Wednesday, February 16, 2022
கல்வி பறிக்கும் மோடி அரசு; மாணவர் சமூகம் பதிலடி தரும்!
Sunday, January 26, 2020
கல்வி வளாகங்களை காவு வாங்க துடிக்கும் மத்திய அரசு
கல்வி வளாகங்களை காவு வாங்க துடிக்கும் மத்திய அரசு
உலகின் புகழ்பெற்ற கல்வி நிறுவனம் என போற்றப்படும் இந்திய தேசத்தின் தலைநகரில் அமைந்துள்ள தில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்திலிருந்து தில்லியின் மையப்பகுதிக்கு செல்லும் மெட்ரோ ரயில் நிலையங்கள் மூடப்பட்டுள்ளது. நொய்டாவிலிருந்து வரும் மக்கள் தில்லியை அடைய டி.என்.டி அல்லது அஷர்தம் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள். மதுரா சாலை மற்றும் கலிண்டி கன்ஞ் சாலை எண் 13ஏ போக்குவரத்து மூடப்பட்டுள்ளதாக தில்லி போக்குவரத்து போலீஸ் தெரிவித்துள்ளது. மத்திய அரசின் நேரடிக் கட்டுப்பாட்டில் உள்ள தில்லி மாநகரின் பாதுகாப்பிற்கு அப்படி என்ன தான் ஆனது? சாலைகளும், மெட்ரோ இரயில்களும் கடந்த முப்பது நாட்களுக்கு மேலாக மூடப்பட யார்தான் காரணம்?.
கடந்த டிசம்பர் 6 ம் தேதி மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித்சா அவர்கள் குடியுரிமை திருத்தச் சட்ட மசோதாவை (CAB) பாராளுமன்றத்தின் குளிர்கால கூட்டத் தொடரில் முன்மொழியப்பட்டு 12ம் தேதி குடியரசுத் தலைவர் உயர்திரு இராம்நாத் கோவிந்த் அவர்களின் ஒப்புதலோடு சட்டமாக (CAA) நிறைவேற்றப்பட்டது. இதன் மூலம் பாக்கிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் வங்கதேசதிலிருந்து அகதிகளாக இந்தியாவிற்குள் வரும் இந்து, சீக்கியர், பார்சி, கிருஸ்தவர், பெளத்தர்கள் மற்றும் சமணர்கள் தவிற மற்றவர்களுக்கு குடியுரிமை மறுக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்தது. அதாவது இம்மூன்று நாடுகளிலிருந்து வந்த இஸ்லாமியர்களுக்கும், மியான்மரிலிருந்து வந்த ரொஹிங்கியாக்களுக்கும், பூடானிலிருந்து வந்த கிருஸ்தவர்கள் மற்றும் இலங்கையிலிருந்து வந்த தமிழர்களுக்கும் இந்தியாவில் குடியுரிமை மறுக்கப்படுவதாக புதிய சட்டத்திருத்தத்தின்படி நேரடியாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
உச்சநீதிமன்றம் அஸ்ஸாமில் கடந்த ஐம்பது ஆண்டுகளாக வங்கதேசம் மற்றும் மியான்மரிலிருந்து குடியமர்ந்த மக்களால் ஏற்பட்ட மாநிலத்தின் உட்பிரச்சனைகளுக்கு தீர்வு கான தேசிய குடிமக்கள் பதிவேட்டை (NRC) ஏற்படுத்த மத்திய அரசுக்கு அறிவுறுத்தியது. அஸ்ஸாம் மாநில பிரச்சனைக்கு தீர்வுகான உச்சநீதிமன்றத்தால் அறிவுறுத்தப்பட்ட தேசிய குடிமக்கள் பதிவேட்டை (NRC) நாடுமுழுவதும் நடத்தப்போவதாக மத்திய அரசு அறிவித்தது. மேலும் பத்தாண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் மக்கள் தொகை கணக்கெடுப்பை; மக்கள் தொகை பதிவேடாக (NPR) தேசம் முழுவதும் நடத்தப்போவதாக அறிவித்து இதற்காக கூடுதலாக 4 ஆயிரம் கோடி நிதியையும் அறிவித்தது. இதன் மூலம் இந்திய மக்கள் அனைவரும் தங்களுக்கு மட்டுமின்றி தங்களின் தாய், தந்தை மற்றும் தாத்தா, பாட்டிக்குமான பிறப்பு சான்று, பிறந்த இடம் தெரிவிக்க வேண்டிய நிலை வந்துள்ளது. இதன் மூலம் இந்திய மக்கள் அனைவரும் முறையான சான்றுகளை சமர்பிக்க தவறும்பட்சத்தில் நாடற்றவர்களாக வதை முகாம்களுக்கு (Concentration camp) அனுப்பப்படும் அபாயத்திற்கு தள்ளப்படுள்ளார்கள்.
