Saturday, March 9, 2019

தேசிய அரசியல் நிலைமை - 2018

இந்திய அரசியல் வரலாற்றில் முன் எப்போதும் இல்லாத அளவிற்கு மக்களின் துன்பதுயரம் மிகவும்
அதிகரித்துள்ளது. மத்திய பிஜேபி அரசு வெறும் 31% சதமான ஓட்டுகளை மட்டுமே பெற்று தேர்தல்
ஜூம்லா (பொய் பித்தலாட்டம்) மூலம் பத்தாயிரம் கோடி தேர்தல் செலவு செய்து ஆட்சிக்கு வந்தது.
ஆட்சிக்கு வந்தது முதல்  டிஜிட்டல் இந்தியா, ஸ்டான்ட் அப் இந்தியா, மேக் இன் இந்தியா, மேட் இன்
இந்தியா, கேஷ்லெஸ் எகானமி, ஜி.எஸ்.டி, பணமதிப்பு நீக்கம் போன்ற நூற்றுக்கணக்கான பெயர்களையும்,
திட்டங்களையும் தீட்டி மக்களை நடுத்தெருவில் நிறுத்தியுள்ளது. மாட்டுக்கறி உண்ண தடை, கருத்து
சுதந்திரம் பறிப்பு, கர்வாபசி, லவ் ஜிகாத், ரோமியோ எதிர்ப்பு படை போன்ற கலாச்சார நடவடிக்கைகளால்
இதுவரை நூற்றுக்கணக்கான மக்களை கொன்று குவித்துள்ளது. கோவிந்த் பன்சாரே, நரேந்தர தபோல்கர்,
கல்புர்கி, கௌரி லங்கேஷ் போன்ற எழுத்தாளர்களை படுகொலை செய்துள்ளது. கல்வியில் காவிமய
மதவாத சிந்தனையை புகுத்தி தலித் மற்றும் சிறுபான்மை இன மாணவர்களை கொலை செய்துவருகிறது.
ரோஹித் வெமுலா, நஜீப், திருப்பூர் சரவணன், சேலம் முத்துக் குமார் போன்ற எண்ணற்ற மாணவர்கள்
இப்பட்டியலில் அடங்குவார்கள்.
இந்திய தேசம் எல்லா வளங்களையும் கொண்டு மனித வளங்களையும் அதிக இளைஞர்களையும்
தன்னகத்தே கொண்ட நாடாகும். ஆனால் நமது வளங்களை எல்லாம் கார்ப்பரேட் முதலாளிகள்
சூறையாடவும், மனித வளத்தை முறையாக பயன்படுத்தாத நாடாகவுமே இருந்து வருகிறது. ஒரு புறம்
இந்திய மக்களில் 1% சதம் மட்டுமே உள்ள பெரும் பணக்காரர்கள் இந்தியாவின் 70% சத சொத்துகளை
குவித்து வைத்துள்ளனர். மறுபுறம் 37% மக்கள் ஒரு நாளைக்கு 33 ரூபாய்க்கும் குறைவாக சம்பாதிக்கும்,
வறுமை கோட்டிற்கும் கீழே வாழும் தேசமாகவே நம் இந்தியா உள்ளது. ஐந்தாண்டு திட்டங்களையும் திட்ட
கமிஷனையும் கலைத்து நிதி ஆயோக் என்ற பெயரில் மக்கள் பயன்படுத்தும் ரேசன் கடைகளை மூடுவது
துவங்கி வங்கி, இன்சூரன்ஸ், ரயில்வே, போக்குவரத்து, சுகாதாரம் என அனைத்தையும் 100% தனியார்
முதலாளிகள் வசம் ஒப்பட்டைத்து வருகிறது.
லலித் மோடிக்கு 7 ஆயிரம் கோடி, விஜய் மல்லையாவுக்கு, 10,000 கோடி, நீரவ் மோடிக்கு 12
ஆயிரம் கோடிகளை வாரி வழங்கியுள்ள இந்திய அரசு சாதாரண ஏழை மாணவனுக்கு சில ஆயிரம் கடனை
கொடுக்க ஆயிரம் விதிமுறைகளையும், வாங்கிய கடனை திருப்பி செலுத்தாவிட்டால் ரிலையன்ஸ்
அடியாட்களை வைத்து துன்புறுத்தி தற்கொலையும் செய்ய வைக்கிறது. பெட்ரோல் டீசல் விலை

