Tuesday, January 25, 2022

இந்திய தேசத்தின் 73வது குடியரசு தினம்

இந்திய தேசத்தின் 73வது குடியரசு தினத்தில் இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தின் முகப்புரையை வாசித்து உறுதிமொழி.
மத்திய சென்னை மாவட்டம், சிந்தாதிரிப்பேட்டை பகுதியில் உள்ள மாமேதை பாபாசாகேப் அம்பெத்கரின் சிலை முன்பு இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தின் முகப்புரையை வாசித்து உறுதிமொழி எடுக்கும் நிகழ்வு நடைபெற்றது.
"இந்திய அரசியல் சாசன முகப்புரை 

இந்தியர்களாகிய நாம், இந்தியாவை இறையாண்மை கொண்ட, சோசலிச, மதச்சார்பற்ற, ஜனநாயக குடியரசாக அமைக்கவும்.,

அதன் குடிமக்கள் அனைவருக்கும் சமூக,பொருளாதார, அரசியல் ஆகியவற்றில் நீதி .,

எண்ணத்தில், வெளிப்படுத்துதலில், நம்பிக்கையில், பற்றுறுதியில் வழிபடுதலில் சுதந்திரம்.,

தகுதிநிலையிலும், வாய்ப்புரிமையிலும் சமநிலையை உறுதியாக கிடைக்கச் செய்யவும்.,

 தனியொருவரின் மாண்புக்கும், நாட்டின் ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாடு கொண்ட சகோதரத்துவம் பெற்றிட.,

என உள்ளார்ந்து உறுதியேற்று செயல்படுவோம்.
மேலும், ஒன்றிய அரசின் சுதந்திர போராட்ட வீரர்களுக்கு எதிரான பாசிச நடவடிக்கை குறித்து, வ.உ.சி., பாரதியார், வேலுநாச்சியார் மற்றும் நேதாஜி உள்ளிட்ட விடுதலைப் போராட்ட வீரர்களின் மகத்தான பங்களிப்பு குறித்து பொதுமக்கள் மத்தியில் உரை நிகழ்த்தப்பட்டது. 
#Republicday2022 #republicdayindia #RepublicDay #SFI #SFItamilnadu

Monday, January 24, 2022

James webb

மனிதகுலம் ஆவலோடு எதிர்பார்த்த 
"ஜேம்ஸ் வெப்" விண்வெளி தொலைநோக்கி தனது சுற்றுபாதையை (L2) மிகச்சரியாக அடைந்துள்ளது. 
இதுவரை நாம் பார்த்த விண்மீன்கள், பால்வெளி அண்டம், பேரண்டம், அண்டசராசரம், கருந்துளை, நெபுலா என எண்ணற்ற விண்வெளி பேரதிசயங்களை நாம் நூறு மடங்கு தெளிவுற பார்க்க போகிறோம். 

1350 கோடி ஆண்டுகளுக்கு முன் பிரபஞ்சம் தோற்றம் குறித்தான கதையை மேலும் விளக்கமாக சொல்லப்போகிறது.

நாசாவால் விண்ணில் ஏவப்பட்ட உலகின் மிகப்பெரிய சக்தி மற்றும் திறன் வாய்ந்த ‘ஜேம்ஸ் வெப்’ விண்வெளி தொலைநோக்கி, பிரெஞ்ச் கயானாவில் உள்ள ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து ஏரியன்5 ராக்கெட் மூலம் கடந்த டிசம்பர் மாதம் 25ந்தேதி கிறிஸ்துமஸ் தினத்தில் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. 

இந்திய மதிப்பில் சுமார் 75 ஆயிரம் கோடி என்ற மிகப்பெரிய பட்ஜெட்டில் பல ஆண்டுகளாக கடினமாக உழைத்து ஆய்வாளர்கள் இந்த தொலைநோக்கியை உருவாக்கியுள்ளனர். 
நிலவில் இருந்து மூன்று மடங்கு தொலைவுக்கு சென்று, சூரியனை சுற்றியவாறு தனது ஆய்வுப்பணியை மேற்கொள்ளும். பிரபஞ்சத்தின் முதல் நட்சத்திரத்தை கண்டுபிடிக்கும் சக்திகொண்ட இந்த தொலைநோக்கி நவீன மனித குலம் முன்பு அறிந்திடாத பல அரிய தகவல்களை அடுத்த சில ஆண்டுகளுக்கு அளிக்க உள்ளது.