இந்த கொடுமையான சட்டத்தை திரும்பப் பெறக்கோரி அஸ்ஸாம் மாணவர்கள் மக்களோடு களத்திலிறங்கி போராட்டத்தை துவங்கிட அலிகார் பல்கலைக் கழகம், ஜாமியா மிலியா இஸ்லாமியா பல்கலைக் கழகம், ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகம் மற்றும் இந்தியாவின் அனைத்து மாணவர்களும் போராட்டத்தை தொடர்ந்தனர். மக்களும் ஜனநாயகத்தை விரும்பும் அனைத்து அமைப்புகளும் இப்போராட்டத்தை தொடர்ந்து முன்னெடுத்து வரும் சூழலில் மாணவர்களை ஒடுக்கினால் போராட்டத்தை கட்டுபடுத்தலாம் என்ற மூடத்தனமான நம்பிக்கையில் மாணவர்கள் மீது அடக்குமுறையை மத்திய அரசு ஏவியது. அஸ்ஸாமில் மாணவர்கள் உள்ளிட்டு நான்கு பேர் பாதுகாப்புபடையின் துப்பாக்கி குண்டுகளுக்கு இறையாகிட ஜாமியாவிலும், அலிகாரிலும் பல்கலைக்கழகத்தின் ஒப்புதலின்றி கல்வி வளாகங்களுக்குள் புகுந்து கண்மூடித்தனமான தாக்குதலை காவல் துறையினர் தொடுத்தனர். மேலும் கல்வி வளாகத்தின் வெளியிலிருந்து கற்களையும், கண்ணீர் புகைக்குண்டுகளையும் காவல்துறையினர் எறிந்தது மட்டுமல்லாமல் தில்லி மாநகரின் பேருந்தையும் பெட்ரோல் ஊற்றிக் கொளுத்தினர். மேலும் சில ஆர்.எஸ்.எஸ் குண்டர்கள் காவல் துறை வேடம் அணிந்து போராடும் மாணவர்களை கொடூரமாக தாக்குவது என வன்முறையின் உச்சத்திற்கே மத்திய அரசு சென்றது.
போராட்டத்தை முன்னெடுப்பதில் முன்னிலை வகித்த ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழக மாணவர்களை கட்டுபடுத்த ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் மாணவர் பிரிவான ஏ.பி.வி.பி அமைப்பினரின் ரெளடிகுண்டர்களை கொண்டு மாணவர்களை தாக்க மத்திய அரசு திட்டமிட்டது. அதன்படி கடந்த ஜனவரி 5ம் தேதி பல்கலைக்கழகத்தின் கல்விக்கட்டணம் மற்றும் விடுதி கட்டண உயர்வுக்கு எதிராகவும் பருவத்தேர்வை தள்ளிவைக்க கோரியும் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர்கள் போராட்டம் நடத்தினர். அதற்கு ஆதரவாக பல்கலைக்கழகத்தின் மாணவர் பேரவை தலைவர் அயிசே கோஸ் தலைமையில் மாணவர்களும் பங்கேற்றனர். அமைதியாக அறவழியில் நடைபெற்றுவந்த இப்போராட்டத்தில் ஏ.பி.வி.பி அமைப்பினர் மாலை 6 மணியளவில் முகத்தை மறைத்துக் கொண்டு முகமூடிகளுடன் கைகளில் இரும்பு ராடுகள், குண்டாந்தடிகள் உள்ளிட்ட கொலைக்கருவிகளைக் கொண்டு மாணவர்களையும், பேராசிரியர்களையும் தாக்கத் துவங்கினர். சுமார் இரண்டு மணி நேரங்களுக்கு மேலாக நடைபெற்ற இக்கொலைவெறித் தாக்குதலில் மாணவர் பேரவை தலைவர் அயிசே கோஸ், பேராசிரியர் சுச்சாரிடா உள்ளிட்ட 39 பேர் கடுமையாக தாக்கப்பட்டு தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டனர்.
