Monday, June 17, 2019

நீட் எனும் உயிர்கொல்லி தேர்வு

நீட் எனும் உயிர்கொல்லி தேர்வு

உடல் முழுவதும் பற்றி எரிய மாணவி வைசியாவின் கதறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வருகிறார்கள் மண்ணெண்ணையை ஊற்றி உடலை பற்ற வைத்துக் கொண்டதால் தீயை அணைக்க முடியாமல் இறந்து போகிறாள். மரணித்து போன மாணவி வைசியாவின் அலறல் சத்தம் தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையை சோகத்தால் நிசப்தமாக்கியுள்ள நிலையில், இச்சம்பவத்திற்கு சற்று நேரத்திற்க்கு முன்புதான் திருப்பூர் மாவட்டம் வெள்ளியங்காடு பகுதியை சார்ந்த பனியன் தொழிலாளியின் 17 வயது மகள் ரிது ஸ்ரீ தன் உயிரை தூக்கு கயிற்றிற்க்கு இறையாக்கியுள்ளார். அதனை தொடர்ந்து விழுப்புரம் மோனிசா என்ற மாணவியும், சேலம் எடப்பாடி பகுதியைச் சார்ந்த பாரத பிரியன் என்ற மாணவனும் என தொடர்ச்சியான கோர மரணத்திற்கு காரணம் நீட் தேர்வு தான்.
பன்னிரண்டாம் வகுப்பு தேர்வில் நல்ல மதிப்பெண்களைப் பெற்றும் நீட் தேர்வில் போதிய மதிப்பெண் எடுக்க முடியாமல் போனதால் மனம் உடைந்து இந்த பச்சிளம் பிள்ளைகள் உயிரை மாய்த்துக் கொண்டுள்ளனர். அனிதாவில் துவங்கிய இந்த மரண ஓலம் பிரதீபா, அருண் பிரசாத், சுபஸ்ரீ என்ற வரிசையில் வைசியா, ரிது ஸ்ரீ, மோனிசா, பாரத பிரியன் என பதினோர் உயிரை குடிதுள்ளது நீட். மோடியும், எடப்பாடியும் வழக்கம் போல் மௌனித்துக் கிடக்கிறார்கள்.
நீட் தேர்வை நடத்துவதன் மூலம் தனியாரின் லாப வெறி கட்டுப்படுத்தப்படுகிறது(!) ஏழை எளிய மாணவர்களுக்கும் மருத்துவ படிப்பை சாத்தியமாக்க முடியும்(!) போன்ற பல்வேறு காரணங்கள் நீட் தேர்வுக்கு ஆதரவாக வரிந்துகட்டி தெரிவிக்கப்பட்டது.
இந்த ஆண்டு நீட் தேர்வு சுமார் 15 லட்சம் மாணவர்கள் கடந்த மே 5ஆம் தேதி மற்றும் 20 ஆம் தேதிகளில் எழுதியுள்ளனர். ஜூன் 5ம் தேதி நீட் தேர்விற்கான முடிவு அறிவிக்கப்பட்டது. இந்தியா முழுவதும் 56.6 சதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளார்கள். இதில் தமிழகத்தில் தேர்வு எழுதிய 1,23,078 பேர்களில் 59,785 பேர் அதாவது 48.57 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதாவது தேர்வு எழுதிய மாணவர்களில் 51.43 சதம் மாணவர்கள் தமிழகத்தில் தேர்வாகவில்லை.
இந்தியா முழுவதும் வெளியான தேர்வு முடிவில் எஸ்சி பிரிவைச் சார்ந்த மாணவர்கள் 20,009 பேரும் எஸ்டி பிரிவைச் சார்ந்த மாணவர்கள் 8,451 பேர் ஒபிசி சார்ந்த மாணவர்கள் 63,789 பேரும் தேர்வாகியுள்ளனர். அதாவது நீட் தேர்வில் மொத்தம் தேர்வானவர்களில் 11.5 சதம் பேர் மட்டுமே இட ஒதுக்கீட்டில் உள்ளவர்கள் தேர்வாகியுள்ளனர். மீதம் 88.5 சதமான பேர் பொதுப் பிரிவில் இருந்து தேர்வாகியுள்ளனர். பொதுப்பிரிவில் தேர்வானவர்களில் கனிசமான எண்ணிக்கையில் மற்ற பிரிவினரைவிட எஸ்சி பிரிவைச் சார்ந்த மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி பெற்ற மொத்த மாணவர்களில் முதல் 50 இடத்தில் தமிழகத்தைச் சேர்ந்த எந்த மாணவர்களும் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
