Showing posts with label sempu. Show all posts
Showing posts with label sempu. Show all posts

Monday, March 30, 2020

வழிகாட்டியாய் இரு துருவ நட்சத்திரங்கள்...★★

*🚩🚩வழிகாட்டியாய் 
இரு துருவ நட்சத்திரங்கள்...★★*
          
 *-க.வி.ஸ்ரீபத்*
     1981 மார்ச் 31 மதுரை தியாகராஜர் பொறியியல் கல்லூரி வளாகத்திலும், அதை சுற்றியுள்ள பகுதியிலும் ஒரு அசாதாரணமான பதற்றம் நிலவியது. மாணவர் சங்க தலைவர்கள் இருவர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டனர் என்ற செய்தி கண்ணகி வைத்த தீயை போல மதுரை மாநகர் முழுவதும் பரவி ஆவேசக் அனலை மூட்டியது. வெட்டி வீழ்த்தப்பட்ட அந்த இரண்டு மாவீரர்களின் பெயர்கள் சோமசுந்தரம் -செம்புலிங்கம். யார் இந்த மாணவர்கள்? எதற்காக நிகழ்ந்தது இந்த படுகொலை?

         தூத்துக்குடி மாவட்டம் எப்போதும் வென்றான் அருகிலுள்ள துரைசாமியாபுரம் என்ற கிராமத்தில் சுப்பையா என்பவருக்கு மகனாகப் பிறந்தவர் சோமசுந்தரம். அதே தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள போல்டன்புரத்தில் மாரிமுத்து என்பவருக்கு மகனாகப் பிறந்தவர் செம்புலிங்கம். இருவருமே மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தவர்கள். தங்கள் பள்ளிப் படிப்பை முடித்துவிட்டு, பல தலைமுறைகளின் கனவுகளை சுமந்து கொண்டு ஆண்டாண்டு காலமாய் ஒடுக்கப்பட்ட தங்கள் சமூகத்தின் முதல் தலைமுறை பட்டதாரிகளாக மதுரை தியாகராஜர் பொறியியல் கல்லூரியில் அடியெடுத்து வைத்தனர். ஆனால் கல்லூரிக்குள் இருந்த சூழல் இவர்களது கனவுகளை கானல்நீராக போகும்படி செய்து கொண்டிருந்தது. பிறந்தது முதல் தாங்கள் வசித்த பகுதியில் என்னென்ன சாதிய ஒடுக்குமுறைகளையும் ஏற்றத்தாழ்வுகளையும் சந்தித்து வந்தார்களோ, அதே ஒடுக்குமுறைகளையும் ஏற்றத்தாழ்வுகளையும் அவர்கள் கல்லூரிக்குள்ளும் சந்திக்க நேர்ந்தது. தாழ்த்தப்பட்ட மாணவர்கள் சக மாணவர்களோடு இயல்பாக பேசி பழக முடியாது. குடிநீர் குழாயை தொட்டு அதில் நீர் அருந்த முடியாது என்றெல்லாம் சொல்லொணாக் கொடுமைகளை அந்த மாணவர்கள் அனுபவித்து வந்தனர். இத்தகைய அடக்குமுறைகளுக்கு எதிராகவும், கல்லூரியில் மாணவர்கள் பெரும் பிரச்சனையாக இருந்த ராகிங் கொடுமைக்கு எதிராகவும் களம் கண்டது இந்திய மாணவர் சங்கம்.

         இந்திய மாணவர் சங்கத்தின் செயல்பாடுகளாலும் போராட்டங்களாலும் பெரிதும் ஈர்க்கப்பட்ட சோமசுந்தரமும் செம்புலிங்கம் எஸ்.எப்.ஐ யில் தங்களை இணைத்துக் கொண்டனர் அதுவரை சோமசுந்தரம் செம்புலிங்கம் என்று அறியப்பட்டவர்கள் அனைத்து மாணவ தோழர்களாலும் சோமு-செம்பு என பாசத்தோடு அழைக்கப்பட்டனர்.