இந்த நிலை ஜேம்ஸ் வெப் தொலைநோக்கியை விண்ணில் நிலைநிறுத்தும் பணி வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டதாக நாசா விஞ்ஞானிகள் தெரிவித்தனர். தொலைநோக்கியின் ஒவ்வொரு பாகமும் படிப்படியாக செயல்பாட்டுக்கு கொண்டுவரப்பட்ட நிலையில், முக்கிய நிகழ்வாக அதன் கண்ணாடிகள் விரிக்கப்பட்டு, சரியான முறையில் பெருத்தப்பட்டது. இதனை தரைக்கட்டுப்பாட்டில் இருந்து விஞ்ஞானிகள் வெற்றிகரமாக செய்துமுடித்தனர். இந்த தகவலை நாசா தன்னுடைய டுவிட்டரில் தெரிவித்தது.
இந்த புதிய தொலைநோக்கி, முன்னதாக, 31 ஆண்டுகளுக்கு முன் விண்வெளியில் ஏவப்பட்ட ஹப்பிள் தொலைநோக்கியை விட 100 மடங்குசக்தி மற்றும் திறன் கொண்டதாகும்.

அதனுள் நிரப்பப்பட்டுள்ள எரிபொருள் உபயோகத்தை பொறுத்து இந்த தொலைநோகி அதன் உத்தேசித்த ஆயுட்கால அளவான 10 ஆண்டுகளை கடந்தும் விண்வெளியில் இருந்து ஆய்வு செய்யும் திறன் உள்ளது என்று கணிக்கப்பட்டுள்ளது.

பூமியிலிருந்து சுமார் 15 லட்சம் கிலோமீட்டர் தொலைவில் தொலைநோக்கியின் பின்புறம் பூமி மற்றும் சூரியனை பார்த்தவாறு கிடைமட்டமாக சுற்றிக்கொண்டு புவிக்கு நேராக நிலைநிறுத்தபட்ட சுற்றுதிசையோடு சூரியனையும் சுற்றி வரும்.
இது போன்ற பல விண்வெளி விஞ்ஞான வளர்ச்சியை கடந்த பத்தாண்டுகளுக்கு முன்பே அடைந்திருக்க வேண்டியது. அறிவியல் வளர்ச்சியும் கண்டுபிடிப்புகளும் மக்களுக்கானதாகும் வரை வளர்ச்சியின் வேகம் மந்தமாகவே இருக்கும். முதலாளித்துவ சமூக கட்டமைப்பு தகர்ந்து அனைவருக்குமான சமூகமாக உருவெடுக்க வேண்டிய கட்டாயத்தை விண்வெளி ஆய்வு வளர்ச்சியும் நமக்கு உணர்த்துகிறது. 

#JamesWebbSpaceTelescope #jameswebb #hubble #hubbletelescope #hubble30

Saturday, January 22, 2022

சிலியின் புதிய சகாப்தம்

சிலியின் புதிய சகாப்தம் துவங்கியது.