நேஷனல் டெஸ்டிங் ஏஜென்சியால் நடத்தப்பட்ட இத்தேர்வு 11 மொழிகளில் நடைபெற்றுள்ளது. தென் இந்தியாவை பொருத்தவரை கேரளா 66.59 சதவீதமும், ஆந்திரப் பிரதேசம் 70.72 சதவீதமும், கர்நாடகா 63.72 சதவீதம் மாணவர்களும் தேர்வாகியுள்ளனர்.
இந்தியா முழுவதிலும் கல்வியில் தமிழகத்தை விட பின்தங்கிய மாநிலங்கள் நீட் தேர்வில் கூடுதல் தேர்ச்சி பெறும் போது தமிழகம் மட்டும் பின் தங்கி இருக்க காரணம் என்ன?
தமிழக கல்வி முறை காரணமா என்றால் இல்லை என்று தான் சொல்ல வேண்டும். ஏனென்றால் நீட் தேர்வுக்கு காரணமாக சொல்லப்பட்ட அனைத்து அம்சங்களும் இந்தியா முழுவதிலுமே முறையாகப் பொருந்தவில்லை வெரும் கண்கட்டி வித்தையாகதான் உள்ளது. நீட் தேர்வில் தேர்வான மாணவர்களில் கட் ஆப் மதிப்பெண் அடிப்படையில் மருத்துவத்திற்கான இடம் ஒதுக்கப்படுவதாக சொல்லப்படுகிறது. இந்தியா முழுவதும் கிட்டத்தட்ட 65 ஆயிரம் மருத்துவ இடங்கள் உள்ள நிலையில் 15 சதவீத இடங்களை மத்திய அரசும் 85 சதவீத இடங்களை மாநில அரசும் நேர்முகத் தேர்வு கலந்தாய்வு மூலம் நிரப்புகிறது. இதில் நிகர்நிலை பல்கலை கழகத்தை சார்ந்த தனியார் மருத்துவக் கல்லூரி இடங்களை தனியாரே நிரப்பிக் கொள்கிறது. அந்த வகையில் பார்த்தோமானால் கிட்டத்தட்ட 28,000 மருத்துவ இடங்களை தனியாரே கலந்தாய்வு நடத்தி தனக்கான மாணவர்களை தேர்வு செய்து கொள்கிறது.
2016 ஆம் ஆண்டு கேரள இடது ஜனநாயக முன்னணி அரசு இதற்கு எதிராக அரசே கலந்தாய்வு நடத்த முடிவெடுத்தபோது நீதிமன்றம் தலையிட்டு ”நிகர்நிலை பல்கலைக் கழகங்களை பொருத்தவரை அவர்களுக்கான மருத்துவ படிப்பு இடங்களை நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் அவர்களே நிரப்பிக் கொள்ளலாம்” எனக் கூறியது. இதன் மூலம் தனியார் முதலாளிகளின் மருத்துவக் கல்விக் கொள்ளைக்கு நீதிமன்றமே ஒப்புதல் அளித்ததாக மாறிபோனது. இன்றைக்கும் இந்தியா முழுவதும் கிட்டத்தட்ட தனியார் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் மருத்துவ கலந்தாய்வு மூலம் சேரும் மாணவர்களின் கல்விக் கட்டணம் மிகப்பெரிய அளவில் உயர்ந்துள்ளது. அரசு ஒதுக்கீட்டில் சேரும் மாணவர்களுக்கு பத்து லட்சத்திற்கு மேல் கல்விக் கட்டணம் செலவாகும் எனும்போது தனியாரை சொல்லவேண்டியதில்லை ஒவ்வொரு ஆண்டும் மருத்துவ படிப்பிற்கான கட்டணம் கடுமையாக உயர்ந்து வருகிறது. எனவே நீட் தேர்வு நடத்துவதன் மூலம் தனியார் முதலாளிகளின் கட்டணக் கொள்ளை சட்டபூர்வமாக முறைப்படி நடக்க அனுமதித்துள்ளது.
அதேபோல் சமூகநீதி கொள்கையும் நீட் தேர்வின் மூலம் தூக்கி எறியப்பட்டுள்ளது. நீட் தேர்வை பொருத்தவரை தமிழகத்தில் பயிற்சி மையங்கள் கூடுதலாகியுள்ளது. 2006 முன்பு மருத்துவ படிப்பு நுழைவுத் தேர்வுக்காக பயிற்சி கொடுப்பதாக கூறி எப்படி தனியார் முதலாளிகள் கோடிக்கணக்கில் லாபம் சம்பாதித்தார்களோ அதைப்போலவே தற்போதும் கடந்த பத்தாண்டுகளுக்கு முன்பைவிட பன்மடங்கு அதிகமாகியுள்ளது. நீட் தேர்வில் சாதித்துள்ள டெல்லி, ராஜஸ்தான், உத்தர பிரதேசம் போன்ற மாநிலங்களில் மருத்துவம் படிக்கும் மாணவர்கள் பதினொன்றாம் வகுப்பு, பனிரெண்டாம் வகுப்பு கல்வி பயில்வதை தவிர்த்து நேரடியாக நீட் பயிற்சிக்கு செல்கிறார்கள். ஓரளவு தேர்ச்சி பெறும் மதிப்பெண் மட்டும் 11, 12 வகுப்புகளில் எடுத்து விட்டு முழு கவனத்தையும் நீட் தேர்வில் செலுத்துகிறார்கள். அதற்கான தனி பள்ளிகளும் பயிற்சி மையங்களும் ஆயிரக்கணக்கில் அங்கு முன்பைவிட உருவாகியுள்ளது. எடுத்துக்காட்டாக ராஜஸ்தானில் உள்ள கோட்டா எனும் பகுதியில் இந்தியாவில் வேறெந்த பகுதியையும் விட கூடுதலான தனியார் பயிற்ச்சி நிலையங்கள் உள்ளன.
