Showing posts with label YOUTH. Show all posts
Showing posts with label YOUTH. Show all posts

Wednesday, February 16, 2022

கல்வி பறிக்கும் மோடி அரசு; மாணவர் சமூகம் பதிலடி தரும்!

கல்வி பறிக்கும் மோடி அரசு; 
மாணவர் சமூகம் பதிலடி தரும்! 

- க.நிருபன் சக்கரவர்த்தி
நமது நிருபர் 
பிப்ரவரி 16, 2022.

ஒன்றிய அரசின் காவி கார்ப்பரேட் கொள்கை இந்திய கல்வியில் மிகப்பெரிய அசமத்து வத்தை ஏற்படுத்தியுள்ளது. தேசியக் கல்வி கொள்கை, நீட் போன்ற மாணவர் விரோத நட வடிக்கைகளால் ஏழை எளிய கிராமப்புற மாணவர்கள் கல்வியிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். பாஜக அரசு பொறுப்பேற்ற ஏழாண்டுகளில் கல்வியில் மிகப் பெரிய ஏற்றத்தாழ்வு அதிகரித்துள்ளது.
பெண் குழந்தைகளின்  கல்விக்கு எதிராக...

தற்போதைய ஒன்றிய பட்ஜெட் அறிவிப்பில் கூட மேல்நிலை பள்ளி மாணவிகளுக்கான தேசிய கல்வி உதவி தொகையை (NSIGSE) நிறுத்தியுள்ளது. அதன் 80% விழுக்காட்டு நிதியை “பேட்டி பச்சாவ், பேட்டி பதாவ்” எனும்‘பெண் குழந்தைகளை பாதுகாப்போம், பெண் குழந்தைகளை படிக்க வைப்போம்’ என்ற மோடி யின் விளம்பரத் திட்டத்திற்கு திருப்பியுள்ளது. 2015ல் துவங்கப்பட்ட இந்த திட்டத்தால் என்ன பயன் என்று இன்று வரை மோடி பதில் அளிக்கவில்லை.  மேலும் எம்.பில் (ஆய்வியல் நிறைஞர்) எனும் ஓராண்டு படிப்பு பல மாணவிகள் மற்றும் கிராமப்புற ஏழை மாணவர்களுக்கு பேருதவியாக இருந்தது. குடும்ப சூழல், பொருளாதார காரணங்களால் மூன்று முதல் ஐந்தாண்டுகளுக்கு மேல் படித்து முனைவர் பட்டம் பெற இயலாத பல மாணவர்களுக்கு எம்.பில்  சிறந்த படிப்பாக இருந்தது. தேசியக் கல்வி கொள்கை இப்படிப்பினை தேவையற்றது என நீக்கியுள்ளது. பட்டப்படிப்பை நான்காண்டாக மாற்றுவது, மூன்றாம் வகுப்பு முதல் பொதுதேர்வுகள் எனப் பல வடிகட்டும் முறைகளைக் கடைபிடிக்க உள்ளது. மேலும் பட்ஜெட்டில் கல்விக்கான ஒதுக்கீடு 3% விழுக்காடுக்கு மேல் உயர்த்துவோம் என்ற ஒன்றிய அரசின் அறிவிப்பு கடந்த ஏழு ஆண்டுகளாக வெற்று அறிவிப்பாக மட்டுமே உள்ளது. மாறாக கல்விக்கான நிதி ஒதுக்கீட்டை தொடர்ந்து குறைத்து வருகிறது. 

