேயே கட்டமைக்கப்பட்டு அமைப்பின் அனுபவமாகவுள்ளது. 
கட்டுபாடு என்பது அமைப்பின் உணர்வோடு புரிந்து கொள்ள வேண்டும் அமைப்பின் நலனை தாண்டி தனிநபரின் நலனை முன்நிறுத்தகூடாது. கட்சியின் நலனை தன்னைவிட மேலானதாக கருத வேண்டும் கட்சியின் நலனிற்கு ஒரு கட்சி உறுப்பினர் என்ற வகையில் நிபந்தனையின்றி கட்டுபட வேண்டும். ஏனென்றால் கம்யூனிஸ்ட் கட்சியின் நலன் என்பது உழைக்கும் மக்களின் நலனின்றி வேறாக இருக்க முடியாது. அதே போல் ஒவ்வொரு கட்சி உறுப்பினரும் மக்களோடு இருப்பது என்பதும் போராட்டங்களை முன்னெடுப்பது என்பதும் கட்சியை அங்கு கட்டுவதோடு பல மக்களை நம் அமைப்பின் பக்கம் வென்றெடுபதோடு சேர்ந்தது. 

மக்களிடமிருந்து நமக்கான நிதியை நேரடியாக ஒவ்வொரு உறுப்பினரும் சென்று பெருவது புரட்சிகர அனுபவதோடும், கட்சியின் வளர்ச்சிக்கு நமது வருமானத்திலிருந்து ஒரு பகுதியை லெவியாக செலுத்துவதும் புரட்சிகர உணர்வோடு கலந்தது.

சுயமுயற்சி, அற்பணிப்பு, தியாகம், கூட்டுச்செயல்பாடு, தனிநபர் பொறுப்பு, விமர்சனம்-சுயவிமர்சனம், சகமனிதன் மீதான அன்பு, புரட்சியின் மீதான வர்க்க பார்வை, மாற்றத்தை உருவாக்க முடியும் என்ற உளபூர்வ நம்பிக்கை, அநீதிகளுக்கெதிரான கோபம், மக்களோடு மக்களாக  கம்யூனிஸ்டுகளின் வாழ்வு என அனைத்தும் மகத்தானது என்பதை நாம் உள்வாங்கியவராக இருக்க வேண்டும்.

-க.நிருபன் சக்கரவர்த்தி

ஆதார நூல்கள்:-

சிறந்த கம்யூனிஸ்டாவது எப்படி – லியூ சோசி
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) அமைப்பு சட்டம்.

2 comments:

  1. மிகச்சிறப்பு தோழர்... ஆயிரமாயிரம் செவ்வணக்கங்களும்... வாழ்த்துக்களும்...❤

    ReplyDelete

உலகை அதிரவைத்த மக்கள் சீனத்தின்செயற்கை நுண்ணறிவு டீப் சீக் (Deep seek)

உலகை அதிரவைத்த மக்கள் சீனத்தின்  செயற்கை நுண்ணறிவு டீப் சீக் (Deep seek) செயற்கை நுண்ணறிவு (artificial intelligence) துறையில் பேராதிக்கம் செ...