ஒரு மாணவன் எவ்வளவு செலவு செய்ய முடியுமோ அதற்கு ஏற்ப பயிற்சியைப் பெற்று நீட் தேர்வை எழுத முடியும் என்றாகியுள்ளது. பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மாணவர்களிலும் வசதியானவர்கள் மட்டுமே நீட் தேர்வை எழுத முடியும் என்றாகியுள்ளது. எனவேதான் தமிழகம் போன்ற மாநிலத்தில் 11, 12ஆம் வகுப்புகளில் கூடுதலான மதிப்பெண்கள் எடுத்தும் நீட் தேர்வை வெற்றி பெற முடியாமல் மாணவர்கள் பாதிக்கப்படுகிறார்கள்.
நீட் தேர்வு பாடதிட்டமும் டெல்லியில் உள்ள மத்திய அரசு பாடத் திட்டத்தின் அடிப்படையிலேயே கேட்கப்படுவதால் தமிழகத்தில் உள்ள மாணவர்கள் பாதிப்புக்குள்ளாகிறார்கள். தமிழகத்தில் 9 லட்சம் மாணவர்கள் சமச்சீர் கல்வியில் படித்து பனிரெண்டாம் வகுப்பு தேர்வு எழுதுகிறார்கள் என்றால், வெறும் 15 ஆயிரம் மாணவர்கள் மட்டுமே சிபிஎஸ்சியில் எழுதுகிறார்கள். சமச்சீர்க் கல்வி என்பது தமிழகத்தின் சூழலில் இருந்து உருவான பாடம் முறையாகும். ஆனால் மத்திய அரசின் பாடத்திட்டம் என்பது இந்தியா முழுமைக்குமானது அல்ல, மாறாக இந்தியாவின் மேல்தட்டு வர்க்கத்தின் தேவையிலிருந்து டெல்லியில் உருவான ஒரு தேர்வு முறையாகும். தற்போதைய புதிய கல்விக் கொள்கையும் இதை உறுதிபடுத்தி மேலும் இதை வலுப்படுதும் வகையிலேயே உள்ளது.
தமிழகத்தில் மட்டும் கிட்டதட்ட 5000 வரையுள்ள மருத்துவ இடங்களில் வெளிமாநிலத்தவர்கள் போக தமிழகத்தைச் சார்ந்த வசதி படைத்தவர்கள் மட்டுமே தேர்ச்சி பெற்று மருத்துவத்தில் சேர முடியும் என்ற நிலை உருவாகியுள்ளது.
2006ல் மருத்துவப் படிப்பிற்கான நுழைவுத் தேர்வை ரத்து செய்ததற்கு பிறகு ஏழை எளிய மாணவர்கள் குக்கிராமத்திலும், மழைப் பகுதியில் உள்ள பழங்குடியின மாணவர்கள் கூட தாங்கள் படிக்கும் பள்ளியிலேயே தான் கையில் வைத்துள்ள அரசின் பாட புத்தகத்தை படிப்பதன் மூலமே மருத்துவ படிப்பு சாத்தியமாகும் என்ற நிலை இருந்தது. ஆனால் அந்த நிலைமை தலைகீழாக மாறியுள்ளது.
நீட் தேர்வை தமிழகத்தில் ரத்து செய்ய வேண்டும் என கடந்த மூன்று ஆண்டுகளாக மிகப் பெரிய போராட்டங்கள் நடைபெற்று வந்த சூழலில் நாடாளுமன்றத் தேர்தலிலும் கூட நீட் தேர்வை தமிழகத்தில் ரத்து செய்ய அரசியல் கட்சிகள் குறிப்பாக ஆளும் அதிமுக அரசு தேர்தல் அறிக்கையிலும் கூறியது. தமிழக அரசு சட்டமன்றத்தில் ஏற்கனவே நிறைவேற்றிய 2 தீர்மானங்களையும் குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற்று அமல்படுத்தினாலே போதுமானதாக இருக்கும். மேலும் பல மாணவர்களின் உயிரை குடிக்க தயாராக இருக்கும் நீட் தேர்வை தமிழகத்தில் இருந்து விரட்ட தமிழக அரசு உருப்படியான நடவடிக்கைகளை இனிமேற்கொண்டாவது எடுக்க வேண்டும்.

