Sunday, May 31, 2020

அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் தோல்வி

அமெரிக்க ஏகாதிபத்தியம் தனது தோல்வியை மறைக்க தன் சொந்த மக்களையே கண்மூடித்தனமாக சுட்டுதள்ளும் அளவிற்கு வந்துள்ளது. இனவாதம் உச்சம் பெற்று ஒட்டுமொத்த மனிதர்களுக்கு எதிரான அரசபயங்கரவாதமாக தோலுரிக்கப்பட்டு நிற்கிறது.

தவறு செய்தவர்களுக்கு எதிராக ஒரு சிறு துரும்பைக்கூட நகர்த்தாத டொனால்ட் டிரம்ப் நிர்வாகம் இன்று பாதிக்கப்பட்ட அப்பாவி மக்களையே சுட்டு தள்ள துணிந்துள்ளது. ஆடுகள் ஓநாயிகளிடம் கருணையை எதிர்பார்க்க முடியாது. மனித ஓநாய்களாக மாறிபோன பாசிச வெறிபிடித்த அமெரிக்க எந்திரங்கள் மனித இரத்தங்களை சுவைபார்த்து வருகிறது.
ஒட்டுமொத்த உலகின் பயங்கரவாத நடவடிக்கைகளின் ஊற்றுகண்ணாக, கார்பரேட் கொள்ளையர்களின் தலைமைபீடமாக உள்ள அமெரிக்க அரச பயங்கரவாதிகளின் அடாவடித்தனத்தை தடுத்து நிறுத்த உலக மக்கள் இணைந்து குரல் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். தன் சொந்த மக்களையே சுட்டுதள்ளும் முதலாளிதுவத்தின் தலைமை நாடு அமெரிக்க ஐக்கியம். நாளை உலக மக்கள் அனைவரையும் படுகொலை செய்வதற்கு வழிகாட்டுகிறது.

அமெரிக்க ஏகாதிபத்தியமே போராடும் மக்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்று. இனவாத நடவடிக்கைகளை உடனடியாக கைவிடு. தவறு செய்த காவல்துறை அதிகாரிகளை உடனே கைது செய். போராடும் மக்களின் நீண்டநாள் கோரிக்கையான ஒரு சதம் மக்களிடம் குவிந்துள்ள சொத்துகள் அனைத்தையும் தேச நலனிற்காக பொதுமக்கள் வளர்ச்சிக்கு பயன்படுத்து.

#protests2020 #bostonprotest #GeorgeFloyd #riots2020 #USAProtest #USRIOTS #USAonFire #TrumpHasNoPlan #minneapolisriots

Saturday, May 30, 2020

ஜார்ஜ் பிளாய்ட்கு நீதி கேட்டு

#ஜார்ஜ்பிளாய்ட்கு நீதி கேட்டு...
கருப்பின சகோதரன் ஜார்ஜ் பிளாய்டை இனவெறியுடன் படுகொலை செய்த அமெரிக்க ஏகாதிபத்திய அரசின் கொடூர காவல்துறைக்கு எதிராக போராடும் மக்கள் மீது கொலைவெறி தாக்குதல்களை அமெரிக்க அரசு தொடுத்து வருகிறது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றுவதை தனது டிவிட்டர் பக்கத்தில் வெளிப்படையாக செய்து வருகிறார். இனமோதலை தூண்டியும், காவல்துறையின் பராகிரமத்தை மெச்சியும் பேசி வருகிறார். 
இந்தியாவில் மதக்கலவரம் நடப்பது எப்படி RSS அமைப்பிற்க்கும் பிஜேபிக்கும் சாதகமாக அமைகிறதோ, நரேந்திர மோடியின் பொய் ஜால்சாப்புகள் மறைக்கப்படுகிறதோ.. அதே போல் தான் அமெரிக்க ஏகாதிபத்தியமும் தனது கையாலாகததனத்தை மறைக்க முதலாளிதுவ சமூக கட்டமைப்பின் தோல்வியை மறைக்க, கொரோனாவிற்கு கொத்துகொத்தாய் செத்து மடியும் அமெரிக்க மக்களை காப்பாற்ற வக்கற்று, இனவெறியை தூண்டி வேடிக்கை பார்கிறது. 
மேலும் போராடும் மக்கள் திரளின் மீதே கொலைவெறித் தாக்குதலையும் நிகழ்த்தி வருகிறது. வருகிற நவம்பர் 4ம் தேதி நடைபெறவுள்ள அமெரிக்க தேர்தலில் வழக்கம்போல் இனவாத அரசியலை குடியரசு கட்சி தனக்கு சாதகமாக பயன்படுத்த முயற்சிக்கும். அதே போல் ஜனநாயக கட்சியும் இனவாதத்திற்கு எதிரான அரசியலை பயன்படுத்த தேர்தலில் வியூகங்களை அமைக்கும்.
உலக கார்பரேட்களின் பாசிச முகத்தை பிரதிபலிக்கும் டொனால்ட் டிரம்பும் அவர் சார்ந்த குடியரசு கட்சியும் தோற்கடிக்கபட வேண்டும் என்று நம்மில் சிலர் ஜனநாயக கட்சியை ஆதரிக்கலாம் அல்லது அப்படியான மாற்றத்தை விரும்பலாம் ஆனால் போராடும் மக்களின் விருப்பம் வேறு.
2008 க்கு பிறகு ஏற்பட்ட நெருக்கடி அமெரிக்க மக்களை உண்மையான மக்களுக்கான ஜனநாயகத்தின் மீதும், சோசலித்தின் மீதும் ஈர்ப்பை ஏற்படுத்தியது. தற்போது கூட அதிபர் தேர்தல் போட்டியாளர்களில் முக்கியமானவராக திகழ்ந்த பெர்னி சாண்டர்ஸ் இளைஞர்கள் மத்தியில் பிரபலமானவராக இருக்க அவரின் Democratic Socialism எனும் முழக்கத்தின் வசீகரமே காரணம். 
சோஷலிசத்தின் பல்வேறு முழக்கங்களை இன்று வீதிதோறு மாணவர்கள் இளைஞர்கள் முழங்கி வருகிறார்கள். வால்ஸ்டீரீட் எழுச்சி என்பது துவக்கமே அது நியோ லிபரல் எக்கானமியை எதிர்ப்பதோடு நில்லாமல் புதிய அரச கட்டமைப்பிற்கான முழக்கமாகவும் இன்று மாறிவருகிறது.
மார்டின் லூதர், மால்கம் எக்ஸ் என அமெரிக்க வரலாற்று நாயகர்களின் சமரசமற்ற போராட்டங்களை தோலில் சுமந்து நிற்க்கும் போராளிகளில் பெரும்பாலானோராக இன்று வெள்ளையினத்தவர்.
தனது கருப்பின சகதரனுக்காக குதிரையின் கால்களுக்கிடையேயும், காவல்துறையின் லத்திக்கும், துப்பாக்கிகளுக்கும், காவல் ஊர்த்தியின் சக்கரத்திற்கும் பயமின்றி தனது உயிரை துரக்கவும் துணிந்துவிட்டார்கள்.
இன ஒடுக்குமுறையையும், பொருளாதார சுரண்டலையும் தீரமுடன் எதிர்க்க துணிந்துவிட்ட அமெரிக்க மக்களின் போராட்டம் நிச்சயம் வெற்றிபெறும். அது அமெரிக்காவை மாறிமாறி ஆண்டுவரும் இருகட்சி ஆட்சிமுறைக்கு மாற்றாக அமையும். கருப்பினத்தவரின் மீதான தொடர் பழிவாங்கும் நடவடிக்கைகள் படுகொலைகளுக்கு கணக்கு தீர்க்கப்படும்.