இது குறித்து டைம் இணைய இதழில் பதிவிடும் ரானா அயூப் அவர்கள் “ஜேஎன்யு வில் மாணவர்கள் தாக்கப்பட்ட சம்பவம் அறிந்ததும் சிறுது நேரத்தில் சில பத்திரிக்கையாளர்களும் நானும் அங்கு சென்றுவிட்டோம். ஒரே இருட்டாக இருந்தது மெயின் கேட் மூடப்பட்டிருந்தது சிறிது நேரத்தில் கேட் திறக்கபட உள்ளிருந்து ஐம்பதுக்கும் மேற்பட்ட நபர்கள் காவிநிற துணிகளால் முகத்தை மறைத்துக் கொண்டு ‘பாரத் மாதாகீ ஜே’ போன்ற முழக்கத்துடன் கைகளில் இரும்பு ராடு, கட்டை…. போன்றவற்றுடன் வெளியே வந்தனர். 200க்கும் மேற்பட்ட காவலதுறையினர் இதை அமைதியாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர்… வன்முறையாளர்களில் சிலர் உள்ளூரை சார்ந்தவர்கள் என தெரிந்தது அவர்களை அனுகி நான் கேட்ட போது ‘முகாலாயர்களை வளாகத்திலிருந்து சுத்தப்படுத்துவதாக’ கூறினார். மேலும் விடுதிகளில் இருந்த மாணவர்களையும், சில பார்வையற்ற மாணவர்கள் உள்ளிட்டு கடுமையாக தாக்கபட்டிருந்தனர்…. தலையில் பலத்த காயத்துடன் மாணவர் தலைவர் இருந்த ஆம்புலன்சை வெளியே பொவிடாமல் தடுத்து நிறுத்தியுள்ளனர் நீண்ட நேர அலக்கழிப்பிற்கு பின் ஒரு வழியாக கடினப்பட்டு பின்புற கேட் வழியாக மருத்துவமனைக்கு சென்றுள்ளனர். இது குறித்த பல்வேறு வீடியோ ஆதாரங்களை நான் தில்லியின் மிக உயரிய போலீஸ் அதிகாரிகளுக்கு அனுப்பி வைத்தேன் ஆனால் காவல்துறையோ மண்டை உடைந்து ஐந்து தையல்கள் போடபட்டிருந்த பல்கலைக்கழகத்தின் மாணவர் பேரவை தலைவரும் இந்திய மாணவர் சங்கத்தின் (SFI) நிர்வாகியுமான அயிசே கோஸ் மீதே முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்தது… ஆளும் பிஜேபி அரசின் மாணவர் பிரிவான ஏபிவிபி அமைப்பினர் தான் எங்களை தாக்கினார்கள் என பாதிக்கப்பட்ட மாணவர்கள் ஆதரத்துடன் தெளிவாக குறிப்பிட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை” இது குஜராத் கோப்புகள் என்ற ஆவணத்தை வெளியிட்டு மோடி, அமிஷாவின் வன்முறை, பாலியல் குற்றங்களை வெளி கொணர்ந்த இந்தியாவின் புகழ்பெற்ற ஊடகவியலாளர் ரானா அயூப்பின் பதிவுகளின் சிறு பகுதியே. மேலும் இந்தியா டுடே தொலைக்காட்சியில் ஏபிவிபி நிர்வாகி நாங்கள் தான் அடித்தோம் என்று சொன்ன ஆதரங்கள் போன்று எண்ணற்ற ஆதாரங்கள் இருந்தும் தில்லி காவல்துறையும் நீதிமன்றமும் இருக கண்ணை கட்டிக்கொண்டுள்ளது.