க.நிருபன் சக்கரவர்த்தி
இந்திய மாணவர் சங்கம்

Friday, June 14, 2019

மொழி என்பது ‘வெறும்’ மொழியா?

நன்றி: தீக்கதிர்

மொழி என்பது ‘வெறும்’ மொழியா?

—- நிருபன் சக்கரவர்த்தி

மத்தியில் மோடி அரசு இரண்டாவது முறையாக பொறுப்பேற்ற பிறகு முதல் தாக்குதலை மாநில கல்வி உரிமையின் மீது தொடுத்துள்ளது. ஒரு சமூகத்தின் கல்வியில் ஆதிக்கம் செலுத்துவது அச்சமூகத்தின் மக்களை ஆதிக்கம் செலுத்துவதாகும். ஆளும் வர்க்கத்தின் மிக முக்கிய கருவி கல்வி. எனவேதான் புதிய அமைச்சரவை பொறுப்பேற்ற செய்தி நம்மை வந்து சேரும் முன் மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சராக பொறுப்பேற்றுள்ள ரமேஷ் போக்ரியால் கடந்த மே 31ஆம் தேதி புதிய கல்விக் கொள்கைக்கான வரைவு அறிக்கையை வெளியிட்டு வரும் ஜூன் 30க்குள் பொதுமக்களை கருத்து தெரிவிக்க கூறியுள்ளார். 484 பக்கம் கொண்ட இவ்வரைவு அறிக்கையை இஸ்ரோவின் முன்னாள் தலைவர் கஸ்தூரிரங்கன் தலைமையிலான 9 பேர் கொண்ட குழு தயாரித்துள்ளது. ஏற்கனவே கடுமையான எதிர்ப்பை சந்தித்த டி.எஸ்.ஆர்.சுப்பிரமணியம் குழுவின் அறிக்கையின் நகலாக இவ்வறிக்கை வந்துள்ளதாக கல்வியாளர்கள் தெரிவித்துள்ளனர். இவ்வறிக்கையின் அபாயத்தை பொதுமக்கள் அறிந்து விடக்கூடாது என்பதற்காகவே வரும் ஜூன் 30க்குள் அதாவது ஒரு மாதத்திற்குள் கருத்து தெரிவிக்க கூறியுள்ளது. இரண்டு வருடங்கள் தயாரித்த ஒரு வரைவு அறிக்கையைப் பற்றி ஒரு மாதத்தில் கருத்துத் தெரிவிக்க வேண்டும் எனக் கூறியிருப்பது அபத்தமான நடவடிக்கையாகும். மேலும் அந்த அறிக்கை எந்த மாநில மொழியிலும் வெளியிடப்படாமல் இந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டும் வெளியிட்டிருப்பது ஏற்புடையதல்ல.

சுற்றுலா வந்தவர்களல்ல

தமிழகத்தின் விடுதலைப் போராட்ட வரலாற்றில் மொழிக்கான போராட்டமும் இணைந்தே பயணித்துள்ளது. எனவே தான் மற்ற மாநிலத்தை விட இங்கு தமிழ் மொழியின் மீது பற்றுதியும், நம்பிக்கையும் தமிழக மக்களிடம் ஆழமாக உள்ளது. 1938 மற்றும் 1965ல் இந்தியை திணித்ததால் தமிழகத்தில் இன்று வரை காங்கிரஸ் ஆட்சிக்கு வர இயலவில்லை. மேலும் 1965 இல் நடைபெற்ற இந்தி எதிர்ப்புப் போராட்டம் திராவிட இயக்கத்தை அரியணையில் ஏற்றியது. ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை மூன்றாவது மொழியை (இந்தி) கட்டாயமாக்க தேசிய அளவிலான வேலைவாய்ப்பு, கல்வி, அலுவல் மற்றும் அரசியல் சார்ந்து பிறகாரணங்கள் கூறப்படுகின்றன. ஆனால் எதார்த்த நிலைவேறாக உள்ளது. இந்தி தெரிந்தால் வேலைவாய்ப்பு என்றிருந்தால் தமிழகம் முழுவதும் கிட்டத்தட்ட ஒரு கோடி வடமாநிலத்தவர்கள் வந்து குவிந்திருக்கமாட்டார்கள். பேருந்து, ரயில் நிலையங்கள் என பல இடங்களில் சாலைகளின் ஓரங்களில் இந்தி தெரிந்த வடமாநிலத்தவர்களை கும்பல் கும்பலாக பார்க்க முடியும். ஏன் அவர்கள் இங்கு கிழிந்ததுணியுடன், அழுக்குப் பிடித்த தேகத்துடன் காணப்படுகிறார்கள். அவர்கள் சுற்றுலாவிற்காக வந்தவர்கள் இல்லை;இங்கு கிடைக்கும் வேலையில் ஏதேனும் ஒரு வேலையை அடிமாட்டு ஊதியத்திற்கு பார்க்க வந்தவர்கள் தான்.

கடந்த ஏப்ரல் மாதத்தில் இந்திய பொருளாதாரத்தினை கண்காணிக்கும் அமைப்பு சி.எம்.ஐ.இ இந்தியாவில் வேலையின்மை 6.1 சதவீதத்தில் இருந்து 7.1 சதவீதமாக வரலாறு காணாத அளவில் உயர்ந்துள்ளது என கூறியுள்ளது. மத்திய புள்ளியியல் அமைச்சகமும் நகர்ப்புறங்களில் 7.8 சதவீதமும், கிராமப்புறத்தில் 5.3 சதவீதமும் வேலையின்மை அதிகரித்துள்ளதாக கூறியுள்ளது. இந்திய தொழில் உற்பத்தி 2017-18ல் 4.4 சதவீதமாக இருந்தது 2018-19ல் 3.6 சதவீதமாக கிட்டத்தட்ட 0.8 சதவீதம் குறைந்துள்ளது. இதனால் மக்களிடம் வேலைவாய்ப்பு குறைந்து வாங்கும்சக்தி மிகப் பெரும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது. எனவே தான்வேலைதேடி அலைவோர் எண்ணிக்கை அதிகமாகி வடமாநிலத்தவர்கள் பெரும்பாலும் தங்கள் இருப்பிடங்களைவிட்டு தமிழகம் போன்ற பகுதிக்கு வருகிறார்கள்.