-க.நிருபன்

#riots2020 #LosAngelesriots #GeorgeFloyd #torontoprotest #LAProtests #BLACK_LIVES_MATTER #pittsburghprotest #US

Friday, May 29, 2020

கம்யூனிஸ்டாக வாழ்வது..

கம்யூனிஸ்டாக வாழ்வது..

கம்யூனிஸ்ட் கட்சியில் உறுப்பினர்களாக இருக்கும் நாம் கம்யூனிஸ்டாக வாழ்கிறோமா? என்ற கேள்வி இயல்பாகவே நமக்குள் எழத்தான் செய்கிறது. ஒரு கம்யூனிஸ்டாக இருப்பது என்பது ஒவ்வொரு ஆண்டும் நாம் கட்சியின் உறுதிமொழிகளை படித்து படிவத்தில் கையெழுத்திடுவதோடு முடிவதல்ல அதன் பிறகான நமது வாழ்விலும், நடைமுறையிலும் அவ்வாறு வாழ்ந்திட வேண்டும் என்பதே அவசியமானதாகும். அதற்க்கு கட்சியின் அன்றாட பணிகளை சலிப்பின்றி முன்னெடுப்பதோடு மார்க்சிய லெனினிய தத்துவ ஆசான்கள் வழியில் இச்சமூக கட்டமைப்பை புரிந்து கொள்ள வேண்டும். 
வர்க்க அடிப்படையிலான இச்சமூகத்தில் சர்வதேச பார்வையோடு பாட்டாளி வர்க்க அரசியலை சமரசமின்றி முன்னெடுத்துச் செல்ல விவசாய தொழிலாளர்களின் முன்னணி படையாக கம்யூனிஸ்ட் கட்சி உள்ளது என்பதை உழைக்கும் மக்களிடம் கொண்டு செல்பவராக நாம் இருக்க வேண்டும். 

இயற்கையில் உருவான இப்பூவுலகில் மனித சமூகம் முழுமைக்குமான விடுதலைக்கான தத்துவமாக மார்க்சிய தத்துவம் விளங்குகிறது. மேம்பட்ட உயிரினமாக இயற்கையையே மாற்றியமைக்கும் வல்லமை கொண்டதாக மனித இனம் இருப்பினும், தன்னை தானே அழித்து கொள்வதோடு நமது ஒட்டுமொத்த உயிர்கோளத்தையே அழித்திடும் நோக்கத்தோடு முதலாளிதுவ சக்திகளும் அதன் இலாப வேட்கையும் உலகிற்கே அச்சுறுத்தலாக உள்ளது. பழமையான பிற்போக்கான சமூக கட்டமைப்பை பாதுகாத்து முதலாளிதுவ சக்திகளோடு கைகோர்த்து நிற்க்கும் நிலப்பிரபுதுவ வலதுசாரி சக்திகள் உழைக்கும் மக்களை வர்க்க உணர்வு பெறுவதிலிருந்து தடுத்து வருகிறது. 

