Saturday, March 9, 2019

சர்வதேச பொருளாதார சூழல் - 2018


சர்வதேச நிதி மூலதனத்தால் தலைமை தாங்கப்படும் நவீனதாராளமய ஆட்சி முறையின் கீழ்,
வங்கிகளும், நிதி நிறுவனங்களும் பெருமளவுக்குப் பணத்தைக் குவித்து வைத்துள்ளன.  உள்நாட்டில்
கிராக்கி வளர்ச்சியடையாததால்,  அவற்றால் தாம் குவித்துள்ள பணத்தை சந்தைக்கு விடுவிக்க முடியாது.  தி
ஃபைனான்சியல் டைம்ஸ் கூறியுள்ளபடி உலகின் மிகப்பெரிய மத்திய வங்கிகளாக விளங்கும் – தி
அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ், தி ஐரோப்பியன் மத்திய வங்கி, தி பேங்க் ஆப் ஜப்பான், தி பேங்க் ஆப்
இங்கிலாந்து மற்றும் தி ஸ்விஸ் மற்றும் ஸ்வீடிஷ் சென்ட்ரல் வங்கிகள் – இப்போது 15 டிரில்லியன்
டாலர்களுக்கும் மேல் சொத்துக்களாக அல்லது 2008 க்கு முந்தைய பொருளாதார மந்த நெருக்கடிக்
காலத்திலிருந்ததை விட நான்கு மடங்கு அதிகமான தொகையை இருப்பு வைத்திருக்கின்றன.  இது சொத்து
விலைகளை உயர்வாக வைத்திருக்கும் அதே வேளையில், பொதுவான பணவீக்கத்தைக் குறைவாக
வைத்திருக்கிறது.  ‘நீர்க்குமிழி’ மீண்டும் வெடித்து மற்றொரு நிதி நெருக்கடியாக முற்றும் நிலைக்கு இது
இட்டுச்சென்று கொண்டிருக்கிறது. ஒட்டுமொத்தத்தில் சர்வதேச நிதி மூலதனத்தால் தலைமை தாங்கப்படும்
உலகப் பொருளாதாரம், மற்றொரு நிதி நெருக்கடியைத் துரிதப்படுத்திடக் கூடிய விதத்தில்,  நிலையற்ற
தன்மையுடன் காணப்படுகிறது.
2017 கிரெடிட் சுசெ (Credit Suisse) வெளியிட்டுள்ள தகவல்களின்படி, உலக மக்கள் தொகையில் 2.7
சதவீதமாக இருப்பவர்கள் உலக வருவாயில் 70.1 சதவீதத்தைப் பெற்றிருக்கிறார்கள்.  அதே சமயம்
மறுபுறத்தில், உலக மக்கள் தொகையில் 85.6 சதவீதத்தினர் உலக வருவாயில் வெறும் 8.6 சதவீத
அளவிற்கே தங்கள் பங்காகப் பெற்றிருக்கிறார்கள்.
2018ஆம் ஆண்டு உலக ஏற்றத்தாழ்வு அறிக்கையின்படி, 1980 இலிருந்து உலகில் உச்சத்தில் உள்ள
1 சதவீதத்தினரின் வருமானம், அடிமட்டத்தில் உள்ள 50 சதவீதத்தினர் பெற்றிருக்கின்ற வருமானத்தைவிட
இரு மடங்கு அளவாகும்.      உலக அளவில் அடிமட்டத்தில் உள்ள 50 சதவீதத்தினருக்கும், உச்சத்தில்
உள்ள 1 சதவீதத்தினருக்கும் இடையேயான தனிநபர்களின் வருமானத்தின் வளர்ச்சி மந்தமாக இருக்கிறது
அல்லது பூஜ்யமாக இருக்கிறது. அதிகரித்துள்ள ஏற்றத்தாழ்வுகளின் விகிதம் குறித்து உலகின் பல நாடுகள்
குறித்து ஆய்வு செய்துள்ள இந்த அறிக்கையானது, 1980 க்கும் 2015 க்கும் இடையிலான  நவீன தாராளமய
சீர்திருத்தங்கள் அமல்படுத்தப்பட்ட காலத்தில், இந்தியாவில் உச்சத்தில் உள்ள 10 சதவீதத்தினரின்
வருமானத்தின் பங்கு 30 சதத்திலிருந்து 60 சதம் என்கிற அளவுக்குக் கூர்மையாக அதிகரித்திருப்பதைக்
காட்டுகிறது.
உலகமக்களில் பெரும்பான்மையான மக்கள் சந்தித்து வரும் கடுமையானவறுமை மேலும்மேலும்
அதிகரிப்பதும், உலகப் பணக்காரர்கள் மேலும்மேலும் பணக்காரர்களாக செல்வசெழிப்பில் திளைப்பதும்
அதிகரித்து வருகிறது.