பட்டியலின மாணவர் எண்ணிக்கை குறைந்தது

கடந்த பிப்ரவரி இரண்டாம் தேதி மாநிலங்களவை உறுப்பினரும், இந்திய மாணவர் சங்கத்தின் முன்னாள் தலைவருமான முனைவர் வி.சிவதாசன் அவர்கள் சில புள்ளிவிவரங்களை முன்வைத்து ஒன்றிய அரசின் கல்வி விரோத நடவடிக்கைகள் பற்றி கேள்வி  எழுப்பினார். அதில் குறிப்பாக 2016-17 ஆம் ஆண்டு களில் தேசிய அளவில் முனைவர் பட்டத்திற்கான கல்வி உதவி தொகை பெற்றுவந்த பட்டியல் சமூக மாணவர்கள் எண்ணிக்கை 9,503 ஆக இருந்தது; 2020-21ல் 3,986 ஆக குறைந்துள்ளது. கிட்டத்தட்ட 58% விழுக்காடு மாணவர்கள் எண்ணிக்கையை குறைத் துள்ளது. முனைவர் பட்டத்திற்கு பிறகு படிக்கும் ‘போஸ்ட் டாக்டொரல்’ (முது முனைவர்) படிப்புக்கான உதவித்தொகை பெறுவோரில் பட்டியல் சமூகம் மற்றும் பழங்குடி மாணவர் எண்ணிக்கை 2016-17 ஆம் ஆண்டில் 554 பேராக இருந்தது; 2020-21ல் 332 ஆக குறைந்துள்ளது. இதில் மாணவிகள் எண்ணிக்கையும் 2016-17ல் 642 என்ற எண்ணிக்கையிலிருந்து 2020-21ல் 434 ஆக குறைந்துள்ளது. அடிப்படை அறிவிய லுக்கான ஆய்வு மாணவர்களின் எண்ணிக்கையும் 83% விழுக்காடு குறைந்துள்ளது.  மாணவர்கள் எண்ணிக்கை குறையக் காரணம்... மாணவர்கள் படிக்க வரவில்லை என்பதல்ல;  உதவி பெறுவோர் எண்ணிக்கையை ஒன்றிய அரசு திட்ட மிட்டு குறைத்துள்ளது என்பதே நிதர்சனமான உண்மை. 

கல்விக்காக அரசு செலவழிப்பது தேவையற்றது; அனைத்து கல்வி சார்ந்த நடவடிக்கைகளையும் தனியார் முதலாளிகள் தான் தீர்மானிக்க வேண்டும் என்பதே தேசிய கல்விக் கொள்கையின் சாராம்சம். இத்தகைய கருத்தை 1998 லேயே பிர்லா-அம்பானி கல்வி கொள்கை தெரிவித்திருந்தது. இன்று அது படிப்படியாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.

ஆராய்ச்சி மாணவர் எண்ணிக்கையும் வீழ்ச்சி

உலகளவில் ஆய்வுகளுக்கான மாணவர் எண்ணிக்கையை குறைக்கும் ஒரே தேசம் இந்தியா வாகதான் இருக்க முடியும். அதுவும் குறிப்பாக குறிப்பிட்ட சமூகத்தை மட்டும் வெளியேற்றுவது மிகப் பெரிய அநீதி. மேலும் நெட், ஜே.ஆர்.எப் போன்ற ஆய்வு மாணவர்களுக்கான தகுதி மற்றும் கல்வி உதவித்தொகை பெறுவதற்கான தேர்வுகளை முறையாக நடத்தாமல் காலம் தாழ்த்துகிறது. வரு டத்திற்கு இரண்டு முறை நடைபெற்ற தேர்வை இனி ஒரு முறை நடத்தினால் போதும் என்கிறது. ஒரு பேராசிரி யருக்கு வழங்கி வந்த ஆய்வு மாணவர்கள் எண்ணிக் கையை சரிபாதியாக குறைத்துள்ளது. அவ்வாறு குறைக்கப்பட்டால் பேராசிரியர் எண்ணிக்கையை அதி கப்படுத்த வேண்டும் ஆனால் பேராசிரியர் எண் ணிக்கையும் குறைக்கப்படுகிறது. ஆய்வு மாணவர்கள் எண்ணிக்கை குறைய இது ஒரு அடிப்படையான காரணமாகும்.  மேலும் அனைத்து மத்திய கல்வி நிலையங்களிலும் பன்மடங்கு கல்வி கட்டணத்தை உயர்த்தியுள்ளது. புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தில் இத்தகைய உயர்வுக்கு எதிராக போராடியதற்காக மாணவர்கள் மீது மிகக் கடுமையான தண்டனையை அந்நிர்வாகம் வழங்கியது.