ஆளும் வர்க்க தத்துவங்களுக்கு சேவகம் செய்யும் பல்வேறு  சித்தாந்தங்களை அரசியல் கட்டமைப்புகளை முதலாளிதுவ நிலப்பிரபுதுவ அரசுகள் ஏற்படுத்தியுள்ளது. அது ஒவ்வொரு தனிமனித எண்ணங்களிலும் பழமையான மூடபழக்க வழக்கங்கள் துவங்கி தனிமனித சுயநல சிந்தனைகள் வரை விரைவி பரவிக்கிடக்கிறது. எனவே தான் பாட்டாளி வர்க்கத்தை பொறுத்தவரையில், அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றுவதும் அரசியல் விடுதலையை சாதிப்பதும் புரட்சியுனுடைய துவக்கம் மட்டுமே, பிரமாண்டமான பணிகளை அதன் பின்னர்தான் தொடங்க வேண்டியிருக்கும். 

சமுதாய விடுதலையின் கட்டங்களை புரிந்து கொண்டு, எதிரிவர்க்கத்தின் தற்போதைய இருத்தலை கண்டறிந்து, பரந்துபட்ட உழைக்கும் மக்களோடு நட்பு சக்திகளை ஒன்றிணைத்து போராட்டங்களை முன்னெடுக்கும் அதே வேளையில் நமக்குள்ளான தனிமனித போராட்டத்தையும் இணைக்க வேண்டும். அதற்க்கு நாம் மார்க்சிய லெனினியத்தின் செயலூக்கமுள்ள தத்துவங்களை கற்றுதேறும் மாணவர்களாக முதலில் இருக்க வேண்டும். 
இயக்கவியல் பொருள்முதல்வாத கண்ணோட்டத்தோடு இயற்கையையும், வரலாற்றையும், உபரிமதிப்பு குறித்தான பொருளாதார கோட்பாடுகளையும் நிச்சயம் ஒவ்வொரு உறுப்பினரும் கற்றுதேற முடியும் எனபதே வரலாற்று நிரூபணம். எழுதபடிக்க தெரியாத எத்தனையோ விவசாயிகளும், தொழிலாளிகளும் மார்க்சியக் கல்வியை கற்றறிந்து மிகச்சிறந்த கம்யூனிஸ்ட் கட்சி ஊழியர்களாக, தலைவர்களாக இன்றும் நம்மோடு செயல்பட்டு வருகிறார்கள் என்பதை நாம் புறிந்து கொள்ள வேண்டும். 

சமூக வளர்ச்சி குறித்தான அறிவியளான மார்க்சிய லெனினியமானது தொடர்ந்து வளர்ந்து கொண்டும் செழுமையடைந்து கொண்டும் செல்லும் தத்துவமாகும். அறிவியல் வளர்ச்சியின் பெருக்கம் தவிர்க்க முடியாமல் மார்க்சியத்தையும் அதே அளவு வளர்ச்சிக்கு இட்டு செல்கிறது. எனவே நிலவுகின்ற சமுகத்தில் இருக்கும் அனைத்தையும் குறித்தான ஒரு அடிப்படையான புரிதலை நாம் கொண்டிருக்க வேண்டும். மார்க்சியத்தை கற்பதென்பது நடைமுறையுடன் கூடியதென்பதை அவசியமான நிபந்தனையாக உள்வாங்க வேண்டும். 
புரட்சிகர நடைமுறையில் நம்மை இணைத்துக் கொள்ளாமல் புரட்சிகர மாற்றத்தை ஏற்படுத்த முடியாது. நடைமுறையிலிருந்து கற்பதும், கற்பதிலிருந்து நடைமுறைக்குமான இயக்கமானது தொடர்ந்து நடந்து கொண்டே இருக்க வேண்டும். இதில் நாம் நம்மையோ அமைப்பையோ பிரித்து வைத்து பார்க்க கூடாது. அமைப்பில் உள்ள ஒவ்வொரு உறுப்பினரின் அனுபவம் தான் அமைப்பிற்கான ஒட்டுமொத்த அனுபவத்தை கொடுக்க முடிகிறது. நடைமுறையிலிருந்து அறிவுக்கும், அறிவிலிருந்து மீண்டும் நடைமுறைக்கும் என்பது அமைப்புக்கும் தான். அது மார்க்சியத்தின் தலைசிறந்த சித்தாந்த அறிவை பெறுவதோடு புரட்சிகரமான நடைமுறையும் இணையும் போதே ஏற்படுகிறது. 

மக்களிடம் ஒரு கம்யூனிஸ்ட் இணைந்தே இருக்க வேண்டும் கட்சியின் பத்திரிக்கைகளை, பிரசுரங்களை, துண்டு அறிக்கைகளை வாசிப்பதும் அதை மக்களிடம் கொண்டு செல்வதும், நாம் வசிக்கும் பகுதிகளில் சில மக்கள் பிரச்சனைகளுக்காக சுவரொட்டிகளை, துண்டறிக்கைகளை நமது அமைப்பின் சார்பில் கொண்டு செல்லவும; தானே எழுதும் வகையில், பேசும் வகையில் உருவாகவேண்டும். தன்னோடு இருப்பவர்களையும் உருவாக்க வேண்டும்.