ஜாமியா மிலியாவில் 1000 மாணவர்கள் மீது வழக்கு புனைந்துள்ளனர். அலிகாரிலும் பாதிக்கபட்ட மாணவர்களையே சிறையில் அடைத்துள்ளனர். ஒட்டுமொத்தமாக இந்தியா முழுவதும் நடைபெற்ற தாக்குதல்களில் நாற்பதுக்கும் மேற்பட்டோர் படுகொலை செய்யப்பட்டுள்ளார்கள் இதில் 21 பேர் உத்திரபிரதேசத்தில் கொல்லப்பட்டுள்ளனர். மிகப்பெரும் போராளியாக மோடியின் நடிப்பையே விஞ்சும் மம்தா ஆட்சி நடந்தும் வங்கத்தில் ஜாதவ்பூர் பல்கலைக்கழகத்திலும், விஸ்வபாரதி பல்கலைக்கழகத்திலும் மாணவர்கள் கொடூரமாக தாக்கப்பட்டுள்ளனர். புதிய கல்விக் கொள்கை மூலம் காவி கார்பரேட் அஜண்டாவை அமுல்படுத்த முயற்சிக்கும் சூழ்நிலையில் இக்கொடிய தாக்குதல்களை முறியடிக்கும் வகையில் தற்போது (24.01.2020) இந்துதுவா பயங்கரவாதிகளின் சோதனைக் கூடமாகவுள்ள குஜராத்தின் மத்திய பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற மாணவர் பேரவைத் தேர்தலில் இந்திய மாணவர் சங்கத்தின் இடது ஜனநாயக சமூக நீதிக்கூட்டணி அசத்தலான வெற்றியை பெற்றுள்ளது.
வன்முறைகளும் கொலைக்கருவிகளும் கல்வி வளாகத்தின் கட்டிடங்களை, கதவு, ஜன்னல்களை தகர்கலாம், மாணவர்களின் இரத்தங்களை சுவைத்து நுகரலாம் ஆனால் மதச்சார்பற்ற ஜனநாயகபூர்வ கல்விக்கான மாணவர்களின் போராட்ட உணர்வில் சிறுதுரும்பை கூட அவர்களால் அசைக்கமுடியாது என வரலாறு தொடர்ந்து நிரூபித்து வருகிறது.
க.நிருபன் சக்கரவர்த்தி
இந்திய மாணவர் சங்கம்
Tuesday, January 7, 2020
ஜே.என்.யூ தாக்குதலில் பிரதமருக்கு தொடர்பில்லை என நிரூபிக்க வேண்டும் : தி இந்து தலையங்கம்
ஜே.என்.யூ தாக்குதலில் பிரதமருக்கு தொடர்பில்லை என
நிரூபிக்க வேண்டும் : தி இந்து தலையங்கம்
By மாற்று ஆசிரியர்குழு January 7, 2020
தமிழில்: க.கனகராஜ்
ஜவஹர்லால் நேரு பல்கலைகழக தாக்குதல் தொடர்பாக தி இந்து ஆங்கில ஏடு எழுதியுள்ள ‘அராஜகத்தின் முகமூடி’ என்ற தலையங்கம் தமிழில்.
ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் மீதான தாக்குதல் அதிகாரத்தில் உள்ளவர்களின் ஆதரவு இல்லாமல் நடந்திருக்க முடியாது .
முகமூடி அணிந்த கும்பல் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு புது டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் தாக்குதல் நடத்தியது.அதிரவைக்கும் கொடூரமான இத்தாக்குதலின் காட்சிகள் ஒரு கொடும் துயரமாக இந்திய மனச்சாட்சியில் நீண்ட நாட்களுக்கு இருக்கும். இந்த கும்பல் கல்லூரி விடுதிகளை நொறுக்கியுள்ளது. மாணவர்கள் பேராசிரியர்கள் ஊழியர்கள் அனைவருக்கும் மிகக்கடுமையான காயங்களை ஏற்படுத்தி இருக்கிறது .
திட்டமிட்ட பைத்தியக்காரத்தனமான இந்த வன்முறை பல மணி நேரங்கள் நடந்திருக்கிறது .
புதுடில்லி காவல்துறை ஒரு குற்றவாளியைக்கூட இதுவரையிலும் கைது செய்யவில்லை . இத்தனைக்கும் கல்லூரி வளாகத்திற்கு வெளியே ஏராளமான காவல்துறையினர் குவிக்கப்பட்டிருந்தனர்.தெரு விளக்குகள் அணைக்கப்பட்டு வன்முறையில் ஈடுபட்டவர்கள் மிக மோசமான
வார்த்தைகளால் முழக்கமிட்டுக் கொண்டு மிக சாவகாசமாக நடந்து போனதை பார்க்கிறபோது காவல்துறை குற்றவாளிகள் தப்பிப்பதற்கு பாதுகாப்பு அரணாக நின்றதாகவே தெரிகிறது .