சோசலிச நாடுகள்
சீனாவின் பொருளாதாரம் சராசரியாக ஆண்டு விகிதம் 7.2 சதவீதம் என்ற
அளவிற்கு விரிவடைந்திருப்பதுடன், தன் நிலையை உலகின் இரண்டாவது பெரிய
பொருளாதார நாடு என்ற அளவில் தக்க வைத்துக்கொண்டிருக்கிறது. அது, உலகப்
பொருளாதார வளர்ச்சியில் 30 சதவீதத்திற்கும் அதிகமான அளவிற்குத் தன்

பங்களிப்பினைச் செய்திருக்கிறது.  உலகப் பொருளாதார நெருக்கடியால்
ஏற்படுத்தப்பட்ட இன்னல்களிலிருந்து மீள்வதற்காக சீனாவால் கொண்டுவரப்பட்ட
முக்கியமான மாற்றம் என்னவென்றால் அது உள்நாட்டுத் தேவை மற்றும் நுகர்வை
அதிகப்படுத்துவதற்குக் கவனம் செலுத்தியதாகும். இதனை
உத்தரவாதப்படுத்துவதற்காக,  அது குறைந்தபட்ச ஊதியங்களை படிப்படியாக
உயர்த்தியதுடன், வறுமையின் பிடியிலிருந்து 6 கோடி பேருக்கும் அதிகமானவர்களை
விடுவித்திட நடவடிக்கைகள் எடுத்திருப்பதாகும்.   ஒவ்வோராண்டும் நகர்ப்புறங்களில்
சராசரியாக 1 கோடியே 30 லட்சம் வேலைகள் உருவாக்கப்பட்டு
வேலைவாய்ப்பிற்கான வளர்ச்சியைப் பதிவு செய்திருக்கிறது.
சீனாவின் வளர்ந்துவரும் பொருளாதார வல்லமை, சர்வதேச உறவுகளில்
அபரிமிதமான தாக்கத்தை ஏற்படுத்திக்கொண்டிருக்கிறது. பழைய பட்டு
சாலையையும் (Silk road), கடல்வழி வர்த்தக மார்க்கத்தையும் பின்பற்றி, சீனா
முன்முயற்சி எடுத்துள்ள ஒரு கச்சை ஒரு சாலை (One Belt One Road) திட்டத்துடன்
பல நாடுகள் தங்களை இணைத்துக் கொண்டிருக்கின்றன. சீனாவால்
முன்மொழியப்பட்ட ஆசியன் உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி (The Asian Infrastructure
Investment Bank)யும் சுமார் 56 நாடுகளால் வரவேற்கப்பட்டிருக்கிறது. கிரேட் பிரிட்டன்,
ஆஸ்திரேலியா, தென் கொரியா போன்ற அமெரிக்காவின் நெருங்கிய கூட்டணி
நாடுகள் கூட இந்த முன்முயற்சியுடன் தங்களை இணைத்துக் கொண்டிருக்கின்றன.
சீனாவின் அதிகரித்துவரும் வல்லமைக்கு ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு, பிரிக்ஸ்
போன்ற பலதரப்பு அமைப்புகள் வலுவடைந்து வருவதும் சாட்சியமாகும். சர்வதேச
உறவுகளில் சீனாவின் வளர்ந்துவரும் நிலையைப் பார்த்து  எச்சரிக்கையடைந்துள்ள
அமெரிக்கா சீனாவைக் கட்டுக்குள் வைத்திருப்பதற்கான முயற்சிகளை
முடுக்கிவிட்டிருக்கிறது. தென் சீனக் கடலின் விவகாரங்கள், கொரிய தீபகற்பம்
மற்றும் ஆசியா-பசிபிக் பிராந்தியத்தில் அது தலையிட்டுக் கொண்டிருக்கிறது.
வரவிருக்கும் நாட்களில், ஏகாதிபத்திய அமெரிக்காவிற்கும், சோசலிஸ்ட் சீனாவிற்கும்
இடையே  உக்கிரமான போட்டியைப் பார்த்திட இருக்கிறோம்.
வியட்நாம் இப்பிராந்தியத்தில் மிக வேகமாக வளர்ந்து வரும் நாடுகளில்
ஒன்றாக நீடிப்பது தொடர்கிறது. இக்காலகட்டத்தில் அதன் பொருளாதாரம் சராசரியாக
6.3 சதவீதம் என்ற அளவில் வளர்ந்துள்ளது. இக்காலத்தில் மக்களின் தனிநபர் ஆண்டு
வருமானம் அதிகரித்திருந்த போதிலும், நகரங்களுக்கும் தொலைதூர
குக்கிராமங்களுக்கும் இடையிலான சமத்துவமின்மைகளும், வேறுபாடுகளும்
அதிகரித்துக்கொண்டிருப்பதையும் வியட்நாமிய அரசு உணர்ந்து செயலாற்றி
வருகிறது. மேலும் சீனாவுடனான தென் சீனக் கடலின் சில சச்சரவுகளை சரிசெய்திட
நடவடிக்கை எடுத்துவருகிறது.
கியூபா அமெரிக்காவினால் மிகவும் நேர்மையற்ற முறையிலும்
மனிதாபிமானமற்ற முறையிலும்  திணிக்கப்பட்டுள்ள பொருளாதாரத் தடையின்
காரணமாக பொருளாதாரம் பாதிப்புக்குள்ளாகியிருப்பது தொடர்கிறது. ஒபாமாவால்
இருநாடுகளுக்கும் இடையே தூதரக உறவுகளை மீண்டும் ஏற்படுத்திக் கொள்வது
போன்று மேற்கொள்ளப்பட்ட ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகள் பலவற்றையும்