"விமர்சனம், சுயவிமர்சனம்" எனும் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆகச்சிறந்த நடைமுறைதான் நம் அமைப்பின் செயலூக்கமுள்ள வர்க்க போராட்டத்தை முன்னெடுக்கும் ஆயுதமாக உள்ளது. ஒவ்வொரு கட்சி உறுப்பினரும் அமைப்புக் கூட்டங்களில் உறுப்பினர்களின் மீதான விமர்சனங்களை முன்வைக்கும் அதே வேளையில் தன் மீதான விமர்சனத்தையும் பாரபட்சமின்றி வைக்க வேண்டும். 

வர்க்க அரசியலை கடந்து வேறு ஒரு பார்வை அமைப்பு கூட்டங்களில் வருவதை கட்சி ஒரு போதும் அனுமதிப்பதில்லை. அமைப்பின் முடிவுகள் எடுக்கும் போது நடக்கும் வேறுபட்ட விவாதங்கள்; முடிவுகளுக்கு பின் ஒட்டுமொத்த கட்சியின் ஒவ்வொரு உறுப்பினரின் முடிவாக அமுலாக வேண்டும். குறிப்பிட்ட முடிவுகளுக்கு பிறகான அமைப்பு கூட்டங்களில் அமுலான அரசியல் வேலைகளின் அடிப்படையில் விவாதம் அமைய வேண்டும். 
எந்தவொரு சூழலிலும் அமைப்பின் எதார்த அனுபவங்களுக்கு ஒத்துவராத தனிநபர் கருத்தின் அடிப்படையில் விவாதம் அமைந்துவிடக் கூடாது. ஜனநாயக மத்தியத்துவபடுத்தப்பட்ட நம் இயக்கத்தின் ஒவ்வொரு பகுதியும் "மேலிருந்து கீழும்", "கீழிருந்து மேலும்" என்ற வகையிலேயே கட்டமைக்கப்பட்டு அமைப்பின் அனுபவமாகவுள்ளது. 
கட்டுபாடு என்பது அமைப்பின் உணர்வோடு புரிந்து கொள்ள வேண்டும் அமைப்பின் நலனை தாண்டி தனிநபரின் நலனை முன்நிறுத்தகூடாது. கட்சியின் நலனை தன்னைவிட மேலானதாக கருத வேண்டும் கட்சியின் நலனிற்கு ஒரு கட்சி உறுப்பினர் என்ற வகையில் நிபந்தனையின்றி கட்டுபட வேண்டும். ஏனென்றால் கம்யூனிஸ்ட் கட்சியின் நலன் என்பது உழைக்கும் மக்களின் நலனின்றி வேறாக இருக்க முடியாது. அதே போல் ஒவ்வொரு கட்சி உறுப்பினரும் மக்களோடு இருப்பது என்பதும் போராட்டங்களை முன்னெடுப்பது என்பதும் கட்சியை அங்கு கட்டுவதோடு பல மக்களை நம் அமைப்பின் பக்கம் வென்றெடுபதோடு சேர்ந்தது. 

மக்களிடமிருந்து நமக்கான நிதியை நேரடியாக ஒவ்வொரு உறுப்பினரும் சென்று பெருவது புரட்சிகர அனுபவதோடும், கட்சியின் வளர்ச்சிக்கு நமது வருமானத்திலிருந்து ஒரு பகுதியை லெவியாக செலுத்துவதும் புரட்சிகர உணர்வோடு கலந்தது.

சுயமுயற்சி, அற்பணிப்பு, தியாகம், கூட்டுச்செயல்பாடு, தனிநபர் பொறுப்பு, விமர்சனம்-சுயவிமர்சனம், சகமனிதன் மீதான அன்பு, புரட்சியின் மீதான வர்க்க பார்வை, மாற்றத்தை உருவாக்க முடியும் என்ற உளபூர்வ நம்பிக்கை, அநீதிகளுக்கெதிரான கோபம், மக்களோடு மக்களாக  கம்யூனிஸ்டுகளின் வாழ்வு என அனைத்தும் மகத்தானது என்பதை நாம் உள்வாங்கியவராக இருக்க வேண்டும்.

-க.நிருபன் சக்கரவர்த்தி

ஆதார நூல்கள்:-

சிறந்த கம்யூனிஸ்டாவது எப்படி – லியூ சோசி
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) அமைப்பு சட்டம்.

Saturday, May 23, 2020

StandWithJamia

ஜாமியா மிலியா பல்கலைக்கழக மாணவர்களை கைது செய்யாதே..

கைது செய்யப்பட்ட ஜாமியா மிலியா இஸ்லாமிய பல்கலைக்கழக மாணவர்களை விடுதலை செய்..

உபா கருப்புசட்டதில் சிறையில் அடைக்கப்படுள்ள மாணவர்கள், ஆசிரியர், செயற்பாட்டாளர்களை விடுதலை செய்..
செயற்பாட்டாளர்களை வேட்டையாடாதே...

ஊரடங்கை பயன்படுத்தி மாணவர்களை கைது செய்யாதே...

ஜாமியா மாணவர்களை உடனே விடுதலை செய்..

தில்லி காவல்துறையின் அடக்குமுறைகயை கண்டிக்கிறோம்..

CAA எதிர்த்து குரல்கொடுத்த மாணவர்களை ஊரடங்கு காலத்தில் கைது செய்வது நியாயமா?..

ஜாமியா மிலியா பல்கலைக்கழக மாணவர்களை பாதுகாப்போம்..

மாணவர்களை கைது செய்யும் பிஜேபி அரசின் பாசிச நடவடிக்கைகளை வன்மையாக கண்டிக்கிறோம்..