தற்செயல் நிகழ்வல்ல

கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக அஞ்சல்துறை, வங்கி, ரயில்வே, மின்சாரம் போன்ற தமிழகத்தின்கேந்திரமான அரசு நிறுவனத்தில் பிற மாநிலத்தவர்கள் குறிப்பாக இந்தி பேசும் மாநிலங்களிலிருந்து வேலையில் சேருவோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.இது தற்செயலான நிகழ்வு என நாம் கடந்து செல்ல இயலாது. தமிழகத்தின் வேலைவாய்ப்பில் உடலுழைப்பு சார்ந்ததுறையில் பெரும்பாலும் வந்து குவிந்துள்ள இந்தி பேசும்வடமாநிலத்தவர்களுக்கு சரி நிகராக சேவைத்துறை சார்ந்தவேலைகளிலும், சிறு உற்பத்தி, விற்பனையகம் போன்றவற்றிலும் இந்தி பேசும் வட மாநிலத்தவர்கள் அதிகரித்துள்ளனர். அரசுத் துறையிலும் இந்தி பேசும் வட மாநிலத்தவரை அனுமதிப்பதற்கான வேலை ஏற்கனவே துவங்கிவிட்டது. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி). 2016 விதியின்படி வெளி மாநிலத்தவரை வேலையில் அமர்த்தலாம் என கூறியுள்ளது. இதன்படி வெளிமாநிலத்தவர்களும் தமிழக வேலைவாய்ப்பு போட்டித் தேர்வில் பங்கேற்கலாம் என்றாகியுள்ளது. இந்தி மொழியில் 8ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் ஒருவரால் போட்டித் தேர்வும்இந்தியில் எழுதலாம் என்றாகி தமிழ் பயனற்றதாக ஆக்கப்படும். இதன் மூலம் தமிழகத்தின் வேலைகளில் இந்தி பேசும் நபர்கள் நிறைக்கப்படும் அபாயம் உள்ளது.

குறைந்தபட்சம் 12 ஆயிரம் இந்தி ஆசிரியர்கள்

தமிழகத்தில் உள்ள 6, 7, 8 ஆம் வகுப்புக்கு மூன்றாம்மொழியாக இந்தியை அனுமதித்தால் பள்ளிக்கு ஒருவர்என்றாலும் குறைந்தபட்சம் 12 ஆயிரம் இந்தி ஆசிரியர்களை பணியமர்த்த வேண்டியிருக்கும். அப்படியானால் இந்தகாலிப்பணியிடங்களில் இந்தி பேசும் வட மாநிலத்தவர்கள் தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் ஆசிரியராக நியமிக்கப்படும் வாய்ப்பு உள்ளது. ஒரு மொழியை கற்பது என்பது மொழிசார்ந்த தொழில், உற்பத்தி, வேலைவாய்ப்பு போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டதாக இருக்கும். ஆனால் இந்தி மொழி கற்பதன் மூலம் நாம் எந்த மாதிரியான தொழில், உற்பத்தி, வேலைவாய்ப்பில் தற்போது இருப்பதை விட கூடுதலாக பெறப் போகிறோம்? தாய்மொழியை முழுமையாகக் கற்ற ஒருவரால்எந்த ஒரு மொழியையும் எளிதாக கற்றுக்கொள்ளஇயலும். ஆனால் தமிழகத்தில் தாய் மொழியாக உள்ள தமிழ்எவ்வாறு கற்று கொடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ளஆசிரியர் காலிப் பணியிடங்களில் தமிழ் ஆசிரியர் காலிப்பணியிடம் பெரும்பாலும் நிரப்பப்படாமலேயே உள்ளது.பள்ளிகளில் தமிழ் பாடம் எந்த அளவுக்கு கற்றுக் கொடுக்கப்படுகிறது என பார்த்தால் பெரும்பாலும் மற்றபாடத்திற்குகொடுக்கும் முக்கியத்துவத்தை விட குறைவாகவே உள்ளது.சில நேரங்களில் தமிழ் பாட வேளைகளை பிற பாடங்களுக்கான ஆசிரியர்கள் எடுத்துக்கொள்வது இயல்பாக உள்ளது.தாய் மொழியை முழுமையாகக் கற்றுத் தராத ஒரு கல்வி முறையில் மற்றொரு மொழியை அதாவது மூன்றாவது மொழி திணிப்பது நிச்சயமாக மாணவர்களை மிகப் பெரும் குழப்பத்தில் ஆழ்த்தும்.