நேற்று, சிலி தேசத்தின் ஜனாதிபதியும் இடதுசாரியுமான கேப்ரியல் போரிக் தனது மந்திரி சபையை அறிவித்துள்ளார். அதில் 24 அமைச்சர்களில் 14 பேர் பெண்கள் என்பது குறிப்பிடதக்கதாகும். சுமார் 60% விழுக்காடு வரை அமைச்சரவையில் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது குறித்து முதலாளிதுவ ஊடகங்களே சிலாகித்து எழுதி வருகிறது. "இது இயல்பானதே குறிப்பிட்ட துறையில் சிறந்தவர்கள் என்ற வகையில் அமைச்சரவை ஒதுக்கப்பட்டுள்ளது" என்று கேப்ரியல் கூறியுள்ளார்.
மேலும் இதில் மூன்று அமைச்சர்கள் கம்யூனிஸ்ட் கட்சியை சார்ந்தவர்களாவர். அதில் தோழர் கமிலா வலேஜோ அவர்கள் அரசின் அதிகாரபூர்வ செய்தி தொடர்பாளராக அறிவித்துள்ளனர். அவர் புரட்சிகரமான பல மாணவர் இயக்க போராட்டங்களை வழிநடத்திய இளம் கம்யூனிஸ்ட் ஆவார்.
2008 ஆம் ஆண்டு சிலியை ஆண்டு வந்த அமெரிக்க ஏகாதிபத்திய நிழல் அரசுக்கு எதிரான வலுமிகிக்க போராட்டம் நடந்த போது போராட்டகாரர்களை நோக்கி துப்பாக்கி சூடு, கண்ணீர் புகை குண்டு, இரப்பர் தோட்டக்களால் சுடப்பட்டபோது  வெடித்து சிதறிய துப்பாக்கி குண்டுகள் தோட்டா சிதிலங்களை குவித்து அதன் முன் அமர்ந்து அவர் நடத்திய தொடர் போராட்டத்தின் புகைப்படமே இரண்டாவதாக இருப்பது.
மூன்றாவது புகைப்படத்தில் இருப்பது மற்றொரு அமைச்சரும் சிலி சோசலிஸ்ட் கட்சியின் மகத்தான மக்கள் தலைவர் தோழர் சால்வடார் அலெண்டெவின் பேத்தி தோழர் மாயா பெர்னாண்டஸ் ராணுவ அமைச்சர். தோழர் அலெண்டெ இலத்தீன் அமெரிக்க கண்டத்தில் தேர்தல் முறையில் மக்களால் தேர்தெடுக்கப்பட்ட முதல் மார்க்சிஸ்ட் ஆவார். அவர் தேர்தெடுக்கப்பட்டதை பொருத்துகொள்ள முடியாத ஏகாதிபத்தியம் 1973 ஆம் ஆண்டு அமெரிக்க சிஐஏ வின் மனித ஓநாய்களால் படுகொலை செய்யப்பட்டார்.

இனி அலெண்டே வாரிசுகள் வட்டியும் முதலுமாய் திருப்பி செலுத்தும் காலம் துவங்கிவிட்டது.

#Chile #socialist #Communist #socialism #communism #DemocraticSocialism #Left #LeftAlternative #Leftist #latinamerican

சோசலிசமே இலக்கு

சோசலிசமே இலக்கு

"சமூக அவலங்களை எதிர்த்து பொதுவாழ்வில் உரிமைக்காக போராடும் எங்களை பொருளை வாங்க-விற்க வந்த நுகர்வு கலாச்சார பார்வையில் பார்க்கக் கூடாது. பணக்காரர்களுக்கு ஒரு நீதி, ஏழைக்கு ஒரு நீதி, சிலியின் சமத்துவமின்மையால் ஏழைகள் பாதிக்கப்படுவதை இனியும் அனுமதிக்க மாட்டோம்." 
38 ஆண்டுகளுக்கு பிறகு சிலியில் மீண்டும் இடதுசாரி அரசை உருவாக்கவுள்ள கேப்ரியல் போரிக் மாணவ தலைவராக இருக்கும்போது எழுப்பிய முழக்கங்கள் தான் இவை.

கடந்த பத்தாண்டுகளில் உலகம் முழுவதும் ஏற்பட்ட நிதி மூலதனத்தின் கடுமையான நெருக்கடி உலக அரசியலை கடும் வலதுசாரி திருப்பத்தை நோக்கி கொண்டு சென்றது. டொனால்ட் ட்ரம்ப், போரிஸ் ஜான்சன், போல்சனரோ, நரேந்திர மோடி போன்ற அதிதீவிர வலதுசாரி எண்ணம் கொண்ட அரசியல் தலைவர்கள் முன்னுக்கு வந்தனர். 

அதேசமயம் நவதாராளமய கொள்கையை எதிர்த்து, கடும் உழைப்பு சுரண்டலுக்கு எதிராக, கொரோனா காலத்தில் முதலாளித்துவ சுகாதார கட்டமைப்பின் தோல்வியை எதிர்த்து சமூக உரிமைகளுக்காக உலக மக்கள் நடத்திய போராட்டங்கள் உலக அரசியலை ஆட்டம் காண செய்தது. சோசலிச அரசுகளின் பொதுமக்கள் நலன்சார்ந்த அரச கட்டமைப்புக்கும், முதலாளித்துவத்திற்க்கும் இடையிலான முரண்பாடு தெளிவாக வெளிப்பட்டது. 