#StandWithJamia

Tuesday, May 19, 2020

மதிகெட்ட அதிபரால் தத்தளிக்கும் பிரேசில்

இந்தியாவின் குடியரசு தினத்திற்கு சிறப்பு விருந்தினாராக வந்த மோடியின் மறுவார்ப்பு பிரேசில் அதிபர் போல்சனரோவின் பைத்தியக்கார நடவடிக்கைகளால் அந்நாடு மிகப்பெரும் நெருக்கடியை சந்தித்து வருகிறது. 

கொரோனா மரணத்தால் சவக்குழிகள் ஓய்வின்றி தோண்டப்படும் சூழல் பிரேசிலில் நிலவுகிறது. 

சமூக விலகலைவிட பொருளாதார புழக்கமே அவசியம் என பேசிய டிரம்பின் திணவெடுத்த ஏகாதிபத்திய வாய்கொழுப்பை அப்படியே பிரதிபலித்த பிரேசில் அதிபர் போல்சனரோ இன்றும் தன் நிலைபாடை திரும்ப பெறாமல் இறுமாப்புடன் தெருவெங்கும் செல்பி எடுத்து அழைகிறார்.

தன் கட்சியின் சொந்த தலைவர்களே போல்சனரோவை விமர்சித்து பதவிகளை ராஜினாமா செய்துவரும் நிலையில். 

நம்மவரை போலவே இவரும் வெறும் வாயில் அறிவிப்புகளால் வடைசுட்டு வருகிறார்.
மேலும் உலகின்நுறையீரல் அமேசானை கொளுத்தியதோடு நில்லாமல் தற்போது அதன் தூய்மையான ஜீவாதார மனித உயிர்களுக்கும் நோய்தொற்று ஏற்பட காரணமாகியுள்ளார்.
#bolsonaro #brazil #COVID19 #corona #pandamic

Wednesday, May 6, 2020

கொரோனாவைவிடக் கொடிய டாஸ்மாக்கை திறக்காதே!

#தமிழகஅரசே!
*டாஸ்மாக்கை திறந்து மக்கள் உயிரை பறிக்காதே!
*கொரோனாவைவிட கொடிய டாஸ்மாக்கை மூடு!

#மத்தியஅரசே!
*மாநிலங்களுக்கு தேவையான நிதியை உடனே வழங்கு!
*பெரும்முதலாளிகளுக்கு அள்ளி வழங்குவதை நிறுத்தி, ஏழைகளின் பசியை போக்கிடு!

CPIM திருப்பூர் மாவட்டக்குழு உறுப்பினர் தோழர் மைதிலி, கிளை செயலாளர் தோழர் கணேசன், தோழர்கள் மங்கலட்சுமி, நாச்சிமுத்து, கண்ணம்மா, மீனாட்சி, சுலோச்சனா, பிரகாஸ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)
தோட்டத்துபாளையம் கிளை - திருப்பூர் (வ)

#DontOpenTASMAC
#குடிகெடுக்கும்_எடப்பாடி

ஊரடங்கு காலத்திலும் மாணவர்கள் மீது பாயும் உபா அடக்குமுறை சட்டம்; மத்திய அரசின் தீராத பாசிச வெறி!

ஊரடங்கு காலத்திலும் மாணவர்கள் மீது பாயும் உபா அடக்குமுறை சட்டம்; மத்திய அரசின் தீராத பாசிச வெறி!

27 வயதான ஜாமியா மிலியா இஸ்லாமியா பல்கலைக்கழக மாணவி சபூரா சர்கார் கடந்த ஏப்ரல் 10தேதி முதல் திகார் மத்திய சிறையில் உபா (யுஏபிஏ-சட்டவிரோத செயல் தடுப்பு சட்டம்) கருப்பு சட்டத்தின் கீழ் அடைக்கப்பட்டுள்ளார். மூன்றுமாத கற்பிணியான சபூராவின் மீது டெல்லி காவல்துறை புனைந்துள்ள குற்றச்சாட்டு என்பது கடந்த பிப்ரவரி இறுதியில் டெல்லி வடகிழக்கு பகுதியில் நடந்த வன்முறைக்கு காரணமாக இருந்தார் என்பதாகும். தற்போது சபூராவை விடுதலை செய்யக்கோரி சமூக வலை தளங்களில் கூட குரல் எழுந்துவருவதை அறிந்திருப்பீர்கள்.

கொரோனாவின் கொடுமைகளுக்கு மத்தியில் இத்தகைய கைது நடவடிக்கைகள் தொடர்ந்தது. கடந்த ஏப்ரல் 14ம் தேதி அண்ணல் அம்பேத்கரின் பிறந்த தினத்தில் மனித உரிமை செயற்பாட்டளர்களும், அம்பெத்கரிய சிந்தனையாளர்களுமான ஆனந்த்டெல்டும்டே, கெளதம்நவ்ளகா ஆகியோரும் இதே சட்டத்தின் கீழ் கைது செயப்பட்டனர். கைது செய்யப்படுவதற்கு எதிராக உலகமுழுவதிலும் எதிர்ப்பு எழுந்தது, ஏன் மாமேதை டாக்டர் அம்பெத்கரின் வீட்டிலும் கூட அவரின் பிறந்த தனதன்று கருப்பு கொடியை ஏற்றி துக்கநாளை அனுசரித்தார்கள். ஆனால் வழக்கம் போல் மத்திய அரசு அம்பெத்கரின் சிலைக்கு மாலை அணிவிப்பதோடு நிறுத்திக்கொண்டது. அவர்களின் கைதுக்கு எதிரான எதிர்ப்பை துளிகூட செவிமடுக்கவில்லை.

