இது துவக்கம் தான்... கண்ணீரை துடைத்துவிட்டு உலக பெரும் முதலாளிகளின் இலாபவெறியை தகர்க்க வாருங்கள்.
அமேசான் காடுகளை தொடர்ந்து ஆஸ்திரேலிய காடுகளும் பற்றி எரிகிறது. உலக பெரும் முதலாளிகளின் இலாபவெறிக்கு முன் இந்த நெருப்பு ஒன்றும் பெரிதல்ல என்று நாம் சொல்லும் போது வழக்கம்போல் நம்மை திட்டி தள்ளுவார்கள். ஆமாம் நானும் எனது பங்குக்கு சொல்லிவிடுகிறேன் "உலகின் பெருமோசமான சுற்று சூழல் காலநிலை மாற்றதால் தற்போது ஆஸ்திரேலியாவின் காடுகள் பற்றியெரிகிறது" இப்படிதான் நாம் பேசவேண்டும் என உலக கார்பரேட் ஊடகங்கள் நினைக்கிறது. உண்மையில் தற்போது பாதிக்கப்பட்ட மக்களுக்கு, பல்வேறு காட்டுவாழ் உயிரினங்களுக்கு உலக மக்களின் உதவி கரம் தேவைப்படுகிறது. பல தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், செஞ்சிலுவை சங்கம் மற்றும் ஆஸ்திரேலிய அரசே கூட நேரடியாக இணையதளங்களில் பல்வேறு ஆதரவை நாடி வருகிறது. உலகின் பல்வேறு மக்களும் தொடர்ந்து பங்களிப்பு செலுத்தி வருவது உலக மக்களின் மகோன்னதமான உணர்வை புரிந்து கொள்ள முடிகிறது. இந்த உணர்வு மேலும் வலுபெற வேண்டும் என்பதே அனைவருடைய மனநிலையாக இருக்க முடியும்.
நாம் இங்கு கேக்க விரும்புவது ஏன் (?) கடந்த இரண்டு மில்லினியம் ஆண்டுகளை விட கடந்த பத்தாண்டுகளில் இந்த காலநிலை மாற்றம் மிக தீவிரம் அடைந்து வருகிறது. ஆஸ்திரேலியாவின் வரலாற்றில் இல்லாதளவில் 48° டிகிரிக்குமேல் வெப்பமும் அனல் காற்றும் ஏன் (?) அதிகரித்துள்ளது.
கடந்த ஆண்டின் மிகப்பெரிய பேரழிவாக இருந்த உலகின் நுரையீரல் அமேசான் பற்றியெரிந்த போதும், அதற்குமுன் கலிபோர்னியாவின் காடுகள் எரிந்த போது நாம் கேட்ட அதே கேள்விதான் காலமும் சூழலும் தீவிரமடைந்துள்ளதே தவிர வேறெந்தவொரு மாற்றமில்லை. உலகின் இயற்கையை அழித்து மண் வளங்களை, கனிம வளங்களை, காட்டு வளங்களை கொள்ளையடிக்கு மாபியா கும்பல்கள் உலகின் மிகப்பெரும் நாடுகளின் அரசியல் சக்திகளின் ஆதரவோடு அமேசானை பற்ற வைத்தது. இது நேரம், தேதி, இடம் உள்ளிட்டு மிகச்சரியாக திட்டமிடப்பட்ட கூட்டு சதி. உலக மக்களுக்கு ஏன் அனைத்து வகையான உயிரினங்கள் மற்றும் இந்த பூமிபந்திற்கே எதிராக தீட்டபட்ட ஒரு கூட்டுசதி. இது உலகறிந்த உண்மை ஆனால் இதுவரை எந்த குற்றவாளியும் தண்டிக்கபடவில்லை, விசாரிக்கப்படவில்லை, அனைத்து நீதிபரிபாலனமும் கண்களை இறுகமூடிக் கொண்டது.