குற்றம் செய்ய தூண்டியவர்கள் குற்றத்தை நடத்தியவர்கள் இவர்களை மிஞ்சுகிற விசுவாசத்தை குற்றவாளிகளிடம் டெல்லி காவல்துறை காண்பித்திருக்கிறது.
ஒரு ஜனநாயக நாடாக முழுமை பெறுவது மற்றும் அதனுடைய நிறுவனங்களைப் பொக்கிஷங்களாக போற்றுவது என்கிற இந்தியாவின் கனவில் இந்த இரவு ஒரு கொடும் நிகழவாக ஆட்டுவிக்கும்.
அவர்கள் முகமூடி அணிந்திருந்தார்கள் தான். ஆனால் இந்தத் தாக்குதலுக்கு பின்னே யார் இருந்தார்கள் என்பதை கண்டுபிடிப்பது கடினமல்ல. இது இந்தியாவில் மிக முக்கியமான கல்வி நிறுவனம்.இந்த நிறுவனத்தில் கற்பதற்கு வாரிசுவழியோ அல்லது பணமூட்டைகளோ தேவையில்லை.
பொதுவாகவே ஹிந்துத்துவா வாதிகள் அறிவு வாதத்தையும. குறிப்பாக அறிவுத்துறை அமைப்புகளையும் சகித்துக்கொள்ள முடியாதவர்களாகவே இருக்கிறார்கள்.2014 ஆம் ஆண்டிலிருந்து இதை வெளிப்படையாகவே அவர்கள் சொல்லி வந்திருக்கிறார்கள். குறிப்பாக ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகம் அவர்களால் பிரதான தாக்குதலுக்கு இலக்கான தாகவே இருந்திருக்கிறது. இப்போது நடந்திருப்பதும் அதையே உறுதிப்படுத்துகிறது.
ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகம் இந்தியாவின் வேறுபட்ட தன்மைகள் உடைய மாணவர்களை எல்லாம் ஏற்றுக்கொள்கிறது. அந்த மாணவர்களுக்கு விமர்சன பூர்வமான சிந்தனை முறையையும் அதேபோன்று அவர்கள் தேர்ந்தெடுத்த பாதையில் சிறப்பாக விளங்குவதற்கும் மிகச்சிறந்த வாய்ப்புகளையும் வழங்கி வருகிறது.
விடுதலை பெறுவதற்கான வாய்ப்பையும் கேள்வி கேட்பதற்கான உரிமை இரண்டையும் ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகம் வழங்குகிறது. இந்த இரண்டின் மீதும் அளவிடற்கரிய வெறுப்பும் கோபமும் இப்போது இருக்கக்கூடிய ஆட்சியாளர்களுக்கு இருந்து கொண்டே இருந்திருக்கிறது.
இப்போதைய ஆட்சியாளர்கள் புரட்டுக்கும் வரலாற்றுக்கும் இடையே இருக்கும் வேறுபாட்டை அழிக்க விரும்புகிறார்கள். நம்பிக்கைக்கும் வெறிக்கும் இடையே உள்ள வேறுபாட்டை அழிக்க விரும்புகிறார்கள் .அதேபோன்று விமர்சனத்துக்கும் விமர்சனமின்றி ஏற்றுக் கொள்வதற்கும் இடையே உள்ள வேறுபாட்டை அழிக்க விரும்புகிறார்கள் .
மாணவர்களும் ஆசிரியர்களும் தங்களுக்குத் தாங்களே கடுமையான காயங்களை ஏற்படுத்திக் கொண்டார்கள் என்று நம்பினால் ஒழிய அகில் பாரதிய வித்யார்த்தி பரிசத் என்கிற ஆர்எஸ்எஸின் மாணவர் அமைப்பு தான் இந்த வன்முறையை திட்டமிட்டு நடத்தினார்கள் என்கிற குற்றச்சாட்டு நம்பகத் தன்மை வாய்ந்ததாகவே இருக்கிறது.