அதனை தொடர்ந்து ஏப்ரல் 20ம் தேதி தில்லி காவல்துறை தில்லியின் வடகிழக்கு பகுதியில் நடந்த வன்முறைக்கு காரணமாக இருந்தார்கள் என கூறி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவர் உமர்காலித், ஜாமியா மிலியா இஸ்லாமியா பல்கலைக்கழக மாணவர்கள் குல்பிசா, மீரான் ஹதர், இஸ்லாமிய அமைப்பை சார்ந்த இஸ்ரத் ஜகான், காலித் சைபா மற்றும் ஏப்ரல் 26ல் ஜாமியா பல்கலையின் முன்னாள் மாணவர் கூட்டமைப்பின் தலைவர் சைபா அர் ரஹ்மான், இதே காரணத்திற்காக ஜம்மு காஸ்மீர் காவல்துறையும் மஸ்ரா ஜாரா என்ற ஊடகவியலாளரையும் கைது செய்துள்ளது. மேலும் பல மாணவர்கள் காவல் துறை மற்றும் என்.ஐ.எ என சொல்லக்கூடிய தேசிய புலனாய்வு முகமையின் கண்கானிப்பிலும், கட்டுப்பாட்டிற்குள்ளும் வந்துள்ளனர். அனைத்திந்திய மாணவர் கழகத்தின் தில்லி மாநில தலைவர் கபால் பிரித் அவர்களின் கைபேசி உள்ளிட்ட உடைமைகள் அனைத்தும் பரிசோதனைக்குட்படுத்தி வழக்கு பதிவு செய்துள்ளது. இந்த நடவடிக்கை தொடர்ந்து வரும் சூழலில் மத்திய உள்துறை அமைச்சகம் இது துவக்கம் தான் என கூறியுள்ளது.

திறந்த மடல்
ஆனந்த் டெல்டும்டே அவர்கள் தேசிய புலனாய்வு முகமையால் கைது செய்யப்படும் போது நாட்டு மக்களுக்கு “திறந்த மடல்” எனும் கடிதத்தை வறைந்தார். அதில் மும்பை காவல் துறையாலும், மத்திய அரசின் புலனாய்வு முகமையாலும் எந்த அளவிற்கு நெருக்கடிக்குள்ளானார் என்றும், சுதந்திரமான வாழ்கை பறிக்கப்பட்ட அவர் குடும்ப சூழலையும் விளக்கிவிட்டு இறுதியாக “உங்கள் முறை வருவதற்குள் பேசிவிடுங்கள்” என கூறியிறுந்தார். அவரின் கடிதத்தில் உள்ள உண்மைகள் நாளுக்குநாள் விளங்கி வருகிறது. கைது நடவடிக்கையும் துவக்க நிலையில் இருப்பதாக உள்துறை அமைச்சகம் கூறுவதையும் புறிந்து கொள்ள முடியும்.
பீமாகோரேகான் வன்முறை ஆர்.எஸ்.எஸ். அமைப்பை சார்ந்த மிலின்ட் ஏக்போட்டே, சம்பாஜி பைட்டே ஆகியோர் தலைமையில் எப்படி நடைபெற்றதோ அதே போல் தில்லி வடகிழக்கு பகுதியின் வன்முறையும் பிஜேபி தலைவர் கபில் மிஸ்ரா தலைமையில் நடைபெற்றது. சமீபதில் நடந்து முடிந்த தில்லி மாநில தேர்தலில் வெற்றி பெற்ற எட்டு பிஜேபி சட்ட மன்ற உறுப்பினர்கள் அவர்கள் சார்ந்த தொகுதிவாரியாக பொறுப்பெடுத்து வன்முறையை நிகழ்த்தினர். கோத்ரா சம்பவத்தை தொடர்ந்து குஜராத் முழுவதும் அமித்ஷா காவல்துறையை தனது கட்டுபாட்டில் கொண்டு வந்து எப்படி ஒரு மிகக் கொடூரமான இனப்படுகொலையை நிகழ்த்தினார்களோ அதே போல் தில்லியின் காவல்துறை கபில்மிஸ்ராவின் கட்டுபாட்டுக்குள் வந்தது. பிப்ரவரி 23ல் துவங்கிய வன்முறை தொடர்ந்து அதிகரித்து வந்தது டிரம்பின் வருகை கலவரக்காரர்களுக்குச் சாதகமாக அமைந்தது. அனைத்து ஊடகங்களும் மோடி டிரம்பின் ஒப்பனைமிகு நாடகத்தை செய்தியாக்குவதில் மும்முரமாக இருந்தார்கள். 