          வெகுவிரைவில் எஸ்.எப்.ஐ தியாகராஜர் பொறியியல் கல்லூரியின் கிளைச் செயலாளராக தோழர் சோமு தேர்ந்தெடுக்கப்பட்டார். மாணவர் விடுதியில் அடிப்படை வசதிகள் கேட்டும், உயர்த்தப்பட்ட உணவு கட்டணத்தை குறைப்பதற்காகவும், கல்லூரி நிர்வாகத்தின் ஊழல், முறைகேடுகளுக்கு எதிராகவும், அடக்குமுறைகளுக்கு எதிராகவும் என இந்திய மாணவர் சங்கம் தலைமையில்  வெண்பதாகையின் கீழ் சாதிய வேறுபாடுகளைக் கடந்து நூற்றுக்கணக்கான மாணவர்கள் அணிதிரண்டு வீரியமிக்க போராட்டங்களை நடத்தி வெற்றி கண்டனர். அதன் தொடர்ச்சியாக 1980 ஆம் ஆண்டு நடைபெற்ற கல்லூரி மாணவர் பேரவை தேர்தலில் எஸ்.எப்.ஐ தலைமையில் உருவான 'அன்பு அணி' மகத்தான வெற்றி பெற்றது மாணவர் பேரவையின் தலைவராக ரவீந்திரனும் செயலாளராக செம்புலிங்கமும் தேர்வு செய்யப்பட்டனர்.

          இந்திய மாணவர் சங்கத்தின் தொடர்ச்சியான செயல்பாடுகளும் அதற்கு மாணவர்கள் மத்தியில் இருந்த ஆதரவும் தங்கள் அதிகார கோட்டையை தகர்ப்பதற்கான சம்மட்டி அடிகளாக விழுவதை ஆதிக்க சக்திகள் உணர துவங்கினர். மாணவர்களின் பிரச்சனைகளுக்காகவும், ஜனநாயக  உரிமைகளுக்காகவும் போராட்டத்தை தொடர்ந்து முன்னெடுத்த எஸ்.எப்.ஐ-க்கும் கல்லூரி நிர்வாகத்திற்கும் மோதல்கள் ஏற்படத்தொடங்கின.

          இதற்கிடையில் கல்லூரி தேர்வு விடுமுறை நாட்களில் தங்கள் சொந்த கிராமமான துரைசாமியாபுரத்திற்கு சென்ற சோமு அக்கிராமத்தின் அடிப்படை பிரச்சினைகளை  தீர்ப்பதற்காக இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தை துவக்கி அவர்களின்  முதல் கோரிக்கையாக  கிராமத்திற்கு தார் சாலை அமைக்க கோரி மக்களைத் திரட்டி போராட்டம் நடத்தி அதில் வெற்றியும் கண்டார்.

          இந்திய மாணவர் சங்கத்தின் இத்தகைய செயல்பாடுகளை இனியும் விட்டு வைத்தால், தங்கள் ஆதிக்க கோட்டை அடியோடு சரிந்து விடும் என்பதை உணர்ந்து எஸ்.எப்.ஐ யின்  செயல்பாடுகளை தடுக்க நினைத்த அவர்கள், யாரைத் தாக்கினால் சங்கத்தின் செயல்பாடுகள் முடங்கும், போராட்டங்கள் ஒடுங்கும் என்று நினைத்தார்களோ அந்த தோழர்களை அவ்வப்போது தாக்க துவங்கினர். இத்தகைய தாக்குதல்களின் நீட்சியாகத்தான் 1981ஆம் ஆண்டு மார்ச் 31ஆம் தேதி இரவு அந்த கொடூர சம்பவம் நிகழ்ந்தேறியது.

          அன்று இரவு அடியாட்களுடன் விடுதிக்குள் நுழைந்த ஆதிக்க சக்திகள் அங்கிருந்த மாணவர்களை தாக்கி அவர்களின் அறைகளை சூறையாடி தோழர் செம்புலிங்கத்தை வெட்டி வீழ்த்தினர். இச்சம்பவத்தைக் கேள்விப்பட்டு திரையரங்கத்தில் இருந்து வரும் தோழர் சோமு கத்தியால் குத்தப்பட்டு உயிரிழக்கிறார்.