நிர்ணயத்தை முதலாளிகளே தீர்மானிக்கலாம் என்றதும் தினமும் விலை ஏறிவருகிறது. இதனால்
அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றம் மிகக் கடுமையாக உயர்ந்து வருகிறது.
இந்திய நாட்டின் நாடாளுமன்றத்தை துளியளவும் மதிக்காத பிரதமர் மோடி அவர்கள் உலகம்
முழுவதும் முதலாளிகளின் வியாபார பேரம் பேச ஊர்ச்சுற்றி வருகிறார். மேலும் மோடி அரசு கோவா,
மணிப்பூர், மேகாலயா போன்ற மாநிலத்தில் சூழ்ச்சி செய்து ஆட்சியமைப்பது, திரிபுராவில் காங்கிரஸ்
கட்சியை விலைக்கு வாங்கி ஆட்சியமைப்பது, லெனின், அம்பேத்கர், பெரியார், பூலே சிலைகளை
தகர்ப்பது, காஷ்மீர் ஆட்சியை கலைப்பது, தலித் மக்களின் வன்கொடுமை பாதுகாப்பு சட்டத்தை நீர்த்து
போகச் செய்வது, சிறுபான்மையினரின்  அனைத்து உரிமைகளையும் பறிப்பது, பழங்குடியின மக்களை
காட்டை விட்டு துரத்துவது, கவர்னர்களை கொண்டு மாநில உரிமைகளை பறிப்பது போன்ற ஜனநாயக
விரோத செயலில் ஈடுபட்டு வருகிறார். கார்ப்பரேட் சாமியார்கள் பன்னாட்டு முதலாளிகளுக்கு லாபி
செய்யும் பணிக்காக நமது அரசாங்கம் அவர்களுக்கு மக்கள் வாழ்விடத்தையும், இயற்கை வளத்தையும்
அழித்து சொகுசு குடியிருப்புகளை கட்டிக்கொள்ள அனுமதியளிக்கிறது.
சில்லறை வர்த்தகத்தை ஒழிப்பதற்காக தற்போது பணமில்லா வர்த்தகத்தையும், பணமதிப்புநீக்கம்
எனும் முட்டாள் தனமான அறிவிப்பையும் மத்திய அரசு அறிவித்தது. வங்கியில் குறைந்தபட்சம் இருப்பு
தொகையை ஐந்தாயிரமாக உயர்த்தி அறிவித்துள்ளது. மேலும் பணம் எடுக்கவும் போடுவதற்கும் கூட
கட்டணம் அறிவித்தது மட்டுமல்லாமல் இது ஒருலட்சத்திற்கு மேல் வங்கி இருப்பில்
வைத்திருப்பவர்களுக்கு பொருந்தாது என அறிவித்திருப்பது மக்கள் மீதான நேரடிதாக்குதல் ஆகும்.
பிராந்திய முதலாளித்துவ கட்சிகள் இந்திய முதலாளித்துவ கட்சிகளோடு இணைந்து தங்கள் சொந்த
பொருளாதார வளர்ச்சியை பாதுகாத்துகொள்ள எதை வேண்டுமானாலும் செய்வதற்கு தயாராகவுள்ளது.
மத்திய அரசின் மதவாத கொள்கைக்கு எதிராகவும் பொருளாதார கொள்கைக்கு எதிராகவும் எந்தவொரு