இக்கலவரத்தை நிறுத்த வேண்டுமென தில்லியின் வீதிகளில் மாணவர்கள் அலைஅலையாக இரவு பகலும் போராடிக்கொண்டிருந்தார்கள். ஆனால் உரக்கத்தில் இருந்த தில்லி மாநில அரசும், முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலும் விழித்துக் கொண்டு பாதிக்கபட்ட மக்கள் பற்றியோ, கலவர்த்திற்கு காரணமானவர்கள் பற்றியோ எதுவும் கூறாமல் உள்துறை அமைச்சர் அமித்ஷாவிற்கு இராணுவத்தை வரவழைக்க கோரி கோரிக்கைவிடுதார். இஸ்லாமியர்கள் மீது திட்டமிட்டு நடத்தப்பட்ட இந்த வன்முறையில் 54 பேர் உயிரிழந்ததாகவும், 200 மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் மத்திய அரசின் அறிக்கை சொல்கிறது. இன்று வரை பலர் வீடுகளை உடைமைகளை இழந்து நடுத்தெருவில் ஆடைகள்கூட இல்லாமல் தவிக்கும் அவலம் நீடிக்கிறது. 

பாதிக்கப்பட்டவர்களையே தண்டிப்பது
இவ்வன்முறைக்கு காரணமென கூறி தில்லி காவல்துறை 800 பேர்வரை கைது செய்து விசாரித்து வந்தது அந்த விசாரனைகளின் அடிப்படையிலேயே தற்போது மாணவர்களும், பேராசிரியர்கள் மற்றும் ஊடகவியலாளர்களும் கைது செய்யப்படுவதாக தில்லி காவல்துறை கூறியுள்ளது. ஜேஎன்யு பல்கலைக்கழக வன்முறையில் பாதிக்கப்பட்ட மாணவர் பேரவை தலைவர் ஆயிசி கோஸ் மீது எப்படி வழக்கு புனைந்ததோ அதே வகையில் தான் தாக்குதலுக்குள்ளான இஸ்லாமிய அப்பாவிகளையும், இஸ்லாமிய மாணவர்களையுமே காரணம் என கைது செய்துள்ளது.
காலனிய காலத்தில் ஆங்கிலேயர்களால் சுதந்திர போராட்டத்தை ஒடுக்க கொண்டுவரபட்ட பல கருப்பு சட்டங்களை போல் இன்றும் பல்வேறு வகையில் இந்திய அரசு அச்சட்டங்களை தொடர்ந்து வருகிறது. 1967ல் கொண்டு வரபட்ட இந்த உபா- சட்டவிரோத செயல் தடுப்பு சட்டம் 2004, 2008, 2012 காலகட்டங்களில் பல்வேறு மாற்றங்களுக்கு உள்ளாக்கப்பட்டு பொடா, தடா சட்டத்திற்கு மாற்றாகவே உருவெடுத்தது. 2019ல் இரண்டாவது முறையாக பிஜேபி அரசு பொறுப்புக்கு வந்த பிறகு என்.ஐ.ஏவின் கரத்தை வலுசேர்க்க உபா சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்பட்டது. மக்களவை, மாநிலங்களவை என இரு அவைகளிலும் இச்சட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கட்சி உள்ளிட்ட இடதுசாரி மற்றும் இஸ்லாமிய கட்சிகளின் எம்பிக்கள் மட்டுமே எதிர்ப்பு தெரிவித்தனர்.

இச்சட்டத்தின் பிரிவு 35-ன் படி எந்த அமைப்பையும் தீவிரவாத அமைப்பாக அறிவித்து அதன் அனைத்து உறுப்பினர்களையும் தீவிரவாதிகளாக கருதி கைது செய்ய முடியும். மேலும் அவ்வாறு தடைசெய்யப்படும் அமைப்பின் துண்டு பிரசுரங்கள், வெளியீடுகளை வைத்திருந்தாலோ அல்லது ஆதரவாளராக இருந்தாலோ கைது செய்யப்படலாம். சில வழக்குகளில் மார்க்ஸ் எங்கல்சின் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை வைத்திருந்ததற்காக கூட கைது செய்யப்பட்டுள்ளனர். அந்தவகையில் எந்த இலக்கியத்தையும் தடைசெய்யப்பட்டதாக அறிவிக்க முடியும். இந்த சட்டத்தின் பிரிவு 43-ன் படி கைது செய்யப்பட்டவர்களை 30 நாட்கள் வரை போலீஸ் காவலிலும், 90 நாட்கள் வரை எவ்வித விசாரணையுமின்றி நீதிமன்ற காவலிலும், 180 நாட்கள் வரை குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யாமல் சிறையிலும் அடைத்து வைக்க முடியும். தனி நீதிமன்றத்தில் எந்தவித வெளிப்படைத் தன்மையுமின்றி நடைபெறும் விசாரணையில் குற்றமென நிரூபிக்கப்பட்டால் 7 ஆண்டுகள் வரை தண்டனை வழங்கப்படும். மேலும் அதே 43-ன் பிரிவின் கீழ் கைது செய்யப்பட்டவர் ஜாமினில் வெளிவருவது இயலாத காரியமாகும். 35-40 வரை உள்ள எந்த பிரிவும் எது தீவிரவாதம் என குறிப்பிடாததால் எந்த அமைப்பையும், தனிநபரையும் இச்சட்டத்தின் கீழ் சட்டவிரோதமானது எனக்கூற முடியும்.  
இச்சட்ட திருத்தம் கொண்டு வரும்போது மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்கள் நாடளுமன்றத்தில் “துப்பாக்கிகள் வன்முறைகளை உருவாக்குவதில்லை, அத்தகைய இலக்கியங்களே வன்முறையை உருவாக்குகிறது” என்றார். ஆர்.எஸ்.எஸ். சனாதனவாதிகளின் சிந்தனை மறுப்பும், இலக்கியங்கள், அறிவு மீதான வன்மத்தையும் இதிலிருந்து  புரிந்துகொள்ள முடியும். எனவே தான் இவர்கள் எழுத்தாளர்களை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றவர்களையும், கலவரத்தில் போலீசின் உதவியோடு மக்களையும் மாணவர்களையும் நோக்கி துப்பாக்கியால் சுட்ட ஆர்.எஸ்.எஸ். ஆட்களையும் தவிர்த்து பாதிக்கப்பட்டவர்களையே கைதுசெய்து வருகிறது. 