ஆங்கிலம் இன்று இந்தியாவில் கோலோச்ச பொருளியல் சார்ந்த சர்வதேச தொடர்பு முக்கிய காரணமாக உள்ளது. பொருளாதார வாழ்வியல் காரணங்களின் அடிப்படையிலேயே ஒரு மொழி ஜீவித்திருப்பது அவசியமாகிறது. நம்தமிழகத்தில் கூட பொருளியல் சார்ந்து வாழ்வியலில் தமிழ்வலுவாக உள்ளது. தொழிற்சாலையில் தொழிலாளர்களுக்கிடையிலான மொழி, சிறுதொழில், சில்லரை வர்த்தகம்,முதலாளி - தொழிலாளர்களுக்கு இடையிலான பேச்சுவார்த்தை மற்றும் அரசியல் சார்ந்த நடவடிக்கை, இன்னும் சேவைத் துறை என கிட்டத்தட்ட எட்டு கோடி மக்களும் தமிழ் மொழி சார்ந்து வாழும் பொழுது மூன்றாவதாக ஒரு மொழியை திணிப்பது எந்த வகையிலும் பயனளிக்காது. தேவையிருந்தால் மாணவர்கள் கற்றுக்கொள்வார்கள். அத்துடன் மும்மொழிக் கொள்கையில் இந்தி பேசா மாநிலம்இந்தியாவின் ஏதேனும் ஒரு நவீன மொழியை தேர்ந்தெடுத்தால் போதும் என மத்திய அரசு கூறியுள்ளது. நவீன மொழிஎன்றால் எது? 22 தேசிய மொழிகளில் எதை வேண்டுமானாலும் தேர்ந்தெடுக்க வாய்ப்பளிக்குமா என்பது கேள்விக்குறியே. எனவே இந்தியை, சமஸ்கிருதத்தை தமிழகத்தில் வலுவாக திணிப்பதற்கான ஏற்பாட்டை இந்த அறிவிப்பு வருவதற்கு முன்பே மத்திய அரசு தொடங்கியுள்ளது என்பதைநாம் புரிந்து கொள்ளவேண்டும்.

கட்டுரையாளர்: மாநில துணைத்தலைவர்,
இந்திய மாணவர் சங்கம்.

அரசுப் பள்ளி காக்க 1500கி.மீ. சைக்கிள் பயணம்

மே 25, 2019


தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு வெளிவந்த 10 ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவில் 1687 அரசுப் பள்ளிகளும், இந்தாண்டு 11 ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவில் 2634 அரசுப் பள்ளிகளும், 12 ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவில் 1281 அரசுப் பள்ளிகளும் 100 சதம் தேர்ச்சி பெற்றுள்ளன. மேலும் தமிழகத்தில் 10, 11, 12ம் வகுப்பு தேர்வுகளில் திருப்பூர், ஈரோடு, பெரம்பலூர், நாமக்கல், இராமநாதபுரம், கோயம்புத்தூர் ஆகிய மாவட்டங்கள் சாதனை பெற அரசுப் பள்ளிகளின் மிகச்சிறந்த பங்களிப்பு முக்கிய காரணமாக இருந்துள்ளது.ஒன்பது ஆண்டுகள் தங்கள் பள்ளியில் படித்த மாணவர்களை வெளியேற்றிவிட்டு, தேர்ச்சியடையும் மாணவர்களை மட்டுமே தேர்வுக்கு அனுமதித்து 100 சதம் தேர்ச்சியை பெற்றதாக விளம்பரப்படுத்தும் தனியார் பள்ளிகளுக்கு மத்தியில், அரசு பள்ளிகள் தங்கள் பள்ளியில் படிக்கும் எந்தவொரு மாணவரையும் வெளியேற்றாமல் அனைத்து மாணவர்களையும் பொதுத்தேர்வை எழுத அனுமதிக்கக்கிறது. மேலும் கற்றல் திறன் குறைவான மாணவர்களுக்கு தனி கவனிப்பு, கூடுதல் சிறப்பு வகுப்புகள் மூலம் அவர்களைதேர்ச்சி பெறச் செய்கிறது. தன்னம்பிக்கை, வாழ்க்கையின் மீதான நம்பிக்கை, சகமனிதனை நேசிப்பது, பிரச்சனைகளை எதிர் கொள்ளும் திறன் போன்ற அம்சங்கள் அரசுப் பள்ளி மாணவர்களிடம் கூடுதலாக உள்ளது.தனியார் பள்ளியில் (தொழிற்சாலைகளில்) செய்யப்படும் ஆட்குறைப்பு நடவடிக்கை போல் அரசுப் பள்ளிகளில் கிடையாது. ஆசிரியர் பணியிடங்கள் உறுதிசெய்யப்படும், ஊதியம் தீர்மானிக்கப்படும்.