முதலாளித்துவ கட்சிகளும் குரல்கொடுக்க தயாராக இல்லை. ஆனால் மக்கள் மத்தியில் இந்த
கொள்கைகளுக்கு எதிரான மனநிலை வெகுவாக அதிகரித்துள்ளது.
மொத்த உள்நாட்டு உற்பத்தி  புள்ளி விவரம் மேம்பட்ட நிலையில் இருப்பதைப்போல
தொடர்ச்சியாக திருத்தம் செய்யப்பட்ட போதும், அவ்வாறான ஜி.டி.பி தொடர்வரிசைகளின்படியே, 2015-
16ல் வளர்ச்சி விகிதம் 8 சதவீதத்திலிருந்து 2017-18 க்கு 6.5 சதவீதமாக குறைந்துள்ளது. இது நான்கு
ஆண்டுகளில் மிகக் குறைந்த வளர்ச்சி விகிதம் ஆகும். சுதந்திர இந்தியாவில் முதல் தடவையாக, 2013-14
மற்றும் 2016-17 க்கு இடையில்  வேலைவாய்ப்பு முழுமையாக சுருங்கி இருப்பதாக தொழிலாளர் துறை
புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன. தற்போது ஐ.நா வே இந்தியாவின் கடந்த இரண்டாண்டு கால
பொருளாதார பின்னடைவுக்கு பணமதிப்பு நீக்க நடவடிக்கையும், ஜி.எஸ்.டி யுமே காரணம் என
கூரியுள்ளது.
பொருளாதாரத்தின் அடிப்படை துறைகளில் குறிப்பாக முறைசாரா துறைகளில்
பொருளாதார மந்தநிலை கூர்மையாக உள்ளது. மோடி ஆட்சியின் முதல் மூன்று
ஆண்டுகளில், விவசாய மொத்த உள்நாட்டு உற்பத்தி ஆண்டுக்கு 1.7 சதவீதம் மட்டுமே
வளர்ந்தது. பொது செலவினத்தில் வெட்டுக்கள், ஆதரவு விலை குறைப்பு, அரசு
கொள்முதல் குறைப்பு, மற்றும்  இடுபொருள் ஒதுக்கீட்டை தனியார் வசம்
ஒப்படைத்து, சில முக்கிய இடுபொருட்களின் மீது அதிக மறைமுக வரி விதிப்பு
செய்ததன் விளைவாக உற்பத்தி செலவு செங்குத்தாக உயர்வு  ஆகிய காரணங்களால்
விவசாய வருமானம் கடும் வீழ்ச்சியடைந்துள்ளது. பயிர் காப்பீடு, தனியார் காப்பீட்டு
நிறுவனங்களுக்கான ஆதாயமாக மாறியுள்ள அதே நேரத்தில், பரவலான பயிர்
இழப்பிற்கு காப்பீட்டு  நிவாரணம் விவசாயிகளுக்கு  மறுக்கப்படுகிறது. முறைசாரா
உற்பத்தி, ஜி.எஸ்.டி இன் அமலாக்கம் மற்றும் பண மதிப்பிழப்பு ஆகியவற்றால் மிக
மோசமாக பாதிக்கப்பட்டுள்ள தொழில்துறை பிரிவான, முறைசாரா தொழில்
உற்பத்தியில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை குறுகியகால அதிகாரப்பூர்வ