சர்வதேச மனித உரிமைக்கு எதிரானதும், இந்திய அரசியல் அமைப்பு சட்டம் பிரிவு 19 வழங்கியுள்ள உரிமைகளுக்கு எதிரான இச்சட்டத்தை விமர்சிக்கும் முன்னாள் உயர் நீதிமன்ற நீதிபதி அரிபரந்தாமன் அவர்கள் “இச்சட்டம் தனிநபர் சுதந்திரத்திற்கு மட்டுமல்ல அடிப்படை உரிமைகளுக்கே எதிரானது. சகல அதிகாரங்களையும் அரசு தன்வயப்படுத்துவது ஆபத்தான போக்கு. இது, மாற்றுக்கருத்து கொண்ட யாரையெல்லாம் அரசு தனக்கு எதிரியாக நினைக்கிறதோ, அவர்களை ஒடுக்கவே பயன்படும். அரசே தீர்பளிக்கும் அதிகாரத்தை எடுத்துக்கொண்டு செயல்படுவது அரசியலமைப்பின் அதிகாரப் பகிர்வைச் சீர்குலைப்பதோடு மட்டுமல்லாமல் குற்றம் நிரூபிக்கப்படும் வரை நிரபராதி என்பதை ‘Guilty unitil proven innocent’ என நிரபராதியே நிரூபிக்கும் வரை குற்றவாளி என்பது சட்ட விசாரணையின் அடிப்படையையே மாற்றுவதாக அமைகிறது” என்கிறார். எனவே இந்திய மக்களின் ஜனநாயக உரிமைக்கு எதிரான இந்த காலனியகால அடக்குமுறை சட்டத்தை திரும்பபெறுவதோடு, தொடர் கைது நடவடிக்கைகளை நிறுத்த வேண்டும். இதுவரை கைது செய்யப்பட்ட மாணவர்கள், பேராசிரியர், ஊடகவியளாலர்கள் மற்றும் ஆனந்த் டெல்டும்டே, கெளதம் நவ்லகா போன்ற எழுத்தாளர்களையும் விடுதலை செய்ய வேண்டும்.

04.05.2020
க.நிருபன் சக்கரவர்த்தி
மாநில துணைத்தலைவர்
இந்திய மாணவர் சங்கம்

Tuesday, May 5, 2020

பண்டிதர் அயோத்திதாசர்

பண்டிதர் அயோத்திதாசர் நினைவு தினம் 
(1845 மே 20 - 1914 மே 5)

தமிழ் இலக்கிய வரலாற்றில் சமண பெளத்த தத்துவங்களின்  பங்களிப்பு குறித்து தன் ஆய்வுகள் மூலம் பல விவாதங்களை துவங்கி வைத்தார். 

"சாதியக் கொடுமை என்பது சனாதனவாதிகளால் இடையில் திணிக்கப்பட்டது என்றும். தீண்டாமைக் கொடுமைகள் அதனால் பயனடைபவர்களால் பேணி பாதுகாக்கபடுகிறதெனவும்" நவீன தமிழ் இலக்கிய வரலாற்றில் பெரும்பங்காற்றியுள்ள பண்டிதர் அயோத்தி தாசரின் நினைவை போற்றுவோம்.
#SFI #SFI50

Sunday, May 3, 2020

சோசலிசமே தீர்வு

👿ஏகாதிபத்திய 🤑இலாபவெறியும், ஆக்கிரமிப்பு⚔💣 போர்களும் உலக மக்களை வறுமை, வேலையின்மை, பசிக் கொடுமைகளுக்கு ஆளாகி நாடற்றவர்களாக நடுத்தெருவில் நிற்க வைத்துள்ளது.😰  

இனம், மொழி, மதம், தேசம் என பேசும் 👿பாசிச அரசுகள் தன் சொந்த மக்களை காப்பாற்றாமல் அரசியலால் வேட்டையாடி குளிர்காய்கிறது.

📚பொதுக்கல்வி, பொது மருத்துவம், 💊💉பொது சுகாதாரம் என நாட்டின் வளங்களை மக்களுக்கானதாக பயன்படுத்தும் 🤩சோசலிச கட்டமைப்பை நோக்கி வளரும் நாடுகள் தன் மக்களை பாதுகாத்துள்ளது.🤗

உலக மக்களை பாதுகாக்க *★சோசலிசமே ஒரே தீர்வு...🚩*

உலகை அதிரவைத்த மக்கள் சீனத்தின்செயற்கை நுண்ணறிவு டீப் சீக் (Deep seek)

உலகை அதிரவைத்த மக்கள் சீனத்தின்  செயற்கை நுண்ணறிவு டீப் சீக் (Deep seek) செயற்கை நுண்ணறிவு (artificial intelligence) துறையில் பேராதிக்கம் செ...