முனைவர் பட்ட ஆய்வில் ஈடுபடும் சிறுபான்மை மாணவர்களுக்கான மெளலானா ஆசாத் கல்வி உதவித்தொகையை 2016ல் 4,141 என்ற மாணவர் எண்ணிக்கையிலிருந்து சரிபாதியாக குறைத்து 2020ல் 2,348 என்ற எண்ணிக்கையில் வழங்கியுள்ளது. சிறுபான்மை மக்கள் மீது சமூகத்தில் பல்வேறு தாக்கு தலை தொடுப்பது மட்டுமின்றி அவர்களின் கல்வியிலும் ஒன்றிய அரசு கைவைத்துள்ளது. இஸ்லாமிய சமூகத்தில் உயர் கல்வி பயில வரும் மாணவிகள் எண் ணிக்கை வெறும் 5% விழுக்காடுதான். மொத்த உயர் கல்வி பயில வரும் மாணவிகள் விழுக்காடு 49%. இந்த நிலையில், அவர்களின் மத பழக்கவழக்கங்களை முன்வைத்து கர்நாடகத்தில் காவி கும்பல் நடத்தும் வன்முறை வெறியாட்டம் இஸ்லாமிய மாணவிகளின் கல்வியை கேள்விக்குறியாக்கியுள்ளது. 

ஆர்எஸ்எஸ் வெறியர்களின் இழிசெயல்கள் 

மாணவர்கள் மீது கல்வியில் நடக்கும் இத்தகைய அநீதிகளுக்கு எதிராக மாணவர்களை ஒன்றுதிரள விடாமல் அவர்களை சாதிய, மதவாத உணர்வுக ளுக்குள் மூழ்கடிக்கும் வேலையை பாஜக செய்து  வருகிறது. குறிப்பாக பெண்களுக்கு எதிரான கருத்து களை மாணவர்களிடம் திட்டமிட்டு புகுத்தி வருகிறது. சமீபத்தில் புள்ளி பாய், சுள்ளி டீல் என்ற வலைதள செயலி பெண்களுக்கு எதிராகவும், குறிப்பிட்ட சமூ கத்திற்கு எதிராகவும் மிக மோசமான வேலைகள் நடந்து வந்தது. குறிப்பாக இஸ்லாமிய பெண்கள் புகைப்படம், உருவகேலி, தொலைபேசி எண் பகிர்வது போன்ற வேலைகள் அதில் நடைபெற்றது. சில ஆதிக்க சாதி இந்து ஆண்கள் மற்றும் பெண்களும் இவ்வேலைகள் செய்தது தெரியவந்தது. இவர்களின் வயது 17தான் என்பது குறிப்பிடத்தக்கது. இத்தகைய மதவாத பிற்போக்கு சிந்தனையை இவர்களுக்கு ஆர்.எஸ்.எஸ் மாணவர் பிரிவான ஏபிவிபி சார்ந்த மாணவர்கள் வழிகாட்டியுள்ளார்கள் என்பது தற்போது தெரிய வந்துள்ளது. 

கல்வியில் ஆர்எஸ்எஸ்சின் வலதுசாரி திரிபு வேலை களை வெளிப்படையாகவும் மிகவும் வேகமாகவும் மோடி அரசு மேற்கொண்டு வருகிறது. குடியரசு தின அணிவகுப்பில் கல்வித்துறை சார்பில், ஒன்றிய பாஜக அரசின் காவிவாத கல்விக்கொள்கையை வெளிப் படுத்தும் ஊர்தியை இடம் பெறச்செய்தது. அதில் மனுவாத குருகுல கல்வியை இந்திய கல்வியாக உலகிற்கு பறைசாற்றும் வேலையை செய்தது. தில்லி  பல்கலைக் கழகத்தின் ஹன்ஸ்ராஜ் கல்லூரி வளா கத்தில் மாணவிகள் விடுதி அருகில் பசுவிற்கான கோசாலையை அக்கல்லூரி நிர்வாகம் அமைத்து வருகிறது. மேலும் அனைத்து கல்வி வளாகத்திலும் கோசாலை அமைக்க வேண்டும் என பல்கலைக் கழகத்தில் ஆர்எஸ்எஸ் மாணவர் அமைப்பான ஏபிவிபி மனு அளித்துள்ளது. இந்திய மாணவர் சங்கம் இதை  கடுமையாக எதிர்த்து போராட்டம் நடத்தி வருகிறது.