புள்ளிவிவரங்கள் சரியாகப் பிரதிபலிக்காது.   ஆனால், தொழில்துறை உற்பத்தி
குறியீட்டு எண் (IIB) போன்ற குறியீடுகளும் கூட, சில தொழில்துறை பிரிவுகளில்
வெவ்வேறு ஆண்டுகளில் ஏற்பட்ட திடீர்  வளர்ச்சி தவிர்த்து கடந்த மூன்று
ஆண்டுகளில் அடிப்படை தொழில் துறைகள் மந்தமான வளர்ச்சி தான் கண்டுள்ளன
எனக் காட்டுகின்றன
நவம்பர் 2016 ஆம் ஆண்டில் மத்திய அரசு உயர் பண மதிப்பு நீக்க  அறிவிப்பை
வெளியிட்டது. இந்த நடவடிக்கை ஊழல், கறுப்பு பணம் மற்றும் கள்ளப் பணத்தை,
பயங்கரவாதத்தை கட்டுப்படுத்தும் என்று அரசு கூறியது. பண மதிப்பிழப்பு
நடவடிக்கையால் செல்லாததான 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் 98.96 சதவீதம்
திரும்ப வந்து விட்டன என ரிசர்வ் வங்கி வெளியிட்ட தகவல்கள் கூறின. இது,
குறைந்தபட்சம் 4-5 லட்சம் கோடி ரூபாய் கருப்பு பணம் வங்கிக்குத் திரும்ப வராது
என்ற அரசின் கூற்றுகளை மறுதலித்தன. உண்மையில், பண மதிப்பிழப்பு
நடவடிக்கையால் ஏற்படும் விளைவுகளாக அரசு சொன்ன எதுவும்
நிறைவேறவில்லை.உண்மையில், கிரெடிட் / டெபிட் கார்டுகள் மற்றும் மின்-
பணப்பரிமாற்றங்களைக் கொண்ட பெரிய பெருநிறுவனங்கள் மற்றும் வங்கிகளுக்கு
நன்மை பயக்கத்தக்க ஒரு டிஜிட்டல் பொருளாதாரத்தினை ஏற்படுத்த அரசாங்கம்
உருவாக்கிய பெரு வெடிப்பு-சீர்திருத்த நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக இருந்தது.
டிஜிட்டல் பொருளாதாரம் நோக்கிய இந்த மாற்றம் என்பது நமது நிதித் துறைகளில்
வெளிநாட்டு நிறுவனங்களின் நுழைவிற்கு ஏதுவாக உள்ளது. இந்திய
பெருநிறுவனங்களுக்கு இன்னும் கூடுதலான கடன்களை வழங்குவதற்கு
வளங்களைத் திரட்டி மறைமுகமாகப் பயனளிக்கும் முயற்சி இது. யாருடைய
கடன்களை மோசமான கடன்கள் என்று அரசு தள்ளுபடி செய்ததோ, அந்த பெரு
நிறுவனங்கள் திருப்பி செலுத்தாத கடன்களால் பாதிக்கப்பட்ட வங்கிகளுக்கு மறு
முதலீடு செய்ய பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் வங்கிகளில்  செலுத்தப்பட்ட
பணம் பயன்படுத்தப்பட்டது.
ஜி.எஸ்.டி அறிமுகம் என்பது கார்ப்பரேட் ஆதரவு நடவடிக்கையாகும், இது
மக்களின் மீது சுமைகளை அதிகரிக்கும் அரசாங்கத்தின் நவீன தாராளவாத
தாக்குதலின் ஒரு பகுதியாகும். ஜி.எஸ்.டி, மாநிலங்களின் உரிமைகளை பாதித்து,
கூட்டாட்சி அமைப்பை பலவீனமாக்கி விட்டது. மேலும் மறைமுக வரி விதிப்பு
அளவு அதிகரித்துள்ளது. பொது மக்கள், சிறு, குறு நிறுவனங்கள், வர்த்தகர்கள் மற்றும்
முறைசாரா தொழில்களில் புதிய சுமைகளை ஜி.எஸ்.டி.யை சுமத்தி உள்ளது. 
தொழில்கள் மற்றும் சேவைகளின் பல்வேறு துறைகளும் மோசமாக
பாதிக்கப்பட்டுள்ளன. விவசாயம் மற்றும் அதன் சார்பு துறைகளும் ஜி.எஸ்.டி. யின்
தாக்குதலை எதிர் கொண்டுள்ளன. ஜி.எஸ்.டி பல பொருட்களின் விலைகளை
குறைத்துவிட்டது என்ற கூற்றுக்கு மாறாக, அநீதியான வரி அமைப்பு காரணமாக, பல
பொருட்களின் விலைகள் மற்றும் சேவைகளின் விலை அதிகரித்துள்ளது.
தனியார்மயமாக்கலை அமல்படுத்துவதில் முதன்மை அமைப்பாக நிதி
ஆயோக் விளங்குகிறது. அது 235 மத்திய பொதுத்துறை நிறுவனங்களில் 74
நிறுவனங்கள் மூடப்படவோ அல்லது திறன்சார் விற்பனை பாதை மூலம்