ஆசிரியர் கற்றல் கற்பித்தலில் கூடுதல் கவனம் செலுத்த முடியும். ஆனால் தனியார் பள்ளிகளின் ஆசிரியர்கள் நிலை உத்தரவாதமற்றது. உற்பத்தியைப் பெருக்குவது போல் பாடங்களை கடுமையாக மாணவர்களிடம் திணிப்பதற்கு ஏற்ப ஊதியம் வழங்கப்படும். நிச்சயமற்ற வேலையும்,நிலையற்ற ஊதியமும் இயல்பாகவே தனியார் பள்ளிகளின் கற்றல், கற்பித்தல் திறனை பின்தங்கியே இருக்கச் செய்யும் முக்கிய காரணியாகும்.அரசு பள்ளிகளிலுள்ள அனைத்து மாணவர்களுக்கும் தலா 4 சீருடைகள், பஸ்பாஸ், சத்துணவு, மிதிவண்டி, கல்வி உதவிதொகைகள், மடிக்கணினி மற்றும் 16 வகையான கல்வி உபகரணங்கள் உள்ளிட்டு மாணவர்களுக்கான பல்வேறு நலத்திட்டங்கள் அரசினால் மக்களின் வரிப்பணத்திலிருந்து வழங்கப்பட்டு வருகிறது. கடந்த சில ஆண்டுகளாக கல்வித் திட்டத்திலும் பல மாற்றங்கள் அரசுப் பள்ளிகளில் நடந்துள்ளது. பாடநூல்கள்மாற்றப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. ஆங்கிலவழிக்கல்வி, ஆசிரியர் தேர்வு முறை, பயிற்சி என பல வகைகளில் அரசு பள்ளிகள் தனியார் பள்ளிகளைவிட சிறந்து விளங்கும் வாய்ப்பை பெற்றுள்ளது.என்.ஐ.டி., ஐ.ஐ.எம்., ஐ.ஐ.டி போன்ற இந்தியாவின் தலைசிறந்த கல்வி நிறுவனங்களிலும் ஜே.என்.யு போன்ற பல்கலைக்கழகங்களிலும் அரசு பள்ளிகளில் படித்த மாணவர்கள் இன்றும் கூடுதல் எண்ணிக்கையில் படித்து வருகிறார்கள். பெண்கள், தலித், சிறுபான்மை மாணவர்கள், முதல் தலைமுறை மாணவர்கள் என பல மாணவர்களின் கல்வியை இன்றும் அரசு பள்ளிகளே உறுதி செய்து வருகிறது. மத்திய - மாநில அரசுகள் அரசு பள்ளிகளை பொதுக்கல்வியை பாதுகாக்க மேம்படுத்த சில நடவடிக்கைகளை எடுத்தாக வேண்டும். கோத்தாரி கல்விக்குழு, இராமமூர்த்தி கல்விக்குழு, யஷ்பால் கல்விக்குழு என எத்தனையோ பரிந்துரைகள்; கல்வியாளர்கள், சமூக சிந்தனையாளர்கள், மாணவர், ஆசிரியர் அமைப்புகளின் நியாயமானகோரிக்கைகள்; கல்வியுரிமை சட்டம், சமச்சீர்கல்வி, நீதிமன்ற தீர்ப்புகளின் வழிகாட்டுதல்களில் சொல்லபட்ட அம்சங்கள் என அனைத்தையும் பரிசீலித்து அமல்படுத்த முன் வரவேண்டும்.

கல்வியை பொதுப்பட்டியலில் இருந்து மாநிலப் பட்டியலுக்கு கொண்டுவர வேண்டும். மாநில உரிமையைப் பறிக்கும் நீட் தேர்வை தமிழகத்தில் ரத்து செய்யவேண்டும். இடைநிற்றல் பிரச்சனைகள் போன்ற பல இன்னலை ஏற்படுத்தும் 5, 8 ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்தும் மத்திய அரசின் மதியற்ற முடிவை கைவிட வேண்டும். அந்தந்த மாநிலத்தில் படித்த மாணவர்களுக்கும், தாய்மொழியில் பயின்ற மாணவர்களுக்கும் வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்க வேண்டும். பாடத்திட்டதில் இந்துத்துவா கருத்தை புகுத்துவது, ஒற்றை கலாச்சாரம், இந்தி திணிப்பு, சமஸ்கிருத திணிப்பு, குலக்கல்வி, காவி-கார்பரேட் திட்டங்களை கொண்ட புதிய கல்விக் கொள்கையை திரும்பப் பெற வேண்டும். ஆசிரியர், மாணவர், கல்வியாளர்கள், சமூகஆர்வலர்களைக் கொண்டு கால சூழல் மாற்றத்திற்கேற்ப நவீன முற்போக்கான கல்விக் கொள்கையை கொண்டு வரவேண்டும். பாலியல் சார்ந்த கல்விகள், விளையாட்டு, கலை-பண்பாடு, தனித்திறன், நவீன தொழிற்நுட்பம் என அனைத்து வகையான கல்வியையும் மாணவர்களுக்குக் கற்றுத்தர வேண்டும். மாணவர்களையும், பொதுமக்களையும் ஈர்க்கும் வண்ணம் நவீன வசதியுடன் கூடிய  வகுப்பறைகள் கட்டமைக்கப்பட வேண்டும். இலவச கட்டாய கல்வி உரிமை சட்டத்தில் கூறியுள்ளபடி ஆசிரியர் மாணவர் விகிதம் பின்பற்ற வேண்டும். மாணவர், பொதுமக்கள், சமூக ஆர்வலர் பங்களிப்போடு பள்ளி மேலாண்மைக் குழுக்களை அமைக்க வேண்டும். தாய்மொழி வழிக் கல்வி, அருகாமைப் பள்ளிகள், பொதுப் பள்ளிகளை உறுதி செய்ய வேண்டும்.