டொனால்டு டிரம்ப் கைவிடவும், மாறாக, அந்நாட்டின் மீதான பொருளாதாரத்
தடையை தீவிரப்படுத்தவும்  தொடங்கியிருக்கிறார். வெனிசுலா போன்று லத்தீன்
அமெரிக்க நாடுகள் எதிர்கொள்ளும் பொருளாதாரச் சிரமங்கள் கியூப
பொருளாதாரத்தின் மீதும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. அடிக்கடி நிகழும் கடும்
சூறாவளி மற்றும் புயல் போன்ற இயற்கைப் பேரிடர்களும் பொருளாதாரத்தின் மீது
கடுமையானமுறையில் பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன.
மேலும், நவீன தாராளமயக் கொள்கைகள் நாட்டின் பொதுச் சொத்துக்களிலும்,
சுகாதாரம், கல்வி மற்றும் சமூகப் பாதுகாப்பு போன்ற சமூக சேவைகளில்
தனியார்மயத்தை ஊக்குவிக்கும் வகையில் அமைந்திருப்பதால் கியூப சோசலிசத்தின்
கீழ் அக்கொள்கைகளை ஒருபோதும் பிரயோகித்திட மாட்டோம் என்றும் மேலும்,
தேசப் பொருளாதாரத்தின் பிரதான வடிவமாக அடிப்படை உற்பத்திச் சாதனங்களின்
உடைமை உரிமை மக்களிடம் இருப்பது தொடரும் என்றும் கியூப அரசு
தெரிவித்துள்ளது. மாபெரும் தலைவர் பிடல்காஸ்ட்ரோவை தொடர்ந்து, ரால்
காஸ்ட்ரோவும் அவரை தொடர்ந்து மிகையில் டைஸ் கனாலும் அதிபராகியுள்ளார்.
கொரியா ஜனநாயக மக்கள் குடியரசு (DPRK – Democratic People’s Republic of Korea):
அமெரிக்காவின் அச்சுறுத்தலைப் புறந்தள்ளிவிட்டு, கொரியா ஜனநாயக மக்கள்
குடியரசு, தென்கொரியாவுடனான நட்பை கிம் ஜோங் உன், மூன்சேவுடன் கைகுலுக்கி
புதுப்பித்தது. அமெரிக்காவும் சிங்கப்பூர் வரை வந்து வடகொரியாவுடன்
ஒருமணிநேரம் பேச்சுவார்த்தை நடத்தி இருப்பது உலக அரங்கில் முக்கிய நிகழ்வாக
பார்க்கப்படுகிறது.
மேலும் லாவோஸ், நேபாளில் ஏற்பட்டுள்ள மாற்றம், வெனிசுவேலாவில்
மதுராவின் பெருபான்மையான வெற்றி என சோஷலிச பாதைக்கான வளர்ச்சி
தவிர்க்கமுடியாமல் முன்னேறி வருகிறது.
அண்டைநாடுகள்
அண்டை நாடுகளை பொறுத்தவரை இந்தியா உருப்படியான எந்த ஒரு நல்ல உறவையும்
அண்டை நாட்டு மக்களிடம் பேணவில்லை. தான் ஆட்சி பொறுப்பிற்கு வரவேண்டும் என்பதற்காக
பாகிஸ்தானை சகட்டு மேனிக்கு தூற்றுவதும், நேபாள், பூடான் மீது ஆதிக்கம் செலுத்த முயலுவதும்,
வங்கதேச அகதிகள், மியான்மர் நாட்டில் ரோஹிங்கியா இஸ்லாமிய அகதிகள் குறித்து முரட்டுத்தனமான
அணுகுமுறையும், இலங்கை தமிழ் பிரச்சனையை வேடிக்கை பார்த்ததுமே வரலாறாக உள்ளது. சீனாவுடன்
எல்லை பிரச்சனையை இன்றுவரை தீர்வுக்கான ஒருநல்ல முடிவை எடுத்தபாடில்லை. ஈரானின் எண்ணை
பைப்லைன் அமைப்பது, சீனாவின் “ஒன் பெல்ட் ஒன் ரோடு” திட்டம் போன்றவற்றை அமெரிக்க
நலனிலிருந்து இந்தியா எதிர்த்துவருகிறது. பாகிஸ்தானில் தற்போது தேர்தல் நடந்து இம்ரான்கான்
பெரும்பான்மையாக வென்று ஆட்சி அமைத்துள்ளார். ஒரு கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் இத்தேர்தலில்
வென்றுள்ளது மகிழ்ச்சியான விஷயமாகும்.