அரசியலில் உள்ள யாவரும் மக்கள் நலனை, ஜனநாயகத்தை, சோசலிசத்தை பேசவேண்டிய நிலைமைக்கு அரசியல் நகர்த்துள்ளது. இந்த கடும் நெருக்கடி முதலாளித்துவ நாடுகளின் இயலாமைக்கு  சோசலிசமே மாற்று எனும் நிலை முன்னுக்கு வந்துள்ளது.

கல்வி வியாபாரத்திற்கு எதிராக உலகம் முழுவதும் மாணவர் போராட்டம் அதிகரித்துள்ளது. மேலும் மாணவர்கள் தங்கள் அடிப்படை உரிமைகளுக்காக மட்டுமின்றி பொதுமக்களின் நலன் சார்ந்த கோரிக்கைகளிலும் பெருந்திரளாக பங்கெடுப்பது அதிகரித்துள்ளது. இந்தியாவில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து மாணவர்களின் போராட்டம் குறிப்பிடத்தக்கது. விவசாயிகளின் வீரம் செறிந்த ஓராண்டு போராட்டத்தில் மாணவர் சங்கங்கள் இறுதிவரை உடன் நின்றது.

இத்தகைய போராட்டங்களில் முன்னிற்க்கும் மாணவர்களை கைது செய்வதும், ஆர்.ஆர்.எஸ். அடியாட்கள் ஏபிவிபி கொண்டு தாக்குவதும் நிகழ்ந்தது. குறிப்பாக ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் மாணவர் பேரவை தலைவரும், இந்திய மாணவர் சங்கத்தின் உறுப்பினருமான ஆயிஷி கோஷ் உள்ளிட்டு பலர் கடுமையாக தாக்கப்பட்டார். உடல்முழுவதும் இரத்த காயங்களோடு அடுத்தநாள் போராட்டத்திலும் பங்கெடுத்தார். ஜாமியா மிலியா, அலிகார், டெல்லி பல்கலைக்கழகம், கெளஹாத்தி பல்கலைக்கழகம் என போராடிய மாணவர்கள் மீது 20,000 மேற்பட்ட வழக்குகள் போடப்பட்டது. என்.ஐ.ஏ. மூலம் ஆள்தூக்கி சட்டம் எனப்படும் யுஏபிஏ மூலம் எண்ணற்ற மாணவர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் இதுவரை இல்லாத வகையில் கடந்த ஐந்தாண்டுகளில் ஐந்தாயிரத்துக்கும் மேற்பட்ட வழக்குகள் மாணவர்கள் மீது மட்டும் போடப்பட்டுள்ளது. இதில் மாணவர் சங்க தலைவர்கள் ஒவ்வொருவர் மீதும் குறைந்தது இருபது வழக்குகள் புனையப்பட்டுள்ளது. திமுக தலைமையிலான முற்போக்கு ஜனநாயக கூட்டணி வெற்றிபெற மாணவர் போராட்டம் மிக முக்கியமான காரணமாகும். ஆனால் மாணவர்கள் மீதான பொய வழக்குகள் தொடர்ந்த வண்ணமே உள்ளது. சமீபத்தில் கோவையில் வேளாண் பல்கலைக்கழக குளறுபடிக்கு எதிராக போராடிய மாணவர்களை இரவு முழுவதும் சிறையில் அடைத்து காலையில் மாஜிஸ்டிரேட் உத்தரவால் வெளியிடப்பட்டனர். இதில் ஒரு மாணவி உள்ளிட்டு கைது செய்யப்பட்டு வழக்கு புனையப்பட்டுள்ளது. சில தினங்களுக்கு முன் ஒரக்கடம் ஃபாக்ஸ்கான் போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்களோடு பங்கெடுத்த மாணவர் சங்க தலைவர்களையும் கைது செய்து நான்கு  நாட்கள் சிறையில் வைத்திருந்தது. ஆட்சியாளர்கள் யார் மாறினாலும் காட்சிகள் மாற அரசு இயந்திரம் மக்களுக்கானதாக மாற்றப்பட வேண்டும்.
பாண்டிச்சேரி மத்தியில் பல்கலைக்கழகத்தில் கட்டண உயர்வுக்கு எதிராக போராடிய மாணவர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். ஐஐடிகளில் தொடரும் சமூகநீதிக்கு எதிரான நடவடிக்கைகள், பல்கலைக்கழகம் உள்ளிட்ட கல்விதுறையில் இந்துத்துவா தலையீடு குறைந்தபாடில்லை. நீட் தேர்வு விலக்கு வரைவை இன்று வரை குடியரசுத் தலைவருக்கு அனுப்பாமல் ஆளுநர் இழுத்தடித்து வருகிறார். மாநில முதல்வர் ஒருசில சந்திப்போடு அமைதியாகியுள்ளார். பள்ளிகல்வி அமைச்சர் தேசியக்கல்வி கொள்கையில் நல்ல அம்சத்தை நடைமுறைபடுத்துவது குறித்து யோசிப்போம் என்கிறார். ஒன்றிய பாஜக அரசின் காவிகார்பரேட் கொள்கையை எதிர்ப்பதென்பது சமூக அரசியல் பொருளாதார கட்டமைப்பில் சமரசம் செய்து கொண்டு எதிர்க்க முடியாது. மக்களோடு, மாணவர்களோடு வீதியில் இறங்கி போராட வேண்டும். ஒன்றிய அரசின் மக்கள் விரோத சட்டங்களை அமல்படுத்த மறுக்க வேண்டும். 
மாணவர் தற்கொலை, பாலியல் சீண்டல் போன்ற கல்வி சூழலில் ஏற்பட்டுள்ள அவலங்களை மாற்றியமைத்திட பொதுக்கல்வியை பலப்படுத்த வேண்டும். ஆசிரியர்கள் தங்கள் பணியை சமூக அரசியல் பணியாக உணர வேண்டும். திமுக அரசு கடந்த 2007 ஆம் ஆண்டு நிறுத்திய மாணவர் பேரவை தேர்தல்களை மீண்டும் நடந்த வேண்டும். ஆரம்ப கல்விமுதல் ஆராய்ச்சி கல்வி வரை அரசே வழங்க வேண்டும். கல்வி மட்டுமின்றி சுகாதாரம், போக்குவரத்து, விவசாயம், கனிமவளங்கள், தொழிற்சாலை மற்றும் தொழில் வளர்ச்சியும் பொதுகட்டமைப்போடு இணைக்கப்பட வேண்டும்.
தேசம்முழுமைக்கும் ஒன்றிய அரசு எதிர்ப்பில் தமிழகம் முன்னிற்க்க மாணவர் போராட்டம் மிக முக்கியமானது. தேசியக்கல்வி கொள்கையை எதிர்த்து, நீட் தேர்வை எதிர்த்து தொடர் போராட்டங்களை முன்னெடுப்போம். 280க்கும் மேற்பட்ட மாணவர் தியாகிகளை நெஞ்சில் ஏந்தி சுதந்திரம், ஜனநாயகம், சோசலிசம் என்ற இலக்கை நோக்கி தொடந்து பயணிப்போம்.