தற்போது ஆஸ்திரேலியாவின் பெரும் நெருப்பும் திடீரென பற்றவில்லை இது கடந்த செப்டம்பர் மாதம் முதலே எரிந்து கொண்டுதான் இருந்தது. திசம்பரில் ஏற்படும் வழக்கமான சுழல் காற்று சீதோசண நிலைமாற்றம் இந்த பெரும் காட்டுதீயை மேலும் தீவிரப்படுத்திவிட்டது. இதுவரை 1 கோடியே 235 ஏக்கர் காடுகள் எரிந்துவிட்டது. தற்போது வரை 23 பேர் இறந்துவிட்டனர். 50 கோடிக்கும் மேற்பட்ட பாலூட்டிகள், பறவைகள், ஊர்வனவைகள் இறந்து போயின. இதில் பூச்சிகள், தாவரங்கள் இன்னும் பிற காட்டு நுண்ணுயிரிகள் கணக்கிலடங்கா எண்ணிகையில் பொசுங்கி போனது. ஆஸ்திரேலியாவின் அடையாளமான கங்காருவும், ஆஸ்திரேலிய கோலார் கரடியும் தங்கள் வாழ்விடங்களை இழந்து வெளியேறி வருகிறது. இதில் ஆஸ்திரேலிய கோலார் கரடிகள் மெதுவாக நகரும் உயிரினம் என்பதால் மூன்றில் ஒரு பங்கு கிட்டதட்ட 8000 கோலாக்கள் நெருப்பில் எரிந்து இறந்து போனது. மேலும் கண்டத்தின் ஒட்டுமொத்த ஊட்டசத்து சுழற்சியும், மகரந்த சுழற்சியும் மிகப்பெரிய அழிவை சந்தித்துள்ளது. இதை மீண்டும் இயற்கை தானாக உருவாக்கி கொள்ள பல்லாண்டுகளுக்கு மேல் ஆகும். ஆஸ்திரேலிய வானம் மஞ்சல் நிறத்தில் நெருப்பை பிரதிபலிக்கிறது. சாம்பல் புகை சுவாச நாசியை பாதித்து சுவாசக்கோளாறு, தலைவலி, தோலெரிச்சலை ஏற்படுத்தி வருகிறது.
மோடி ஆட்சிக்கு வந்ததும் முதன் முதலில் தனது விசுவாசத்தை நிரூபிக்க, அதானியின் நிறுவனத்திற்காக அரசுமுறை பயணமாக ஆஸ்திரேலியாவுக்கு பயணப்பட்டு நிலக்கரி சுரங்கங்களை வாங்கி கொடுத்து தனது விசுவாச வாலை ஆட்டினார். இன்று ஆஸ்திரேலியாவில் ஆட்சியில் இருக்கும் கன்சர்வேடிவ் (பழமைவாதி) பிரதமர் ஸ்காட் மோரிசனிடம் ஆஸ்திரேலிய மக்கள் கடந்த மாதம் தொடர் போராட்டத்தின் மூலம் ஒரு கோரிக்கையை முன் வைத்தனர். அது "தற்போது மிகவும் இலாபகரமாக செயல்பட்டு வரும் நிலக்கரி சுரங்கங்களை மூடுங்கள் அல்லது உற்பத்தியையாவது குறையுங்கள்" என்பது தான். என்ன செய்ய உலகமுழுவதும் கார்பரேட்களின் விசுவாசிகள், அடிமைகள், பழமைவாதிகள், பிற்போக்காளர்கள், டிரம்ப், போரிஸ் ஜான்சன், மோடி, அமித்சா இவர்களை போன்றே ஆஸ்திரேலிய பிரதமரும் "முடியாது" என தடித்த குரலில் பதிலுரைத்தார் இன தூய்மை பேசி திசைதிருப்பினார்.
ஆஸ்திரேலிய பெரும் நெருப்பின் கடுமையான அனல் குளிர்காலத்தை தாண்டி உலக முழுவதும் வெப்பத்தை உயர்த்தியுள்ளது. இந்நிலையில் சிட்னியின் பெண் மேயர் கிளவர் மூரே அவர்கள் "உலக வெப்பமயமாதலை புரிந்து கொண்டு எங்கள் அரசு தேசத்தை காக்க தவறிவிட்டது. அதனால் தற்போது ஆயிரக்கணக்கான மக்கள் வீடுகளை இழந்து வீதியில் நிற்கிறார்கள். குடும்பத்தைவிட்டு நாட்கணக்காக எங்கள் வீரர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மக்களோடு சில வீரர்களும் இறந்து போனார்கள். காடுகள், காட்டு உயிரிகள், தேசிய பூங்காக்கள் என அனைத்தையும் இழந்துவிட்டோம். இதை முன்பே அறிந்து எங்கள் அரசு காப்பாற்ற தவறிவிட்டது'' எனக் கூறியுள்ளார்.
அரசும், அரசியல்வாதிகளும் எத்தனை தன்னிலை விளக்கம் கொடுத்தாலும், தற்போதைய முதலாளித்துவ அரசுகளின் தோழ்வியை புரிந்து கொண்டு, மக்களின் கோரிக்கையை ஏற்று செயல்படும் மக்களுக்கான அரசு உருவாகாமல், உலக பெரும்முதலாளிகளின் இலாபவெறியை தடுத்து நறுத்தாமல் மாற்றம் ஏற்பட போவதில்லை. நம் உயிரும் உலக கார்பரேட் ஏற்படுத்தும் பேரழிவிலிருந்து பாதுகாக்கபட போவதுமில்லை.
உலக மக்களே போதும் கண்ணீரை துடைத்துவிட்டு உலக பெரும் முதலாளிகளின் இலாபவெறியை தகர்க்க வாருங்கள்.
-க.நிருபன் சக்கரவர்த்தி
#australiafires #firefighters #australia #people #SocialismistheFuture