ஜேஎன்யுவின் கதி

புதிதாக நியமிக்கப்பட்டுள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக துணை வேந்தர் சாந்தி ஸ்ரீ பண்டிட்,  நாதுராம் கோட்சே புகழை டிவிட்டரில் பதிந்து பின் எனக்கும் அதற்கும் சம்பந்தமே இல்லை என்று பொய் சொல்லி மாட்டிக்கொண்டார். இவர்தான் விவசாயிகள் போராட்டத்தை ‘காலிஸ்தான் ஜிஹாதிகள்’ என இழிவு படுத்தியவர். மேலும் துணைவேந்தராக நியமித்த தற்கு நன்றி தெரிவித்து அவர் எழுதிய கடிதத்தில் பல பிழைகள் இருந்ததை ஜே.என்.யு பல்கலைக்கழக மாணவர்களே குறிப்பிட்டு இணையத்தில் கேள்வி எழுப்பியதும், அதை நான் எழுதவில்லை; என் அலு வலக ஊழியர் என மழுப்பியுள்ளார். நமது தேசத்தின் மிகப்பெரிய கல்வி நிறுவனமான ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் இப்படியானவர்கள் கையில் சிக்கித் தத்தளித்து வருகிறது.

கடந்த இரண்டாண்டுகளில் பள்ளிப்படிப்பை, கல்லூரிப் படிப்பை இடையில் நிறுத்தி வேலைக்கு செல்லும் மாணவர்கள் எண்ணிக்கை அதிகரித் துள்ளது. மேலும் படித்து முடித்த மாணவர்கள் வேலை யின்றி மிகப்பெரிய இன்னலுக்கு உள்ளாகிறார்கள். வேலையில்லா திண்டாட்டம் மிகப்பெரிய அளவில் அதிகரித்துள்ளது. வேலை தேடி மக்கள் சொந்த ஊர், மாநிலங்களை விட்டு இடப்பெயர்வது தொடர்ந்து அதிகரித்துள்ளது. கடந்த ஐந்தாண்டுகளில் வட மாநிலங்களைச் சார்ந்த மக்கள் சுமார் இரண்டு கோடிபேர் தமிழகம், கேரளாவில் இடம்பெயர்ந்துள் ளனர். மோடி அரசின் இத்தகைய செயல்பாடுகள் இந்திய இளைஞர்களிடையே பெறும் கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது. அப்படியான கொதிப்பை சாதியாகவும், மதமாகவும் மடைமாற்றம் செய்து வன் முறை, மோதலை ஏற்படுத்தி பிரித்தாலும் சூழ்ச்சியை ஒன்றிய பாஜக அரசு செய்து வருகிறது. இதை உடனடி யாக தடுத்து நிறுத்த வேண்டியுள்ளது.

கல்வி, வேலை, சமூக மேம்பாடு மதநல்லிணக்கம் குறித்த முற்போக்கான அரசியலை நோக்கி மாணவர்க ளையும், இளைஞர்களையும் வளர்த்தெடுக்க இந்திய மாணவர் சங்கம் உறுதியேற்றுச் செயல்படுகிறது. 

கட்டுரையாளர் : 
மத்தியக்குழு உறுப்பினர்,
இந்திய மாணவர் சங்கம்.

நன்றி : தீக்கதிர்
#Theekkathir #தீக்கதிர் #SFI #SFItamilnadu

உலகை அதிரவைத்த மக்கள் சீனத்தின்செயற்கை நுண்ணறிவு டீப் சீக் (Deep seek)

உலகை அதிரவைத்த மக்கள் சீனத்தின்  செயற்கை நுண்ணறிவு டீப் சீக் (Deep seek) செயற்கை நுண்ணறிவு (artificial intelligence) துறையில் பேராதிக்கம் செ...