இன்று (30.12.2022)இந்திய மாணவர் சங்கத்தின் 52வது அமைப்பு தினம்.

க.நிருபன் சக்கரவர்த்தி
மத்தியக்குழு உறுப்பினர்
இந்திய மாணவர் சங்கம்.

Thursday, January 20, 2022

மகத்தான செயல்வீரன் லெனின்

மகத்தான செயல்வீரன் லெனின்.

- 1929ல் ஜவஹர்லால் நேரு எழுதிய விரிவான கட்டுரையின் சில பகுதி.
''... மாஸ்கோ செஞ்சதுக்கத்தில் அமைதியாக ஆழ்ந்துறங்கும் அவரது உடலில் ருஷ்ய மன்ணின் மணம் வீசுகிறது. மாக்சிம் கார்க்கி கூறியது போல பூமிப்பந்தில் மனித நியாயத்தை நிலைநாட்டமுடியும் என்பதற்காக வாழ்க்கையின் அனைத்து சொகுசுகளையும் அவர் துறந்தார். 

லெனினை ஆக்ரோசமானவன் என்கிறார்கள். ஆனால் புரட்சிகர கடமை எவ்வளவு கடுமையானது- பெரும் பயிற்சிக்குரியது என்பதை அவர் வெளிப்படுத்தினார். அவர் ஒற்றுமை என்பதற்கு நம் நாட்டில் நடப்பது போல எந்த ஒட்டுவேலையிலும் இறங்கவில்லை. செயல் வீரர்களையும் அனுதாபிகளையும் அவர் பிரித்தறிந்தார். நடப்பு யதார்த்தங்களின் அடிப்படையில் செயலாற்றுவது என அவர் பேசினார். 