இறுதியாக ...
உலக முதலாளித்துவ பொருளாதார நெருக்கடியின் பின்னணியில், அமெரிக்கா
தலைமையிலான ஏகாதிபத்தியத்தின் தீவிரத்தாக்குதல் அதிகரித்திருக்கிறது.
அமெரிக்காவின் இராணுவத் தலையீடுகள் அல்லது நேட்டோ தலைமையிலான
இராணுவத் தலையீடுகள் உலகின் பலபகுதிகளில், குறிப்பாக மத்திய ஆசியா/வட

ஆப்பிரிக்கா மற்றும் லத்தீன் அமெரிக்காவில் தொடர்கின்றன. அமெரிக்கா – இஸ்ரேல்
இணைந்து மத்தியக் கிழக்கு நாடுகளின் நிகழ்ச்சிப்போக்குகளில் தலையிடுவது
தொடர்கிறது. தன்னுடைய இராணுவத்தினை பால்டிக் நாடுகள் மற்றும் போலந்துக்கு
முதன்முறையாக விரிவுபடுத்தி இருப்பதன் மூலம் நேட்டோ மேலும்
வலுப்படுத்தப்பட்டிருக்கிறது. அது தன்னுடைய இராணுவப் பிரிவுகளை பால்டிக்
நாடுகளுக்கு அனுப்பி, உக்ரைனில் தீவிரமானமுறையில்
தலையிட்டுக்கொண்டிருக்கிறது. இந்நிகழ்ச்சிப் போக்குகள் அனைத்தும் தன்னை
நோக்கிக் குறிவைத்து மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவே ரஷ்யா மிகச்சரியான
முறையில் பார்க்கிறது. அமெரிக்க ஏகாதிபத்தியம், “சீனாவைக்
கட்டுக்குள்வைத்திருக்கும்” (“Containment of China”) போர்த்தந்திர நோக்கத்தை
மூர்க்கத்தனமான முறையில் பின்பற்றுவது தொடர்கிறது. சோசலிச நாடுகளுக்கு
எதிரான அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் மூர்க்கத்தனமான நடவடிக்கைகள்,
ஏகாதிபத்தியத்திற்கும் சோசலிசத்திற்கும் இடையேயான தற்போதைய சகாப்தத்தின்
மையமான முரண்பாட்டை தீவிரப்படுத்தியுள்ளது.

-க.நிருபன் (ஆகஸ்ட்2018)

No comments:

Post a Comment

உலகை அதிரவைத்த மக்கள் சீனத்தின்செயற்கை நுண்ணறிவு டீப் சீக் (Deep seek)

உலகை அதிரவைத்த மக்கள் சீனத்தின்  செயற்கை நுண்ணறிவு டீப் சீக் (Deep seek) செயற்கை நுண்ணறிவு (artificial intelligence) துறையில் பேராதிக்கம் செ...