தமிழக அரசு ஏற்கனவே மூடப்போவதாக சொன்ன 3000 பள்ளிகள் மீது கைவைக்கக்கூடாது; தற்போது 890 அரசு பள்ளிகளை மூட உத்தேசித்துள்ளதையும் கைவிட வேண்டும். மாணவர்களுக்கு வழங்கப்படாமல் உள்ள ரூ.14 ஆயிரம் கோடி கல்வி உதவித்தொகையை உடனே வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்திலுள்ள பள்ளிகளை இணைக்கும் நடவடிக்கைக்கு பதிலாக இருக்கும் பள்ளிகளை மேம்படுத்த வேண்டும். துவக்கப்பள்ளியை நடுநிலைப்பள்ளியாகவோ, உயர் நிலை, மேல்நிலை பள்ளியாகவோ தரம் உயர்த்த வேண்டும். இரண்டு பள்ளிகளை ஒருங்கிணைத்து ஒரு பள்ளியாக மாற்றுவதை கைவிட வேண்டும். கேரளாவில் தற்போது இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள், தனியார் பள்ளிகளைவிட்டு அரசுப் பள்ளிகளை நோக்கி வந்துள்ளார்கள். காரணம் அங்குள்ள அரசாங்கம் பொதுமக்களோடு இணைந்து பல கல்வி திட்டத்தில் மாற்றம் கொண்டுவந்தது மட்டுமல்லாமல் தெருத்தெருவாக இறங்கி வீடுவீடாக பிரச்சாரம் செய்ததே காரணம். அதை ஏன் தமிழக அரசு செய்ய கூடாது? இந்தாண்டு கல்விக்காக கிட்டத்தட்ட ரூ.28 ஆயிரம் கோடி செலவு செய்ததாக சொல்லும் தமிழக அரசு, செலவுக் கணக்குகள் குறித்து முறையான புள்ளி விவரத்தைவெளியிட வேண்டும். அரசு பள்ளிகளை தனியாருக்கு தத்துக்கொடுக்க அனுமதிக்கும் மிக மோசமான முடிவைதிரும்பப் பெற வேண்டும். நிரப்பப்படாமல் உள்ள ஐம்பதாயிரத்திற்க்கும் மேற்பட்ட ஆசிரியர், ஆசிரியரல்லா, அலுவலகஊழியர்கள், துப்புரவாளர், காவலாளி மற்றும் அரசுபள்ளி விடுதி காப்பாளர் என அனைத்து பணியிடங்களையும் நிரப்ப வேண்டும். விடுதிகளை மேம்படுத்த வேண்டும். சிறப்பு பள்ளிகளுக்கு கூடுதல் கவனம் செலுத்தவேண்டும்.

சென்னையில் உள்ள அரசு பள்ளிகளிலேயே 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் 100 சதம் தேர்ச்சி பெற்ற ஒரே பள்ளி எழும்பூர் டாக்டர் அம்பேத்கர் அரசு மேல்நிலைப் பள்ளி. அப்பள்ளியை போல் எத்தனையோ பள்ளிகள் ஆசிரியர்களாலும் பொதுமக்களின் பங்களிப்பாலும் சாதனை படைத்து வருகிறது. அரசும், பொதுமக்களும், பெற்றோர்களும், மாணவர்களும் இணைந்தால் அனைத்து அரசு பள்ளியும் சாதனைப் பள்ளிகளாக மாற்ற முடியும். எனவே அரசு பள்ளியின் தேவையை முன்வைத்து (இன்று) மே25 முதல் மே 31 வரை அரசுப் பள்ளிகளை பாதுகாத்து பலப்படுத்திடக் கோரி தமிழகம் முழுவதும் சென்னை, கோயம்புத்தூர், கடலூர், கன்னியாகுமரியிலிருந்து திருச்சி நோக்கி இந்திய மாணவர் சங்கம் தலைமையில் 1500கி.மீ சைக்கிள் பிரச்சாரம் நடைபெறுகிறது. இந்நிகழ்வுகளை இஸ்ரோவின் முன்னாள் இயக்குநரும் சந்திரயான் விண்வெளித் திட்ட இயக்குனருமான விஞ்ஞானி மயில்சாமி அண்ணதுரை, சிபிஎம் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் எம்.ஏ.பேபி, கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன், இந்திய மாணவர் சங்கத்தின் அகில இந்திய தலைவர் வி.பி.ஷானு, பாலபிரஜாபதி அடிகளார், கல்வியாளர் வே.வசந்தி தேவி, இயக்குநர் பா.இரஞ்சித், வாலிபர் சங்க மாநிலச் செயலாளர் எஸ்.பாலா, விவசாயத் தொழிலாளர் சங்கமாநிலப் பொதுச் செயலாளர் வீ.அமிர்தலிஙகம், எழுத்தாளர் இமையம் உள்ளிட்டோர் இப்பிரச்சார பயணத்தை துவக்கி வைக்கிறார்கள்.

கட்டுரையாளர்:
க.நிருபன் சக்கரவர்த்தி
மாநிலத் துணைத் தலைவர், இந்திய மாணவர் சங்கம்

உலகை அதிரவைத்த மக்கள் சீனத்தின்செயற்கை நுண்ணறிவு டீப் சீக் (Deep seek)

உலகை அதிரவைத்த மக்கள் சீனத்தின்  செயற்கை நுண்ணறிவு டீப் சீக் (Deep seek) செயற்கை நுண்ணறிவு (artificial intelligence) துறையில் பேராதிக்கம் செ...