இந்த முகமூடிக்கு பின்னால் யார் இருக்கிறார்கள் என்கிற பட்டியல் மிக நீளமானது . அவர்களில் சிலரது முகங்களை நீங்கள் நினைவு படுத்த முடியும். ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் நிர்வாகம் அதன் துணைவேந்தர் ஜெகதீஷ் குமார் தங்களுடைய கடமையில் தவறிவிட்டார்கள் என்று மட்டும் சொல்ல முடியாது . அவர்கள் ஆசிரியர் என்ற முறையிலும் பாதுகாவலர் என்ற முறையிலும் தவறு செய்திருக்கிறார்கள்;என்பதோடு தாங்கள் வகிக்கிற பொறுப்பின் புனிதத்தை சீரழித்து விட்டார்கள்.
தற்போது டெல்லி காவல்துறை கமிஷனராக இருக்கக்கூடிய அமுல்யா பட்நாயக், அவரின் கீழ் உள்ள காவல்துறை ஜாமியா மிலியா இஸ்லாமியா பல்கலைக்கழகத்திற்குள் நூலகத்திற்குள் உள்ளே புகுந்து சட்டம் ஒழுங்கை எல்லாம் பாதுகாத்த கதை நமக்குத் தெரியும். ஆனால் இங்கு அவர்கள் பார்வையாளர்களாக இருந்தார்கள் என்று மட்டும் சொல்ல முடியாது. உண்மையில் முகமூடி அணிந்து தாக்கியவர்களின் கூட்டாளியாக இருந்தார்கள் என்பதே உண்மை.
அவர்கள் முகமூடி அணிந்து இருக்கவில்லை ஆனால் தங்களுடைய அடையாளத்தை அவர்கள் மறைத்துக் கொண்டனர். தங்கள் பெயர் பொறித்த இலச்சணைகளை (name batch) அணிவிக்காமல் விட்டதன் மூலம் தங்களுடைய அடையாளத்தை அவர்கள் மறைத்திருந்தார்கள்.
டெல்லி நிர்வாகம் தங்களுக்கு எந்த பொறுப்பும் இந்தப் பிரச்சினையில் இல்லை என்று கையை விரித்து விட்டார்கள். மத்திய அமைச்சர்கள் சிலரும் பாரதிய ஜனதா நிர்வாகிகள் சிலரும் மிக மேலோட்டமாக சொல்லுகிற எதிர்ப்புகள் எந்தவித நம்பிக்கை தன்மையும் இல்லாதது.
மத்திய அரசும் பிரதமர் நரேந்திர மோடியும் அவமானகரமான இந்த செயல் தங்களது ஒப்புதலோடு நடைபெறவில்லை என்பதை நிரூபிக்க வேண்டுமானால் உரிய நடவடிக்கை எடுக்காத காவல்துறையின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும்; முகமூடி அணிந்து கொலைத் தாக்குதல் நடத்தியவர்களுக்கு அதிகபட்ச தண்டனை அளித்து நீதியை நிலை நிறுத்தவேண்டும்.
உலகை அதிரவைத்த மக்கள் சீனத்தின்செயற்கை நுண்ணறிவு டீப் சீக் (Deep seek)
உலகை அதிரவைத்த மக்கள் சீனத்தின் செயற்கை நுண்ணறிவு டீப் சீக் (Deep seek) செயற்கை நுண்ணறிவு (artificial intelligence) துறையில் பேராதிக்கம் செ...
-
உலகை அதிரவைத்த மக்கள் சீனத்தின் செயற்கை நுண்ணறிவு டீப் சீக் (Deep seek) செயற்கை நுண்ணறிவு (artificial intelligence) துறையில் பேராதிக்கம் செ...
-
இலங்கை ஜனாதிபதி தேர்தலில் இதுவரை எண்ணப்பட்ட வாக்குகளில் எந்தவொரு வேட்பாளரும் 50 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகளை பெறாத நிலையில், இரண்டாவது ...
-
#தமிழகஅரசே! *டாஸ்மாக்கை திறந்து மக்கள் உயிரை பறிக்காதே! *கொரோனாவைவிட கொடிய டாஸ்மாக்கை மூடு! #மத்தியஅரசே! *மாநிலங்களுக்கு தேவையான நிதியை உடனே...