          மறுநாள் ஒட்டுமொத்த மாணவ சமுதாயமும் ஆவேச அலையில் கொதித்து எழுந்தது. பல்லாயிரக்கணக்கான மாணவர்களும் பொதுமக்களும் பங்கேற்ற இறுதி ஊர்வலத்தோடு, பின்னாளில் எழப்போகும் மகத்தான புரட்சியின் வீரிய வித்துக்களாக தோழர்கள் சோமுவும் செம்புவும் விதைக்கப்பட்டனர்.

          எஸ்.எப்.ஐ-யை அழிப்பதாக நினைத்து யாரை வெட்டி வீழ்த்தினார்களோ, அவர்கள் இன்றும் வாழ்கிறார்கள் என்பதையும், என்றும் வாழ்வார்கள் என்பதையும் அந்த முட்டாள்கள் அறிந்திருக்க வாய்ப்பில்லை. இதோ இந்திய மாணவர் சங்கத்தின் ஒவ்வொரு தோழரும் சோமு -செம்புவின் நினைவையும் இலட்சியத்தையும் நெஞ்சில் சுமந்து, அவர்கள் உயர்த்திப்பிடித்த “சுதந்திரம்-ஜனநாயகம்-சோசலிசம்” என்கின்ற லட்சிய பதாகையை உயர்த்திப் பிடித்து, சாதிய, மதவாதத்திற்கு எதிராகவும், கல்வி நிலைய ஜனநாயக உரிமைகளுக்காகவும், தொடர்ந்து  களமாடி வருகின்றனர்.

          அன்று சோமுவையும் செம்புவையும் கொன்ற சாதி ஆதிக்க வெறி இன்று நீட் தேர்வு வடிவத்தில் அனிதாவை கொன்றது. அன்று தியாகராஜர் பொறியியல் கல்லூரியில் நிலவிய சாதிய பாகுபாடுகள்  தேசத்தின் தலை சிறந்த  கல்வி நிலையம் என்று அறியப்படக்கூடிய சென்னை ஐ.ஐ.டி-யில்  இன்றும் நீடிக்கிறது. ஆக, சோமுவும் செம்புவும் முன்னெடுத்த போராட்டத்தை முன்பைவிட வலுவாக இன்று முன்னெடுக்க வேண்டிய தேவை உள்ளது.

          சாதியின் பெயராலும், மதத்தின் பெயராலும் இந்திய தேசத்தின் இறையாண்மையை கேள்விக்குறியாக்கி, நாட்டை துண்டாட துடிக்கும் பாசிச பிஜேபி ஆட்சியை விரட்டியடித்திட, மத்தியில் மதச்சார்பற்ற அரசாங்கத்தை உருவாக்கிட, இந்திய நாட்டின் பொதுக் கல்வியை பாதுகாத்திட, மாணவர்களின் ஜனநாயக உரிமைகளை மீட்டெடுத்திட எஸ்.எப்.ஐ தொடர்ந்து நடத்தும் போராட்டங்களுக்கு வழிகாட்டும் துருவ நட்சத்திரங்களாக தோழர்கள் சோமுவும் செம்புவும் இன்றும் என்றும் திகழ்வார்கள். அவர்கள் தரும் வெளிச்சத்தைக் கொண்டு சாதி மத இருளகற்றி இந்திய தேசத்தை பாதுகாத்திட உறுதியேற்போம்...

*(மார்ச் 31, 2020 தோழர்கள் சோமு-செம்பு வின் 39-ம் ஆண்டு நினைவு தினம்)*

#SFI #SFI50 #SOMU #SEMPU

உலகை அதிரவைத்த மக்கள் சீனத்தின்செயற்கை நுண்ணறிவு டீப் சீக் (Deep seek)

உலகை அதிரவைத்த மக்கள் சீனத்தின்  செயற்கை நுண்ணறிவு டீப் சீக் (Deep seek) செயற்கை நுண்ணறிவு (artificial intelligence) துறையில் பேராதிக்கம் செ...