விற்கப்படவோ வேண்டும் என்று பரிந்துரைத்துள்ளது. 20 பொதுத்துறை
நிறுவனங்களுக்கு திறன்சார் முதலீடு விலக்கலை செய்ய மத்திய அமைச்சரவை
ஒப்புதல் அளித்துள்ளது. இரயில்வே, வங்கிகள் மற்றும் மின் வழங்கல் நிறுவனங்கள்
போன்ற அரசு ஏகபோகங்கள் தனியார் பங்கேற்பிற்கு திறந்து விடப்பட வேண்டும்
என்று ஆயோக் கூறியுள்ளது. அடிப்படை சேவைகளை தனியார் மயமாக்குவதன்
மூலம் நவீன தாராளமயமானது,  நீர், மின்சாரம், போக்குவரத்து, கல்வி மற்றும்
சுகாதாரம் போன்ற அனைத்து  அடிப்படை சேவைகளையும் சந்தை சரக்காக பாவிக்க
வைக்கிறது. குறிப்பாக கல்வி மற்றும் சுகாதாரம் தனியார் மயமாக்கலுக்கு இலக்காகி
உள்ளன. நிதிஆயோக், அதன் மூன்று வருட செயல்திட்டத்தின்படி சுகாதார
சேவைகளை  அனைத்து மட்டங்களிலும் தனியார்மயமாக்க விரும்புகிறது. மாவட்ட
மற்றும் தாலுகா மருத்துவ மனைகளில் தனியார் பங்கேற்பு முன்மொழியப்
பட்டுள்ளது. பொதுத்துறை-தனியார்துறை பங்கேற்பு மாதிரியின் கீழ் 50 க்கும்
குறைவான மாணவர்கள் பயிலும் அரசு பள்ளிகளை தனியார் துறைக்கு
ஒப்படைப்பதற்கு முன்மொழியப்பட்டுள்ளது.
உலகின் அதிக ஊழல் நடைபெறும் தேசமாகவும், பாலியல் பலாத்காரம் போன்ற பல
காரணங்களால் பெண்கள் வாழ தகுதியற்ற நாடாகவும், மனிதவள குறியீட்டில் 131 இடத்தில் உள்ள
நாடாகவும், வறுமையில் வாடும் மக்களை பெரும்பான்மையாக கொண்ட நாடாகவும், சுற்றுச் சூழல், கல்வி,
சுகாதாரம் என எத்தனையோ விசயங்களில் இந்திய நிலைமை ஆப்பிரிக்க நாடுகளை விட பின்தங்கியே
உள்ளது.
தற்போது இது போன்ற பல பிரச்சனைகளுக்கு எதிராக மக்கள் அதிகளவில் விழிப்புணர்வு
அடைந்து களத்தில் இறங்கி வருகிறார்கள். மகாராஷ்டிராவில் இலட்சம் விவசாயிகள் வரை நடத்திய
பிரமாண்டமான இயக்கம், தொழிலாளர், மாணவர், இளைஞர், பெண்கள், மாணவர்கள் என பலரும்
களத்தில் இறங்கியுள்ளனர். கேரளாவில் தோழர் பினராய் விஜயனின் ஆட்சி போராடும் மக்களுக்கு
உத்வேகம் கொடுத்து வருகிறது. அரசு பள்ளிகளுக்கு இரண்டு லட்சம் மாணவர்கள் வரை கூடுதலாக
தனியார் பள்ளியில் இருந்து படிக்க வரசெய்தது. மனிதக் கழிவுகளை மனிதனே அள்ளும் கொடுமைக்கு
தீர்வாக இயந்திரம் பயபடுதுவது, தலித் மக்களும் அர்ச்சகராகலாம், திருநங்கைகளுக்கு வேலைவாய்ப்பு
போன்ற எண்ணற்ற சாதனைகளை நிகழ்த்தி வருகிறது.

க.நிருபன் (ஆகஸ்ட் 2018)

No comments:

Post a Comment

உலகை அதிரவைத்த மக்கள் சீனத்தின்செயற்கை நுண்ணறிவு டீப் சீக் (Deep seek)

உலகை அதிரவைத்த மக்கள் சீனத்தின்  செயற்கை நுண்ணறிவு டீப் சீக் (Deep seek) செயற்கை நுண்ணறிவு (artificial intelligence) துறையில் பேராதிக்கம் செ...