டூமா நாடளுமன்றத்தையும் அதே நேரத்தில் ஆயுத போராட்டத்தையும் அவர் பயன்படுத்தினார். நமது லட்சியம் நடைமுறைப்படுத்தப்பட அனைத்து வழிகளையும் கையாளுதல் என்பதை அவர் உணர்த்தினார். 

ரொமைன் ரோலந்த் கூறியபடி "இந்த நூற்றாண்டின் தன்னலமற்ற மகத்தான செயல்வீரர் லெனின்". லெனின் ருஷ்யாவிற்கு மட்டுமல்ல உலகிற்கே வலிமைக்கான மரபாகியுள்ளார் என எழுதினார்.

#Lenin

Tuesday, January 11, 2022

கேரளாவில் காங்கிரஸின் கடைசி அத்தியாயம்

தோழர் தீரஜ் படுகொலையை கண்டித்து திருப்பூர் மாவட்டத்தில் SFI - DYFI சார்பில் கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது.

நேற்றையதினம் கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்திலுள்ள அரசு பொறியியல் கல்லூரி மாணவரும் இந்திய மாணவர் சங்க உறுப்பினருமான  தோழர் தீரஜ் மாணவர் காங்கிரஸ் மற்றும் இளைஞர் காங்கிரஸ் குண்டர்களால் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

கல்லூரியில் நடைபெற இருக்கும் மாணவர் பேரவை தேர்தலில் SFI சார்பில் B.tech நான்காம் ஆண்டு படிக்கும் மாணவரான தோழர் தீரஜ் பேரவைத்தலைவராக போட்டியிட இருந்தார். அரசியல் விழிப்புணர்வு மிக்க பிரச்சாரம் மற்றும் பணிகளால் வெற்றி உறுதியானதால். காங்கிரஸ் மாணவர் அமைப்பான KSU படுதோல்வி அச்சத்தில் இளைஞர் காங்கிரஸ் ரவுடி குண்டர்களை வைத்து கத்தியால் சரமாரியாக குத்தி தீரஜை படுகொலை செய்துள்ளது. உடனிருந்த இரண்டு மாணவர் சங்க தோழர்களும் கடுமையாக தாக்கப்பட்டு கொடுங் காயங்களோடு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

இந்தியா முழுவதும் RSS அமைப்பை இந்துதுவ பயங்கரவாதத்தை வளர்ப்பதில் காங்கிரஸின் வலதுசாரி அரசியல் இன்று வரை துணைபுரிந்து  வருகிறது. கேரளத்தில் ஏற்பட்டு வரும் இடது ஜனநாயக மாற்றத்தில் SFI ன் பங்கு மகத்தானது. RSS, BJPயை எதிர்க்க துணிவில்லாமல் உத்திரபிரதேசத்தை விட்டு வயநாடு ஓடி வரும் அமைப்பல்ல எங்கள் அமைப்பு. ஒட்டுமொத்த கட்சியையும் திரிபுராவில் RSSற்கு விற்றுவிட்டு கோஸ்டிபூசல் அரசியல் செய்பவர்களுக்கு எப்படி தெரியும். மாணவர்களை அரசியல்படுத்தி சாதி, மத, வர்க்க முரண்பாடுகளை முன்வைத்து போராட்டங்களையும் பிரச்சாரத்தையும் முன்னெடுக்கும் தோழர் தீரஜ் அருமை. ABVP பாசிச கும்பலோடு இணைந்து KSU, இளைஞர் காங்கிரஸ், மாணவர் காங்கிரஸ் செய்துள்ள இந்த படுபாதக கொலை காங்கிரஸின் இறுதி அத்தியாயத்தை கேரளத்தில் தனக்கு தானே எழுதியுள்ளது.

இந்திய சமூகத்தில் நிலவும் ஜனநாயகத்திற்கும் பாசிசத்திற்குமான முரண்பாட்டில் காங்கிரசின் அரசியல் ஒரு மண்ணும் புடுங்க போவதில்லை.